• சகோதரி சாந்தி பொன்னு •
(செப்டம்பர் – அக்டோபர் 2026)

விடியற்காலையில் லதா தன் வீட்டு முற்றத்தைச் சுத்தம் செய்து, கழுவி, கோலமாவுப் பெட்டியை எடுத்துக்கொண்டு தரையில் மண்டியிட்டாள். அவளுடைய மனதில் தான் போடப்போகும் கோலத்தின் அழகிய தோற்றம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. அதை வேறு யாரும் அறியமாட்டார். அவள் தனது அழகான மென்மையான விரல்களினால் வெள்ளை நிற மாவை எடுத்து முதலில் ஒரு புள்ளி வைத்தாள். ஒரேயொரு புள்ளி. இந்தப் புள்ளிதான் அவள் தன் மனதில் போட்டு வைத்திருக்கும் அழகு கோலத்தின் முதற்புள்ளி. அதிலிருந்து ஆரம்பித்த புள்ளிகள் அங்கும் இங்கும் பரவி அவள் மனதிலிருந்த அழகிய வடிவத்திற்கு வழிவகுத்தன. பின்னர் நிறமூட்டப்பட்ட மாவுகளை எடுத்து இலாவகமாக, ஆனால் நேர்த்தியாகத் தூவினாள். என்ன ஆச்சரியம்! ஒரு அழகான தாமரை மலர் அவள் வீட்டு முற்றத்தில் அழகாக மலர்ந்து பரந்து விரிந்திருந்தது. அதுவரைக்கும் அவள் என்ன கோலம் போடப்போகிறாள் என்று பார்த்துநின்ற எவருக்கும் தெரியவில்லை. எல்லாம் முடிந்ததும் தன் முதுகை நிமிர்த்திக்கொண்டு எழுந்துநின்ற லதா, மலர்ந்து விரிந்திருந்த அந்தத் தாமரை மலரைப் பார்த்துப் பெருமிதம் அடைந்தாள். அந்த அழகு கோலம் அவள் வீட்டுக்கே ஒரு பெருமை சேர்த்ததுபோலத் தெரிந்தது.
ஒரு சில மணி நேரம்தான்; லதாவின் குடும்பத்தில் எரிச்சல்கொண்ட ஒருவன் ஆத்திரத்துடன் அங்கே வந்தான். ‘இவர்களுக்குக் கோலம் ஒரு கேடா’ என்று வன்மத்துடன் பேசி, அந்தக் கோலத்தைக் காலால் மிதித்து, அலங்கோலப்படுத்திவிட்டான். கோலம் அலங்கோலமானது; சிதைந்தது. லதா துக்கத்துடன் வந்து பார்த்தாள்; தாமரை மலர் சிதைந்தது மெய்தான்; ஆனால் அவள் இட்ட அந்த ஆரம்பப் புள்ளி இன்னமும் அப்படியே இருந்ததைக் கண்டாள். அவள் சோர்ந்துபோகவில்லை. அந்த இடத்தைக் கவனமாகச் சுத்தம் செய்து, அதே ஆரம்பப்புள்ளியிலிருந்து திரும்பவும் அழகான லில்லி மலர்களை கோலமிட்டாள். இது முந்தியதை விட அழகாயிருந்தது.
தேவனாகிய கர்த்தர் இட்ட முதற்புள்ளி:
தேவானாகிய கர்த்தர் தன் இருதயத்தில் நித்தியமாக பதித்திருந்த அழகான கோலத்தை ஏதேனின் தோட்டத்திலே ஒரு ஆரம்பப் புள்ளியாக இட்டார். அதிலிருந்து அழகான, சகலமும் நிறைவான ஒரு தோட்டம் உருவானது; பகை உணர்வற்ற மிருகங்கள், ஆடிப்பாடும் மயில்கள், கூவும் குயில்கள் என்றும், அற்புதமான ஊரும் பிராணிகளும் என்று ஆனந்தமாகக் காட்சி தருகின்றன. அங்கே ஒரு ஆண், அவனிலிருந்தே வருவிக்கப்பட்ட ஒரு பெண், அழகானதொரு குடும்பம். தோட்டத்தின் நடுவில் பிரத்தியேகமாக இரண்டு மரங்கள். இந்தத் தோட்டத்தைச் சுற்றிலும் ஆறுகள். தேவனாகிய கர்த்தரும் அந்த மனிதருடன் உலாவுகின்றதான ஒரு சாயங்கால காட்சி. நிகரற்ற காட்சி அது. கர்த்தர் பார்த்து ரசித்தார். அந்த மனிதரும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களுடன் காட்சி கொடுத்தனர்.
