• Dr.உட்ரோ குரோல் •
(செப்டம்பர் – அக்டோபர் 2026)

18. 1,44,000 அருட்பணியாளர்கள்

வெளிப்படுத்தல் புத்தகம் ஒரு குறியீட்டுப் புத்தகம் என்பதால் அதில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. வெறுமனே வாசிப்பதன் மூலம் நம்மால் கற்றுக்கொள்ள முடியாத அநேக விஷயங்கள் அதில் உள்ளன. நாம் அவை அனைத்தையும் சிந்திக்கவேண்டும். விவரிக்க அரிதான காரியங்களை விளக்குவதற்கு யோவான் பயன்படுத்தும் வழிமுறைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தேவ ஆவியானவர் அவரைப் பரலோகத்திற்கு எடுத்துச் சென்றார். ஆனால் சரீரப்பிரகாரமாக அவர் பத்மு தீவிலேயே தங்கியிருந்தார். அவருக்கு பரலோகம் பிளந்து திறக்கப்படுகிறது, யோவானுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தரிசனம் கிடைக்கிறது. ஆனால் அவரால் அவைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தேவன் “இவைகளை எழுதி வை” என்றார். அந்த எதிர்காலம் மிகப் பயங்கரமானது என்பதை விவரிப்பதற்காக பல உருவகங்களை யோவான் பயன்படுத்துகிறார்; ஆறாம் அதிகாரத்தில் உடைக்கப்பட்ட முத்திரைகளைப் பற்றி அவர் விவரிக்க ஏராளமான உருவகங்களைப் பயன்படுத்தினார்.

இந்த 1,44,000 என்பது ஒரு மக்கள் குழுவைக் குறிக்கிறது; அவர்கள் வெவ்வேறு 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அது குறிக்கப்படும் குழுவைப் பொறுத்து அந்த எண் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகாரம் 7, வசனம் 1 இல் உள்ள முதல் வார்த்தை “இவைகளுக்குப் பின்பு” என்று உள்ளது. இப்புத்தகத்திலுள்ள சிறிய காரியங்களை நாம் தவறவிட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவைகளுக்குப் பின்பு என்றால், ‘ஆறு முத்திரைகள் உடைக்கப்பட்ட பிறகு’ என்று பொருள். இயேசு சுருளைத் திறந்து முதல் முத்திரையை உடைக்கிறார். இவ்வாறு ஆறு முத்திரைகளை அவர் உடைக்கிறார். அதற்குப் பின்பு, அதாவது ஏழாவது முத்திரையை உடைப்பதற்கு முன்பதாக முக்கியமான நிகழ்வு நடக்கவிருந்தது. “இதோ இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாத படிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந் திசையிலிருந்து ஏறி வரக் கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்” (வெளி.7:1-3).

நமது பிள்ளைகளின் தவறுகளை பெற்றோராக திருத்தும்பொழுது அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். அவர்கள் ஒருவேளை தூங்கும் முன்பதாக ஏழு கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு பழகியிருப்பர். அவர்களைத் தண்டிப்பதற்காக “இதனால் உனக்கு இன்று ஒரு ஐஸ்கிரீம் கிடையாது. அவைகளை நான் மூடிவைத்துவிட்டேன்” என்று சொல்லுவது, அவர்களை சீர்படுத்துவதற்காகவே என்பது அவர்களுக்கும் தெரியும். இங்கே அந்த சீர்திருத்த நடவடிக்கைதான் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு வகையான நியாயத்தீர்ப்புகளைக் கொண்ட சுருளின் ஏழு முத்திரைகள் உடைக்கப்படுகின்றன. கடைசி முத்திரையை உடைக்குமுன்பதாக நான்கு மூலைகளிலிருந்தும் காற்றுகளைப் பிடித்துவைத்திருக்கும் தூதர்களிடம், “நான் தேவனுடைய ஊழியர்களின் நெற்றிகளில் முத்திரையிடும் வரை காற்றுகளை அவிழ்த்துவிடாதீர்கள்” என்று முத்திரைக் கோலையுடைய தூதன் கூறுகிறான்.

நீங்கள் அனைவரும் ‘Left behind’ புத்தகங்களைப் படித்திருப்பீர்கள்; அல்லது தங்களது நெற்றியில் 666 என்ற எண்ணை முத்திரையாக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்ற தீர்க்கதரிசனங்களை அறிந்திருப்பீர்கள். ஏழாவது முத்திரை திறக்கப்படும் முன்னரும் சில நியாயத்தீர்ப்புகள் வரும். ஆகவே “என் ஊழியக்காரர்களே, நான் உங்களை முத்திரையிட வேண்டும்” என்று கூறுகிறார்.

