அறிமுகம்: தீர்க்கதரிசிகளின் சிறிய புத்தகங்கள்
• அருள்திரு. ராபர்ட் ரீட் •
(செப்டம்பர் – அக்டோபர் 2026)
கடமையை விட்டு ஓடின தீர்க்கதரிசி
கர்த்தர் தன் ஊழியக்காரனான யோனாவை இரண்டாந்தரம் தன் கட்டளையை நிறைவேற்றக் கூறினார் (3:1-4). இம்முறை அவன் கீழ்ப்படிந்தான். அவன் பிரசங்கித்தபோது, வேறே எந்த சுவிசேஷகனும் கண்டிராத மக்களின் செவிகொடுத்தலை அவன் கண்டான். ஒரு முழுபட்டணமும் மனந்திரும்பி, நீதியின் பாதைக்குத் திரும்புவதைக் கண்டான். அது சாதாரண ஜனங்களில் ஆரம்பித்து முடிவில் ராஜாவையே எட்டிற்று. யோனாவின் பிரசங்கத்தின் மூலமாக அந்த ஜனங்கள், கர்த்தர் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதையும், தாங்கள் பாவங்களில் எவ்வளவு மூழ்கினவர்கள் என்பதையும் மனக் கண்களால் கண்டார்கள். யோனாவால் தடுக்க முடியாத பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் நினிவே பட்டணத்தின் ஜனங்கள் எல்லாரும் கர்த்தரிடத்திற்குத் திரும்பினார்கள். இது கர்த்தருக்கு அதிகப் பிரியமாயிருந்ததினால், அவர் அந்தப் பட்டணத்தைத் தண்டிக்காமல் அதை இரட்சிப்பதற்குத் தீர்மானம் செய்தார்.
யோனா கர்த்தர் மீது கோபம் கொள்ளுகிறான் (4:1).
யோனா நினிவே பட்டணத்திற்கு சென்று சுவிசேஷப் பணியை வெற்றிகரமாக முடித்ததால் மிகவும் களிகூர்ந்திருப்பான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் கர்த்தர் மீது எரிச்சலுற்றவனானான். யோனா ஏன் கோபமாயிருந்தான் என்றால். மீன் வயிற்றிலிருந்து கக்கப்பட்டு, கடற்கரையிலிருந்து நினிவேக்கு அவன் வந்ததின் நோக்கம், லட்சத்து இருபதினாயிரம் மக்கள் வசித்த நினிவே பட்டணத்தை கர்த்தர் அழிப்பதைப் பார்ப்பதற்கே. கர்த்தர் தான் நினிவே பட்டணத்தை அழிக்கப்போகிறேன் என்று சொன்னபோது அவன் மிகுந்த சந்தோஷம் அடைந்தான். ”நல்லது! இன்னொரு சோதோம் கோமொரா! வான வேடிக்கைகள் மற்றெல்லாம் பார்க்கலாம்” என்று யோனா நினைத்தான். “இது மிகவும் வியக்கத்தக்கதாய் இருக்கப்போகிறது. ஏனென்றால் நான் என்னுடைய சத்துருக்களும், கர்த்தருடைய சத்துருக்களும் எரிந்துபோவதைக் காண்பேன்” என்றும் எண்ணம் கொண்டான். யோனாவின் நம்பிக்கை கீழ்வரும் வாசகத்தால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டது என்பதை மனதில் கொள்ளுங்கள்:
”நாங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சிலர்.
மற்றவர்கள் யாவரும் நாசமாவார்கள். மோட்சத்தில் உனக்கிடமில்லையே!
மோட்சம் நெருக்கி நிரம்பிவிட எங்களுக்கு
விருப்பமில்லையே!”
ஆனால் கர்த்தர் யோனாவிற்கு செவி கொடாமல் அந்த மக்களுக்கு இரட்சிப்பைஅளிக்கிறார். யோனா கர்த்தர்மேல் அதிக விசனமடைந்தவனாயிருக்கிறான்.