ஏதேனிலே தேவனாகிய கர்த்தர் ஒரு ஆரம்பப் புள்ளியை வைத்தார். அவருடைய இருதயத்திலே நித்திய பொக்கிஷமாய் ‘அழகிய குடும்பம்’ என்ற அழகான நேர்த்தியான கோலத்தின் வடிவமைப்பு பதித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்து ‘பரிசுத்த சந்ததி’ என்ற பரந்து விரிகின்ற ஒரு மலரைப்போன்ற ஒரு அழகு வடிவம் அவருக்குள் இருந்தது. இது வெறும் கோல மாவினால் இடப்படுகின்ற கோலம் அல்ல; தேவனுடைய கைவிரல்களின் ஒவ்வொரு அசைவும் ‘தேவன் விரும்பும் குடும்பம்’ என்ற ஒரு அழகிய குடும்பத்தில் இழையோடியிருந்தது. அந்த ஆரம்பப் புள்ளியில் தேவனாகிய கர்த்தர் நின்றிருந்தார். அவருடன் இணைந்து புருஷன், அவனுக்கேற்ற துணை என்று மூன்று பெரும் இணைந்ததான மிகவும் ஆணித்தரமான அசைக்க முடியாததான புள்ளியாக அது அமைந்தது. ‘ஆண்டவர் வாழுகின்ற குடும்பம்’ என்ற அமைப்பின் ஆரம்பப் புள்ளி இதுதான், இந்தப் புள்ளியின் பிணைப்பில் வேறு எதற்கோ எவருக்கோ இடமில்லை என்பதை விழுந்துபட்ட இந்த உலகில் இன்று வாழுகின்ற ஏராளமான குடும்பங்கள் காண முடியாதபடி அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டு விட்டனவோ என்றதொரு திகில் இப்போது உண்டாயிருக்கிறது.
குடும்ப உறவைத் தாங்கும் தூண்கள்:
மாத்திரமல்லாமல், இந்த திடமான ஆரம்பப் புள்ளி அசைக்கப்படாதபடிக்கு அந்தப் புள்ளியை இட்டவர் அதைத் தாங்கும் தூண்களைப்போல பிரிதல், இசைதல், ஒரே மாம்சமாக இணைதல் என்ற மூன்று பிரமாணங்களையும் கொடுத்தார். (ஆதி.2:24, இதன் விபரங்களை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.) அப்படியானால் இந்த மூன்றில் ஒன்று பிசகினாலென்ன, அல்லது விரிசல் ஏற்படும்படி ஏதோவொன்று இந்தப் பிணைப்புக்குள் அனுமதிக்கப்பட்டாலென்ன, தேவனாகிய கர்த்தர், புருஷன், மனைவி என்ற உறவு தடுமாறிவிடும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆரம்பப் புள்ளியிலிருந்து விரிவடையும் அழகான கோலங்கள் அநேகருக்கு மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து, அதை இட்டவருக்குச் சாட்சியாக கெம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமே தவிர, மறுதலித்துப்போவதும், சிதைக்கப்பட்டுப்போவதும் தேவசித்தமே அல்ல. என்றாலும், விரிந்து பரந்த கோலங்களின் அழகு சிதைக்கப்பட்டாலும் அந்த ஆரம்பப் புள்ளி ஒருபோதும் மாறாது, அழியாது என்பதை ஒவ்வொரு குடும்பமும் உணரவேண்டும். ஏனெனில் அது கர்த்தருடைய தீர்மானம், ஒழுங்கு.
