சத்திய வசனம் பங்காளர் மடல்

(செப்டம்பர் – அக்டோபர் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

மீட்பர் இயேசுவின் இன்ப இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செப்டம்பர் அக்டோபர் மாத சத்தியவசன சஞ்சிகையை பங்காளர்களுக்கு அனுப்பிவைக்க கிருபை செய்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். கடந்த நாட்களில் நேபாளத்திற்கு நேரிட்ட சம்பவங்களையும் பேரழிவுகளையும் செய்திகளில் பார்த்தோம். இன்னும் அநேக இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினாலே விளைநிலங்கள் நாசமாயின. அநேக இடங்களில் போதிய பருவமழை இல்லை. யுத்தங்களும் முடிந்தபாடில்லை. உலகின் கடைசிநிமிடங்களுக்குள் வந்திருக்கும் நாம் அன்றாடம் கேள்விப்படும் செய்திகளுக்காக திறப்பிலே நின்று ஜெபிப்போம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேதுரு 3:9). ஆகவே ஜெபத்தில் விழித்திருந்து கர்த்தருடைய வருகைக்கு எப்போதும் ஆயத்தமாயிருப்போம்.

கடந்த மாதத்தில் சத்தியவசன அலுவலகத்தை இடமாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முகவரி மாற்றத்தைத் தெரியப்படுத்தியுள்ளோம். ஜெப விண்ணப்பகடிதங்கள், காசோலை, வேதாகமப்புதிருக்கான பதில்களை அனுப்பும் பங்காளர்கள் மாற்றத்தை கவனித்து புதிய முகவரிக்கு அனுப்ப அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன தொலைக்காட்சி ஊழியங்கள், பத்திரிக்கை ஊழியங்கள் அனைத்து ஊடகப்பணி ஊழியங்களுக்காகவும் ஜெபிக்க மறவாதீர்கள்.

இவ்விதழில் அழகிய கோலங்கள் அலங்கோலமாகலாமா? என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புக்கட்டுரையும், பழைய ஏற்பாட்டு வேதபாடமாக அருள்திரு இராபர்ட் ரீட் அவர்கள் எழுதிய சிறிய தீர்க்கதரிசிகளைக் குறித்த வரிசையில் யோனா தீர்க்கதரிசி வேதபாடத்தின் தொடர்ச்சியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம் பெற்றுள்ளது, மேலும் நானே நல்ல மேய்ப்பன் என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. வேதாகமப் புதிர் எண் 21,22 ஆகிய புதிருக்கான பதில்கள் வெளிவந்துள்ளன. வேதாகமப் புதிரில் உற்சாகமாக பங்குபெறும் அனைவருக்காகவும் ஆண்டவரைத் துதிக்கிறோம். பங்குபெறும் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சஞ்சிகையில் வெளிவரும் செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாயிருக்கவும் ஜெபிக்கிறோம்.

A.ஜான் துரை

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்.