யோனா கர்த்தர் பேரில் ஏமாற்றம் அடைகிறான் (4:2-5)
யோனா நினிவேயிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு சிறு மலையின்மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதை சிந்தித்துப் பாருங்கள். அவன் நிமிர்ந்த வண்ணம் விறைத்தவனைப்போல உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய இருகை முட்டிகளும் இறுக மூடப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அவன் கர்த்தருக்கு கொடுத்த வேண்டிய ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது: “ஆண்டவரே. நீர் எனக்கு செவிகொடுக்க மறுக்கிறீர். நான் ஏன் தர்ஷீசுக்கு போவதற்கு பிரயாணச் சீட்டு வாங்கிக்கொண்டு, நினிவேக்குப் போகாமல் இருந்தேன் என்று உமக்கு விளங்கவில்லையா? ஆண்டவரே.நீர் என்னை நிச்சயமாய் ஏமாற்றமடையச் செய்கிறீர். உம்முடைய விரோதிகளுக்கும் என்னுடைய விரோதிகளுமான அந்த இழிவான பாதகர்களுக்கு என்னை பிரசங்கிக் கும்படி விரும்பினீர். நீர் எப்பொழுதும் மிகுந்த கிருபை யும். மன உருக்கமும். நீடிய சாந்தமும். நிறைந்த அன்பும் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். மனிதர் மனந்திரும்பினபோது நியாயத்தீர்ப்பைக் குறித்து மனம் மாறுகிறவர் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆண்டவரே, இது சரியல்ல. நான் எதிர்பார்த்த அளவிற்கு கிட்டிச் சேரவில்லை”. கர்த்தர் எப்படிப்பட்டவர் என்று யோனாவுக்கு நன்றாகத் தெரியும். அவர் மன்னிக்கிறவர், ஆனாலும் கர்த்தர் நினிவே பட்டணத்தாரை மன்னிப்பதை அவன் விரும்பவில்லை.
யோனா கர்த்தரை கட்டுப்பாடாகிய ஒரு பெட்டிக்குள் அடைத்து வைக்க முயற்சித்தான். ஏற்கனவே யாத்திராகமம் 34:6-7ல்இ கர்த்தர் தனக்கே எல்லைகளை வைத்திருந்தார்.
”கர்த்தர் இரக்கமும் கிருபையும். நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமும் உள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக்காக்கிறவர். அக்கிரமத்தையும் மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்”.
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள்மேல் கிருபையுள்ளவராகவும், அன்புள்ளவராகவும். இரக்கமுள்ளவராகவும் இருப்பதற்காக யோனா உண்மையாக நன்றியுள்ளவனாக இருந்தான். ஆனால், “ஆண்டவரே, அந்த நல்ல மனப்பான்மையை மற்றவர்களுக்கும் ஏன் காட்டுகிறீர்” என்பது அவன் கேள்வி. இவ்விதத்தில்தான் யோனா கர்த்தரை கட்டுப்பாடாகிய பெட்டிக்குள் அடக்கி வைக்க முயன்றான்.
யோனாவைப் பற்றி கடைசியாக 4:9ல் வாசிக் கிறோம், தான் கர்த்தர்மேல் கோபமாக இருப்பதற்கு தனக்கு உசிதமான காரணம் உண்டு என்று சொல்லுகிறான். கர்த்தரோ, எனக்கு எல்லா மனிதர் மேலும் கருணையுண்டு என்று நம்மிடம் சொல்லுகிறார். இந்த உலகம் முழுவதையும் அவருக்காகவே ஆதாயம் செய்யும் உன்னத பணியில் நாம் எல்லோரும் அவரோடு சேர்ந்து ஈடுபட நம்மை அழைக்கிறார். நீங்கள் அவரை சேவிப்பதற்கு அவர் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
2) யோனாவின் மனத்தாழ்மை (2:9)
இப்போது நாம் யோனாவின் விசேஷித்த குணங்களில் நல்லதைக் கவனிப்போம். அவனை விழுங்கிய அந்த பெரிய மீனின் பயங்கரமான வயிற்றிற்குள் இருக்கும் போதுதான் இந்த நற்குணத்தைக் காண்கிறோம். அரைகுறையாய் சவைத்து விழுங்கப்பட்ட மீன்கள், பாசம், கடற்பாசி எல்லாம் அவனைச் சுற்றி சூழந்திருந்த போது, யோனோ கர்த்தரை நோக்கிக் கதறினான். ஆம், இப்போது நம்பிக்கையிழந்த மனிதனான யோனாவை சந்திக்கிறோம். ‘நான் எங்கே இருக்கிறேன்?’ இந்த பயங்கரமான இடத்தைவிட்டு எப்போதேனும் வெளியேற முடியுமா? நான் தப்பிக்கொள்வதை நம்புவதற்கு ஏதுவுண்டா?