எதிரியின் ஆயுதம்:
காலங்கள் கடந்தன. வந்தான் எதிரி! இவன் யாருக்கு எதிரி? மனிதருக்கா; இல்லை! தேவனாகிய கர்த்தருக்கு அவன் எதிரி. அவரைப்பார்க்கிலும் தன்னை உயர்த்தவேண்டும், அவரை எதிர்த்து வீழ்த்தவேண்டும், இதுவே அவனது ஒரே திட்டம்; அப்படியென்றால், அவருடைய செய்கைகள் யாவையும் வீழ்த்தவேண்டும்; அவர் அமைத்த இந்த அழகிய கோலத்தை அலங்கோலப்படுத்தவேண்டும். காட்டு ஜீவன்களில் தந்திரமான சர்ப்பத்திலிருந்து முதல் மனிதருடன், அதிலும் அந்த ஸ்திரீயுடன் அவன் தந்திரமாகவே பேசுகிறான். அந்த அழகிய நிறைவான தோட்டத்தைப் பராமரித்துப் பாதுகாக்கவேண்டிய இந்த மனிதர், வீட்டு மிருகங்கள் சந்தோஷமாக வாழுகின்ற தோட்டத்துள் ஒரு காட்டு மிருகம் நுழைந்தபோதே எச்சரிப்படைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்களது பாதுகாக்கும் பணியை அலட்சியம் செய்துவிட்டனர். எதிரி நுழைந்துவிட்டான். அதன் பின்னர் நடந்ததெல்லாம் கிறிஸ்தவர்கள் நமக்கு மிகவும் பரிச்சயமான காரியம். எதிரி பெரிய போர் செய்யவில்லை; இடிமுழக்க சத்தமிடவில்லை, பயமுறுத்தவுமில்லை; அவன் எடுத்ததோ ‘பெருமை’ என்ற ஒரேயொரு துடைப்பம்தான்.
‘பெருமை’ என்ற விஷஊசியை, தமது ‘வாயின் வார்த்தை’ என்ற ஆயுத நுனியில் சொருகி, ‘ஆசை’ என்ற அழுக்கு நீரை வீசி அடித்தான் சாத்தான். அழகிய கோலம் அலங்கோலமானது. ஆனால் கர்த்தர் தோற்றுப்போவாரா? அந்த ஆரம்பப் புள்ளி இன்னும் அழியாதிருப்பதை எதிரி கவனிக்கவில்லை; தேவன் அமைத்த அழகிய கோலத்தின் மையப்புள்ளியாகிய தாழ்மையை, அது பார்ப்பதற்கு அமைதியானதாகத் தெரிந்தாலும் அக்கினிபோல எழுந்து பெருமையை அழித்துவிடும் என்பதை இந்த எதிரி மறந்துவிட்டான். அவன் விதைத்ததான பெருமைப்படவைக்கும் தீய வார்த்தையை நிர்மூலமாக்குகின்ற தாழ்மையின் கோலமாகிய நித்திய வார்த்தையாகிய கிறிஸ்துவை அவன் சிந்தித்துப்பார்க்கவில்லை.
இன்று ஏன் இந்த நிலைமை?
இப்படியிருக்க இன்று ஏராளமான குடும்பங்கள் கர்த்தர் இட்ட அந்த ஆரம்பப் புள்ளியையே சிதைத்து, அலங்கோலமாகிவிட்டிருப்பது யார் குற்றம்? அதை சாத்தான் செய்தானா? இல்லை, சுதந்திரமும் சுயசித்தமும் கொண்ட மனிதன் செய்தானா? முதலில், அன்று தேவனாகிய கர்த்தரே மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கண்டு அவனிலிருந்தே அவனுக்கான துணையைப் படைத்துக்கொடுத்தார். ஆனால் இன்று வாழ்வுக்கான துணையைத் தெரிந்தெடுக்கும் முக்கிய விஷயமே முற்றிலும் மாறிவிட்டது. ஒன்று, காதலா கவர்ச்சியா என்றுகூடப் பிரித்துப்பார்த்து விழிப்படைய முடியாதபடிக்கு இன்றைய இளைய தலைமுறையினர் ஒருவித மயக்கத்தில் இருக்கிறார்கள். கேட்டால் ஆயிரம் காரணங்கள். இன்னொரு புறம் கலியாண புரோக்கர்கள் காலம் போய், இன்று வலைத்தளமே ஜோடியைத் தேடிக்கொடுக்க முன் வந்திருக்கிறது. அதன் அழுங்குப் பிடியில் இன்றைய தலைமுறையினர், விசேஷமாக மனதுக்குப் பிடித்தபடி காதல் எதுவும் அமையாத மூத்த இளைஞர்கள் அகப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. வலைத்தளத்தில் பல திருமண சேவைகள், அதில் பெயரையும் விபரங்களையும் பதித்துவைத்துவிட்டால் போதும். இது தவறு என்று சொல்லமுடியாதது ஒருபுறம் இருந்தாலும், வலைத்தளம் தெரிந்துகொடுக்கும் மணப்பெண்ணோ மணமகனோ தேவசித்தத்துக்கு அமைந்தவரா என்பதைப் பகுத்தறியும் பொறுமையும் ஆற்றலும் இன்றைய இளையவர்களிடம் உண்டோ என்பதுவும் சந்தேகம்தான். மேலும், காதல் திருமணமா? பெற்றோரினால் ஒழுங்குபண்ணும் திருமணமா? எது சரி என்ற விவாதங்களும், ‘என் வாழ்வை நான்தானே நிச்சயம் பண்ணவேண்டும்’, ‘இது என் வாழ்வு’ என்று பெற்றோருக்குப் பாடம் எடுக்கும் பிள்ளைகளும் இன்று எழும்பிவிட்டனர். இன்றைய பெற்றோருக்கு, அவர்களது பெற்றோர்த் துவத்தையே மறக்கச் செய்யும் இளைய தலை முறையினர் அதில் வெற்றியும் கண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.
அடுத்தது, பேசிப்பழகிப் பார்க்கவேண்டும் என்பார்கள்; பின்னர் ஒருநாள் முழுவதும் ஒன்றாயிருந்து பார்க்கவேண்டும் என்பார்கள். இதைத் தொடர்ந்து இன்னும் என்னென்ன வருமோ யார் அறிவார்? இதன் உச்சக்கட்டமாக, திருமணம் என்று முடிச்சுப் போடாமல், இலகுவில் விட்டு விலகத்தக்கதும், வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டதுமான ‘சேர்ந்து வாழும் வாழ்வு’ என்ற கலாச்சாரம் இன்று நமது நாட்டுக்குள்ளும் ஊடுருவியிருப்பதையும் மறுக்கமுடியாது.
விவாகம் ஒருநாள் வாழ்வு அல்ல:
திருமண வாழ்வு ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று முன்னோர் சொன்னதெல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு பொருட்டே இல்லை. மரணம் பிரிக்கும்வரைக்கும் பிரியாது ஒன்றிணைந்து ஒரு மனதுடன் வாழவேண்டிய இந்த ஒப்பற்ற வாழ்வை, ‘வைபவம்’ என்ற பெயரில் ஒரேநாளில் வாழ்ந்து முடித்துவிடத் துடிப்பவர்கள் இன்று ஏராளம். இதன் விளைவாக ஆரவாரமான திருமண வைபவங்களும், நவீனமயமான கொண்டாட்டங்களும், கேட்டால், ‘வாழ்வில் ஒருமுறைதானே’ என்ற சாக்குப்போக்கும் சொல்லிமுடியாது! இங்கே பணமும், செல்வாக்கும், போட்டி மனப்பான்மையும் நுழைந்து விளையாடும்.
