• Dr.வாரன் வியர்ஸ்பி •
(செப்டம்பர் – அக்டோபர் 2026)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11).
தேவனுடைய ஜனங்களுக்கு, ஆட்டு மந்தை என்பது வேதத்திலே மிகவும் தெரிந்த ஒரு உருவகமாகும். பழைய ஏற்பாட்டு விசுவாசி இவ்வாறு ஜெபித்தான். “இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவி கொடும்” (சங்.80:1). புதிய உடன்படிக்கை கிறிஸ்தவன் இயேசுவை நல்ல மேய்ப்பராக அறிந்திருக்கிறான். ஸ்தலசபை அவருடைய மந்தையாக இருக்கிறது (அப்.20:28,29). ஸ்தலமந்தையின் தலைவர் “மேய்ப்பன்” என்றைழைக்கப்படுகிறார் (எபேசி.4:11-13). மேய்ப்பன் என்ற வார்த்தை ‘உணவளித்தல் அல்லது மேய்ப்பன்’ என்ற அர்த்தம் கொள்ளும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்துள்ளது.
இஸ்ரவேல் தேசத்தில் மக்கள் தலைவர்கள் மேய்ப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் தேவனுடைய மந்தையினை விசாரிக்கிறவர்களாக இருந்தனர். துரதிஷ்டவசமாக இஸ்ரவேலின் மேய்ப்பர்களில் அனைவரும் கர்த்தருக்கோ அல்லது ஆடுகளுக்கோ உண்மை உள்ளவர்களாக இருக்கவில்லை. தீர்க்கதரிசிகள் அவர்களை எச்சரிக்க வேண்டியிருந்தது. கர்த்தர் அவர்களை நியாயம்தீர்க்க வேண்டியிருந்தது (எசேக்கியேல் 34, ஏசாயா 56:9-12). ஆடுகளை நடத்திச் செல்வதற்கு பதிலாக, அவர்களை விரட்டிச்சென்றனர். ஆடுகளை கவனித்து மேய்ப்பதற்கு பதிலாக கொள்ளையிட்டனர். கள்ள மேய்ப்பர்களைக் குறித்து இயேசு ஜனங்களை எச்சரித்தார். ஏனெனில் அவர்கள் திருடர்களும், கொள்ளைக்காரர்களும், கூலியாட்களும் போன்று சுயநலமாய், பேராசைகளோடு இருந்து மனதுருக்கத்துடன் ஊழியம் செய்வதற்குப் பதிலாக, பணஆசையும் அதிகாரமோகமும் உடையவர்களாக இருந்தனர்.
இயேசு நமது நல்ல மேய்ப்பனாவார். இதற்கு இணையான கிரேக்க வார்த்தையின் பொருள் என்னவெனில், “விருப்பமான, சிறந்த, குற்றமற்ற, புகழத்தக்க மற்றும் அழகானதாகும்”. அவர் நமக்கு தருகிற, செய்கிற எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நாம் நன்றி செலுத்துவோமாக!
அவர் நமக்காக மரித்தார்:
நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறார் (யோவான் 10:11). ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன் (வச.15). நான் என் ஜீவனை அடைந்துகொள்ளும்படிக்கு (வச.17) பழைய ஏற்பாட்டில், ஆடு மேய்ப்பனுக்காக பலிபீடத்தில் மரித்தது. புதிய உடன்பாட்டில், ஆடுகளுக்காக மேய்ப்பன் சிலுவையில் மரித்தார்! அவர் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஆழமாக அறிந்துள்ளார். பேர்சொல்லி கூப்பிடுகிறார் (வச.3). அவர் நமக்கு நித்தியஜீவனை, பரிபூரண ஜீவனைத் தருகிறார் (வச. 10,28). நமக்காக அவர் சிலுவையில் தன் ஜீவனைத் தந்திருக்கும்போது , அவர் அன்பைப்பற்றி நாம் எப்படி வினா எழுப்பக்கூடும்?
அவர் நமக்காக ஜீவிக்கிறார்:
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறி வரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென் (எபி.13:20,21). பிரதான ஆசாரியரான இயேசு, பரலோகத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். எனவே நாம் எல்லா சமயங்களிலும் கிருபாசனத்தண்டையில் சேரலாம் (4:14-16). அவர் நமக்கு முன்பாக செல்கிறார். வழியில் நம்மை நடத்துவது மட்டுமல்லாது, வழியினை செம்மை பண்ணி ஆயத்தப்படுத்துகிறார். நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் ஜீவிக்கிறார். நமக்கு ஊழியம் செய்கிறார்.
அவர் நம்மோடு பேசி நம்மை வழிநடத்துகிறார்:
யோவான் 10:3-5, 16,27 ஆகிய வேதபகுதிகளில் சத்தம் என்ற வார்த்தை ஐந்துமுறை பயன்படுத்தப் பட்டுள்ளது. வேதவாக்கியங்களின் மூலம் ஆவியானவர் நம்முடன் பேசுவதை இது குறிக்கிறது. உண்மையான விசுவாசிகளுக்கான உறுதியான அடையாளம் என்னவெனில், தேவனுடைய வார்த்தைக் குறித்து அவர்களுக்கிருக்கும் பசி, மற்றும் அவற்றை புரிந்து அவற்றிற்கு கீழ்ப்படிதலுக்கு அவர்களுக்கு இருக்கும் வாஞ்சையாகும். உண்மையான கிறிஸ்தவன், கூலியாள், திருடன் அல்லது கள்ளத்தீர்க்கதரிசியின் சத்தத்தைக் கண்டு பிடிக்கமுடியும். அவர்களுடன் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பமாட்டான். இயேசு நம்மை வார்த்தை என்னும் மிகுந்த பசுமை மிக்க மேய்ச்சலுக்கு நடத்திச் செல்ல விரும்புகிறார். ஆவிக்குரிய சத்தியத்தால் நம்மை போஷிக்க விரும்புகிறார். “ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்” (வச.3). நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு: அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும் (வச.15,16). மந்தையில் இல்லாத ஆடுகளைக் குறித்து ஒருநாள் அவர் கூறுவார், நான் உங்களை அறியேன் (மத்தேயு 7:21-23).
நமக்காக அவர் மீண்டும் வருவார்:
பேதுரு மேய்ப்பர்களுக்கும் மந்தைக்கும் இவ்வாறு எழுதுகிறார்: “அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள் (1பேதுரு 5:4).” மேய்ப்பர்களின் பணி எளிதானதல்ல. ஆனால் அதற்கேற்ற பிரதிபலன் உண்டு. மேய்ப்பனின் பணியினை கடினமாக்குகிற ஆடுகளை கர்த்தர் நியாயத்தில் கொண்டுவருவார். உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித் திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே (எபிரெயர் 13:17).
கர்வமிக்க கள்ள மேய்ப்பர்கள், பிச்சைக்காரனை நிந்தித்து தூஷித்து ஜெபஆலயத்திலிருந்து புறம்பாக்கினர். ஆனால் நல்ல மேய்ப்பன் அவனைக் கண்டு அவரின் மந்தையில் சேர்த்துக்கொண்டார் (யோவான் 9:22-38). தலைவர்கள் அற்புதத்தை கண்டனர்.ஆனால் அவர்களின் பாவங்களை அவர்கள் காணாதபடி குருடர்களாக இருந்தனர். தேவ குமாரனையும் காணாமல் குருடராயிருந்தனர். நாமும் குருடர்களாக இருக்கிறோமா?
என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்: நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார் (எசேக்கியேல் 34:31).
மொழியாக்கம்: Bro.Johndurai