“என்னை இரட்சிப்போர் எவரும் உண்டோ” என்று அங்கலாய்க்கிறான். ஆனால். இவ்விதக் கடுந்துயரத்தில் ஏன் ஆழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று யோனா அறிந்திருந்தான். இந்தச் சூழ்நிலை அவன் கர்த்தருக்கு விரோதமாக நடந்துகொண்டதன் விளைவுதான். யாராவது அவனை விடுவிக்கக் கூடுமானால் யாருடைய வார்த்தைகளை அவன் புறக்கணித்தானோ அந்த கர்த்தர் ஒருவரால்தான் முடியும் என்றும் அறிந்திருந்தான். கர்த்தர் மட்டும் அவனை அந்த இடத்திலிருந்து வெளியே கொண்டு சேர்த்தாரானால், அவன் தேவனுக்கு ஏதோ செய்வதாக பொருத்தனை செய்தான். இதை 2:9ல் “நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்” என்று அவன் சொல்லுவதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். பின் 3:1இல் கர்த்தர் யோனாவிடத்தில் இரண்டாந்தரம் பேசி அவனை நினிவேக்கு அனுப்புகிறார் என்று பார்க்கிறோம். இந்தத் தடவை யோனா கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான். மீன்களுடன் இருந்த சகவாசம் இனிவேண்டாம் என்று நினைத்தான்!
நீங்கள் எப்பொழுதாவது பயங்கரமான குழப்பத்தில் இருக்கும்பொழுது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு அவர் உதவி செய்யும்படி கேட்டிருக்கிறீர்களா? ஒருவேளை அது, தப்பிப்போம் என்ற நம்பிக்கையே இழந்துபோகவும், செய்வதற்கு வழியில்லாமல் திகைக்கச் செய்ததுமான ஒரு பெரிய விபத்தாய் அல்லது வியாதியாய் இருந்திருக்கலாம். உன்னுடைய நம்பிக்கையெல்லாம் இழந்த வேளையில், நீ கர்த்தரிடத்தில் அழுது ஒரு பொருத்தனையை செய்திருக்கலாம். ஒருவேளை, அதிக வேதனையால் உழன்று கொண்டிருந்த உன் குடும்பத்திலுள்ள ஒருவருடைய பக்கத்தில் உட்கார்ந்திருந்திருக்கலாம். நீ நேசிக்கிற உன் குடும்பத்தினர் பிழைப்பாரோ இல்லையோ என்று தெரியாமல் கலக்கமுற்றிருந்திருக்கலாம். நீ நம்பிக்கை யிழந்திருந்த அந்த நேரத்தில் ஆண்டவரிடத்தில் அழுது, ஆபத்திலிருந்திருந்தவரைக் காப்பாற்றும்படி கதறினாய். நீ அவரை சேவிக்கவும். ஆலயத்திற்கு ஒழுங்காய் போகவும், வேதாகமத்தை தினமும் வாசிக்கவும் அல்லது அவருடைய ஊழியத்திற்கு காணிக்கை கொடுக்கவும் பொருத்தனை செய்தாய். உன் விண்ணப்பத்தைத் கேட்டு கர்த்தர் தன்னுடைய கருணையினால் உனக்கு செவிகொடுத்து, கிரியை செய்து உன்னையோ அல்லது நீ நேசித்த உன் உறவினரையோ மரணத்திலிருந்து விடுவித்தார். நீ கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனை செய்தாய் அல்லவா அதை நீ நிறைவேற்றினாயா அல்லது. இன்னமும் நீ அவருக்குக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்றுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறாயா?