பிரியமானவர்களே, இவற்றையெல்லாம், ஒரு கட்டுரையாக எழுதித்தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற அவசியமே இல்லை. இன்று மனிதன், அதாவது நாம் அறிவிலும் புத்தி கூர்மையிலும் அதிகமதிகமாக வளர்ந்துவிட்டோம். அங்கேதான் ‘பெருமை’ நம்மையும் அறியாமல் நமக்குள் புகுந்துகொண்டு, ‘நானே எனக்குரியதைத் தீர்மானிப்பேன்’ என்ற முதல் மனிதரின் பாவத்தினால் நம்மை மூடிக்கொள்கிறது. அன்று மனிதன் பெருமையினால் பீடிக்கப்பட்டு, தேவசந்நிதானத்திலிருந்து விலக்கப்பட்டுப்போனாலும், தேவனால் இணைக்கப்பட்ட ஆதாம் ஏவாளின் திருமண பந்தத்தின் சந்ததி மாசடைந்ததே தவிர, முறிந்தது என்று வேதம் சொல்ல வில்லை. ஆனால் இன்று நடப்பது என்ன?
விவஸ்தையற்ற விவாகரத்துக்கள்:
முன்னரெல்லாம், விவாக சம்மந்தங்கள், விவாகமாகி முதல் வருடத்தில், அல்லது ஐந்து வருடங்களில்தான் அநேகமாக முறிந்துவிடுவது இயல்பாக இருந்தது. இதுவே துக்கத்துக்குரியது என்றால் இன்றைய கொடுமை சொல்லிமுடியாது. இன்று, அநேக ஆண்டுகள் கூடிவாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அவர்களும் வளர்ந்து… இப்படியாக குடும்பம் கட்டப்பட்டு வளர்ந்தபிற்பாடு, அதாவது அழகிய கோலமாக குடும்பம் கட்டப்பட்ட பிற்பாடு, 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என்று வாழ்ந்தபின்னர் குடும்பங்கள் பிரிகின்றனவே, இதை என்ன சொல்ல! காரணங்களையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த வரிசையில் முதல் நிற்பது சந்தேகம், வாழ்ந்தபிற்பாடும் ஒரு சந்தேகம்; முதிர்ந்து வருகின்ற வயதிலும் ஒரு சந்தேகம்! ஆனால் இந்த சந்தேகம் அப்போதுதான் உண்டானது என்று சொல்லுவதற்கில்லை. எந்தப் பாவமும் திடீர் விஜயம் செய்வதில்லை. சிறிது சிறிதாக ஆரம்பித்து பின்னர் வெளியே வெடித்து வரும்போது குடும்பம் சிதறிவிடுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான் என்பதை எந்த சுயநல பெற்றோர் உணருகின்றனர்
இன்னும் பல காரணங்களை எடுத்துக்கூறலாம். ஆனால் அவற்றிலெல்லாம் முன் இடத்தை எடுத்திருப்பது, திருப்தியற்ற பாலியல் விஷயங்கள். இந்தப் பெலவீனத்தைக் காண்கின்ற சத்துரு, அதற்கேற்ற மருந்து கொடுப்பதுபோல காய்களை நகர்த்துவான். பின்னர் என்னவாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமே அல்ல. விபசாரம் என்ற நஞ்சு குடும்பங்களை சிதைத்துவிடுகிறது. குடும்பம் என்ற அழகிய கோலம் கேலிக்கூத்தாகிவிடுகிறது. இப்படி அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் துக்கத்துக்குரிய முக்கிய விஷயம் என்னவெனில், அதிக விவாகரத்துக்கள், அதாவது கர்த்தருடைய சந்நிதானத்தில் ஒன்றாக்கப்பட்ட விவாகங்கள் ரத்தாவது அதிகமாக கிறிஸ்தவ குடும்பங்களில்தான் என்றால் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.
யாருக்கு அதிக வேதனை?
ஆனால் இங்கே அதிகமாக வேதனைப்படுவது யார் தெரியுமா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? உறவினர்களா? சபையா? சமுதாயமா? இவர்கள் யாவரும் பாதிக்கப்படுவதும் காயப்படுவதும் உண்மைதான். ஆனால் அதிலும் மேலாக துயரப்படுகிறவர் நமது ஆண்டவர்தான் என்பதை யார் உணருகிறோம்? ‘…கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. அவர் ஒருவனையல்லவா படைத்தார்; ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவ பக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதில் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்ற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப் பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம் பண்ணாமல் உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ (மல்கியா 2:14-16).