இந்த ஊழியர்கள் யார்? வசனம் 4 இல் “இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்”. இந்த மக்கள் யார் என்பதை வசனம் 5 முதல் 9 வரை குறிப்பிட்டுள்ளது. யூதா கோத்திரம், ரூபன் கோத்திரம், காத் கோத்திரம், ஆசேர், நப்தலி, மனாசே, சிமியோன், லேவி, இசக்கார், செபுலோன், யோசேப்பு மற்றும் பென்யமீன்.

யாக்கோபின் குமாரர்களில் யோசேப்புடன் தொடர்புடைய கடைசி நபர் பென்யமீன். அனைவரிலும் யோசேப்பே மிகவும் விரும்பப்பட்டவர். ஆனால் மூத்தமகனான ரூபன் யூதாவுக்குப் பிறகே குறிப்பிடப்படுகிறார். தனது விபசாரம் மற்றும் சில பாவத்தினிமித்தம் முதலிடத்தைத் தவறவிட்டார் என நான் நினைக்கிறேன். மேலும் தாண் கோத்திரமும் எப்பிராயீம் கோத்திரமும் இதில் இடம் பெறவில்லை.

விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டதால் தாண் மற்றும் எப்பிராயீம் ஆகிய இரு கோத்திரங்களும் தவிர்க்கப்பட்டுள்ளனர். தேவன் தம்முடைய நியாயத் தீர்ப்புக்கு முன்பதாக தம்முடைய பிள்ளைகளை காத்துக்கொள்ளுகிறார். யாரும் நம்மைப் பறித்துக்கொள்ள முடியாது. harpazo என்ற சொல் ‘பறித்துக்கொள்வது அல்லது பிடுங்கிக்கொள்வது’ என்று பொருள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். யோவான் 10:29 இல் ‘அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது’ என்பதில் பயன்படுத்தப்பட்ட சொல் இதுவே. இந்த மக்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருந்தும் சிலர் அவர்களை புறஜாதியார் என்று வாதிடுகின்றனர்.

உபத்திரவகாலத்தில் ஆண்டவராகிய இயேசுவை நம்பத்தொடங்கிய யூதமக்கள் அவருக்காகத் தங்களை அர்ப்பணித்த நற்செய்தியாளர்களாக மாறியிருப்பார்கள் என்பது என்னுடைய கருத்து. இவர்கள் அருட் பணியாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். மிகக்கடினமான உபத்திரவகாலத்தின் பிரதி நிதிகளாக இருப்பார்கள். நற்செய்தியைக் கேட்டும் அதை அலடசியப்படுத்துபவர்களைப் பற்றி சத்திய வேதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எடுத்துக்கொள்ளப்படுதல் நிறைவேறியவுடன் அவர்கள் சாத்தானாலும் அந்திக்கிறிஸ்துவினாலும் கட்டப்பட்டு, உபத்திரவகாலத்தில் அறிவிக்கப்படும் நற்செய்திக்கு செவிகொடுக்கமாட்டாதவர்கள்.

இதைப்பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால் 2 தெசலோனிக்கேயர் 1:7-9 ஐ வாசித்துப் பாருங்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய வல்லமையான தூதர்களுடனும் ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய ஆண்டவர் இயேசுவின் நற்செய்திக்கு கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை செலுத்தும்படிக்கு வெளிப்படுவார். அவர்கள் தேவனை அறியார்; நற்செய்திக்கு கீழ்ப்படிவதும் இல்லை. அப். பவுல் இதனை “அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

அடுத்த அதிகாரத்தில் (2 தெசலோனிக்கேயர் 2:9-12) அக்கிரமக்காரனின் வருகை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவனது வருகை எல்லா வல்லமையோடும், பொய் அடையாளங்களோடும், அற்புதங்களோடும், சகல பொல்லாத வஞ்சகத்தோடும் இருக்கும். ஏனெனில் சத்தியத்தை நேசிக்க மறுத்து, அதனால் இரட்சிக்கப்படாமல் அழிந்துபோகிறவர்களுக்கும் அது இருக்கும். ஆகையால் சத்தியத்தை நம்பாமலும், அநீதியில் பிரியப்படுகிறவர்களுக்கும் மாயையான வஞ்சகத்தை தேவன் அனுப்புவார். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குப்பின், வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் நற்செய்தியை நிராகரிக்கும் மக்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் என்று வேதாகமம் போதிப்பதில்லை. உபத்திரவகாலத்தில் இரட்சிக்கப்பட்ட 1,44,000 பேரும் இதுவரை நற்செய்தியைக் கேட்டிராதவர்கள் மீதும், அதை ஒருபோதும் நிராகரிக்காதவர்கள் மீதும் தேவன் இரக்கம் காட்டுகிறார். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குப் பிறகு யூதர்களுக்கு மட்டும் இரட்சிக்கப்பட வாய்ப்பு தரப்படும் என்று நான் கூறவில்லை. அது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன் நற்செய்தியை நிராகரிக்காத அனைவருக்கும் மட்டுமே உண்டு. இந்த 1,44,000 பேர் மாத்திரமல்ல, இன்னும் அநேகர் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக நம்புவார்கள்.