சங்கீதம் 116:12-19 வரையுள்ள வசனங்களை வாசியுங்கள். 12ம் வசனத்தில் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. “அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” அதற்குப் பதிலாக சங்கீதக்காரர் இரண்டு காரியங்களைக் கூறுகிறார். முதலாவது, அவர் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் என்று சொல்லுகிறான். நீ இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று ஒருபோதும் நம்பாமல் இருந்திருந்தால், நீ செய்ய வேண்டிய ஒரேஒரு காரியம் என்னவென்றால், அவர் உன்னை இரட்சிப்பதற்காக அவரை நோக்கிக் கூப்பிடுவதுதான். 14ம் வசனத்தில், சங்கீதக்காரர். கர்த்தர் செய்த உபகாரங்களுக்காக அவர் செய்யக் கூடிய இரண்டாவது காரியத்தைச் சொல்லுகிறார். “நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்”. 18ம் வசனத்தில் அவர் செய்யக்கூடிய இரண்டாவது காரியத்தை, திரும்பவும் சொல்லுகிறார்.
ஒரு கிறிஸ்தவன் மரித்தபோது, அவன் உறவினரை ஆறுதல்படுத்த விசுவாசிகள் அடிக்கடி உபயோகப்படுத்தும் அருமையான வார்த்தைகள் சங்கீதம் 116:15ல் அடங்கியிருக்கின்றன. பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது என்று அவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள கருத்து மெய்தான். ஆனால் சங்கீதக்காரர், மரணம் அடைந்த ஒரு விசுவாசியை அடக்கம் பண்ணுவதைக் குறித்து இங்கு எழுதவில்லை. “அருமை” என்ற வார்த்தைக்கு ‘விலையுயர்ந்த’ என்ற அர்த்தமும் உண்டு, என்று விளங்கிக்கொள்ளும்போது இந்த வசனத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்துகொள்ள முடிகிறது. ‘கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றதாயிருக்கிறது’. இந்த சத்தியம், நாம் கர்த்தருக்கு பண்ணின பொருத்தனைகளையும் வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவதுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
15ம் வசனத்தில் யாருடைய மரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா? ஒரு உண்மைக் கிறிஸ்தவனுடைய மரணத்தையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவனுடைய சுயவிருப்பத்திற்கு ஏற்படும் மரணம். புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன், நம்முடைய சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார். இது கர்த்தருடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாயிருக்கிறது. யோனா தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவேன் என்று சொன்னான். “ஆண்டவரே, நான் நினிவேக்குப் போவேன். நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீரோ அதைச் செய்வேன்” அவன் பண்ணின பொருத்தனைக்கும் அவன் கீழ்ப்படிந்ததற்கும் இடையில் ஒரு மகாப் பெரிய அடக்க ஆராதனை நடந்திருக்கும். ஏனென்றால் யோனா தன்னுடைய சுயசித்தத்தையும், கீழ்ப்படியாமையையும் சாகடித்து விட்டு ஆண்டவர் எதை அவன் செய்ய விரும்பினாரோ அதையே செய்துகொண்டிருந்தான்.
ஒரு வினாடி சிந்தித்துப் பாருங்கள்! அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தருக்குப் பொருத்தனைகள் பண்ணியிருக்கிறார்கள். அநேகர் கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்ய விரும்பி தங்களையே ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை இன்னும் நிறைவேற்றவில்லை. அநேகர் அவருக்கு கீழ்ப்படிய பொருத்தனை செய்திருக்கிறார்கள். ஆனால் அதை இன்னும் செயல் முறைக்குக் கொண்டுவரவில்லை. அநேகர், ஆண்டவர் தங்களை துயரங்களிலிருந்து காப்பாற்றினால் அவருக்காக பெரிய உத்திரவாதங்களை ஏற்றுக்கொள்ளுவதாக பொருத்தனை செய்திருந்த போதிலும் அவைகளை நிறைவேற்றவில்லை. கர்த்தர் அவர்களை விடுவித்திருக்கிறார். ஆனால் அவர்கள் கீழ்ப்படிதல் மூலம் பண்ணின பொருத்தனைகளை நிறைவேற்ற முற்படவில்லை.
யோனாவிடத்தில் காணப்பட்ட ஒரு நல்ல நடத்தை என்னவெனறால் அவன் கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைச் செய்தான், பின் கவனத்தோடு அவர் இட்ட கட்டளைக்கு கீழப்படிந்து அதை நிறைவேற்றினான்.
(தொடரும்….)
மொழியாக்கம்: Bro.Johndurai