இன்று ஆண்டவரும் நமது மணவாளனுமாகிய கிறிஸ்து, தமது மேன்மைகள் யாவையும் பிதாவின் மடியையும் விட்டுப் பிரிந்து, உலகிற்கு வந்து, தம்மை விட்டுப் பிரிந்துநிற்கிற மணவாட்டியைக் கட்டிப் போட்ட பாவசங்கலியை உடைத்தெறிந்து, தமது மணவாட்டியை மீட்டெடுத்துத் தம்முடன் சேர்த்துக் கொள்வதற்காகவே தமது விலாவில் வடிந்த கடைசி சொட்டு இரத்தத்தையும் தண்ணீரையும்கூட சிந்தினாரே! ‘எனக்காக’ ‘நம் ஒவ்வொருவருக்குமாக’ நம் ஒவ்வொருவரையும் தம்முடன் சேர்த்துக் கொள்வதற்காகவென்றே, கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் ஈந்தாரே. இதற்கு மிஞ்சி நமக்கு என்னதான் வேண்டும். இறுதியில் மணவாளனுடன் நித்தியமாய் இணைக்கப்படுகின்ற கிருபையை கிருபையாய் பெற்றிருக்கிற நாம், நமக்காகத் தம்மைத் தாமே பலியாக்கிய கிறிஸ்துவை, அவருடைய தூய அன்பை நினைந்தாவது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டாமோ!
கிறிஸ்தவ விவாகம் சற்று வித்தியாசமானது, வேறுபட்டது. இந்த விவாகம் வெறுமனே ஒரு திருமணம் அல்ல; இது ‘பரிசுத்த விவாகம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதாவது இந்த உலகத்தில் அது வேறுபட்டது, வித்தியாசமானது, தேவனுக்கு மகிமை சேர்ப்பது. இந்த உலகில் நிகழுகின்ற ஒவ்வொரு விவாக வைபவமும், ‘அந்த நாளின்’ கலியாண விருந்துக்கு மாதிரியாக அமையவேண்டும்! ஒவ்வொரு விவாக உறவும் மாசற்ற உறவாக, கிறிஸ்துவுடனான நமது உறவுக்கு சாட்சியாக அமையவேண்டும்!
வீணான காரியங்களை விட்டெறிந்துவிடுவோம். என்னதான் தடைகள் சந்தேகங்கள் பிரச்சனைகள் நேரிட்டாலும், எதுவும் கர்த்தருக்குக் கடினம் அல்ல. வேறுபட்ட மனஉணர்வு இருந்தாலும், ஒருவிசை இருவரும் ஒன்றிணைந்து தேவபாதத்தில் அமர்ந்தால் அவர் நிச்சயம் பதில் தருவார். அதில் சந்தேகம் வேண்டாம். விவாக தெரிவிலும் சரி, விவாக வைபவத்திலும் சரி, விவாக உறவிலும் சரி, விவாக உறவுக்கு உறுதிகொடுக்கும் பாலியல் விஷயங்களிலும் சரி, கர்த்தர் இட்ட முதற்புள்ளி இன்னமும் உறுதியாயிருக்கிறது என்பதை மனதில் கொண்டு, ‘ஆண்டவரே, நீர் இட்ட அழகான கோலத்தைத் திருத்தித்தாரும் அல்லது புதுப்பித்துத்தாரும்’ என்று மனதார வேண்டுதல் செய்யும்போது, கர்த்தர் நிச்சயம் தமது மனதில் உங்களுக்காக நியமித்த அழகிய கோலத்தை அலங்காரமாக்கி உங்களை உலகுக்கு முன்பாக உயர்த்தி வைப்பார். கர்த்தர் இட்ட ஆரம்பப் புள்ளி இன்னமும் இருக்கிறது. தைரியத்துடன் அவர்பாதம் பணிவோமாக. குடும்ப உறவுகள் ஒவ்வொன்றும் கர்த்தருக்கு மகிமையாக உயர்ந்து நிற்க கர்த்தர்தாமே கிருபை புரிவாராக.