திருச்சபை எடுத்துக்கொள்ளப்படும் பொழுது, பூமியில் தேவ ஆவியானவர் இருக்கமாட்டார் என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். அப்படியானால் இம்மக்களை இரட்சிப்புக்குள் நடத்துவதில் தூய ஆவியானவரின் பங்கு யாது?

இன்று சபை பூமியில் இருப்பதாலேயே தேவ ஆவியானவரும் உலகில் இருக்கிறார். அவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்குள் வாசம் செய்கிறார். ஆனால் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ஆவியானவரும் பரலோகத்திற்குத் திரும்பிச் சென்று விடுவார். அவர் மக்களைப் பாவத்திலிருந்து விலக்கு வதற்காக அவர் பூமியிலேயே இருக்கவேண்டும் என்று பொருளாகாது. எனவே உபத்திரவக்காலத்தில், பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளின் இருதயங்களில் தமது கிரியையைத் தொடர்வார்; அதைப் பரலோகத்திலிருந்தே செய்வார்.

ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு லட்சம்பேர் கூடினால் அங்கு அதிக இரைச்சல் இருக்கும். இந்த1,44,000 தீவிர நற்செய்தியாளர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டிருக்கும்பொழுது தங்களைச் சுற்றி ஏதோ கெட்டது நடக்கிறது என்று நினைப்பார்கள். ஆறு முத்திரைகளும் திறக்கப்பட்டுவிட்டன. ஏற்கனவே அதிகமான மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்த 1,44,000 பேரும் அதிக ஒலியை எழுப்புகிறார்கள். அதைக்கேட்கும் மக்களும் அதிகமாய் இருந்திருப்பர். தேவனுடைய கோபத்தின் விளைவு எந்த நேரத்திலும் நடக்கும். ஏழாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில் “இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்” என்று எழுதியுள்ளார். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நின்றிருந்தார்கள். இவர்கள் உட்காரவில்லை, முழங்காற் படியிடவில்லை; தலைகுனியவும் இல்லை; இவர்கள் நிற்கிறார்கள். தேவனுடைய சிங்காசனத்துக்கு முன் நிற்பவர்களின் நிலை ஒவ்வொரு முறையும் மாறுகிறது. எனவேதான் நாம் எந்த சிறிய விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். இவர்கள் உரத்த சத்தமிட்டு “இரட்சிப்பு சிங்காசனத்தில் வீற்றிருக்கும் நமது தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது” என்றனர்.

இவ்வாறு இந்தக் கூற்றை நாம் கேட்பது இது முதல்முறையல்ல; தேவனைவிட்டு தூரமான வழியில் சென்ற யோனா தீர்க்கதரிசியை ஒரு பெரிய மீன் விழுங்கியது. மூன்று நாட்களுக்குப் பின் “இந்த தீர்க்கதரிசி எனக்கு வேண்டாம்” என்று வெளியே துப்பிவிட்டது. அவரது நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவருடைய தலையைச் சுற்றி கடற்பாசி சுற்றியிருந்தது. அவர் வெளியே வந்ததும் “இரட்சிப்பு கர்த்தருடையது” என்று அறிக்கையிட்டார். நாமும் இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ளப்போகிறோம். தேவனுடைய சிங்காசனத்தின்முன் நின்று இரட்சிப்பு தேவனுடையது என்பதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். மேலும் தேவதூதர்களும், மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் சிங்காசனத்தைச் சுற்றிலும் நின்று முகங்குப்புற விழுந்து தேவனை வணங்கினார்கள்.

அவர்களது வழிபாட்டைக் கவனியுங்கள்; அவர்கள் கீழே விழுகிறார்கள். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும், ஞானமும், நன்றியறிதலும், கனமும், வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” என்று சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிறார்கள். கைகளில் குருத்தோலைகள் இருக்கின்றன.

ஒலிவ மலையிலிருந்து இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு பவனியாகச் சென்றபொழுது, திரளான மக்கள் இயேசுவை நோக்கி, “தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். ஓசன்னா என்பதற்கு எங்களை இரட்சியும் என்று பொருள். இரட்சிப்பு கடவுளிடமிருந்தே வருகிறது என்று அறிவிக்கிறார்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதாலோ, முகமதியராக இருப்பதாலோ, நாத்திகராக இருப்பதாலோ இரட்சிக்கப்படுவதில்லை. இது உங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனுடன் உள்ள உறவைப் பற்றியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும்போது, கிறிஸ்தவம் ஒரு பிரத்தியேகமான மதமா இல்லையா என்பதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படமாட்டோம். வேதாகமத்தின் மூலம் தேவன் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரே வழி கிறிஸ்துவே.

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை