தேவ ஆசீர்வாதம்
தியானம்: 2026 நவம்பர் 2 திங்கள் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 13:1-7

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, … இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; (நியாயாதி. 13:3).
அக்காலத்தில் திருமணம் முடித்த ஒரு பெண், பிள்ளை பெறாத மலடியாக இருந்தால், அவள் தேவனால் சபிக்கப்பட்டவள் அல்லது தேவன் ஏதோ காரணத்துக்காக அவள் கர்ப்பத்தை அடைத்துவைத்திருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கையிருந்தது. வேதாகமத்தில் பல இடங்களிலும் இப்படியாக எழுதப்பட்டிருப்பதையும் காணலாம்.
இங்கே மலடியாயிருந்த மனோவாவின் மனைவிக்கு ஒருநாள் தேவதூதன் தோன்றி, “மலடியாக இருக்கும் நீ ஒரு குமாரனைப் பெறுவாய்” என்று வாக்குக் கொடுத்தான். அது அவளுக்கு எவ்வளவு பெரியதொரு தேவ ஆசீர்வாதம்! எவ்வளவு மகிழ்ச்சி தரும் செய்தி! அதை அவள் உடனே தனது புருஷனுக்குத் தெரியப்படுத்துகிறாள். இருவருமாக தேவனுடைய இந்த ஆசீர்வாதத்தை நினைத்து சந்தோஷப்பட்டனர்.
இப்படியொரு காரியம் இப்போது நடப்பதில்லையென்று நீங்கள் இதை வாசிக்கும்போது யோசிக்கிறீர்களா? பிள்ளைகள் இல்லாத ஒரு தம்பதியர் வீட்டிற்கு சற்று இளைப்பாறுவதற்காகச் சென்ற தேவஊழியர் ஒருவர் அங்கிருந்து புறப்படும் முன்பதாக, அந்தத் தம்பதியினருக்குக் குழந்தைப் பாக்கியத்துக்காக ஜெபித்துவிட்டு, தனது கூட்டத்துக்குக் கடந்து சென்றுவிட்டார். இந்தத் தம்பதியினரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் முடிவுற்றதும் அந்த தேவ ஊழியர் அந்தக் குறிப்பிட்ட நபரின் மனைவியிடம் வந்து, உங்களுக்காக ஜெபித்தபோது ஆண்டவர் எனக்கு ஒரு வசனத்தைத் தந்தார் என்று சொல்லி அதை வேதாகமத்தைத் திறந்து வாசிக்கும்படிக்குச் சொன்னார். “நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தனது வாகனத்தை நோக்கி நடந்தார். அந்தப் பெண் ஓடிச்சென்று தனது கணவருக்கு விஷயத்தைச் சொல்லி, நீங்களும் போய் அவரைச் சந்தியுங்கள் என்றபோது, கணவரும் சென்று சந்தித்தார். அப்போது, அவர் “உங்கள் மனைவிக்கு வார்த்தை கொடுத்துள்ளேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். அவர்கள் அந்த வார்த்தையை வேதாகமத்தில் குறித்து வைத்துக்கொண்டு ஜெபத்தில் தரித்திருந்தனர். சரியாக ஒரு வருடகாலத்தில் அந்தப் பெண் கர்ப்பந்தரித்தாள். இது இந்தக் காலத்துச் சகோதரி ஒருவருடைய உண்மைச் சாட்சி.
பிரியமானவர்களே, நமது தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் ஆசீர்வதிக்க நினைத்தால் அதை எவராலுமே தடைசெய்ய முடியாது. உங்களது வாழ்விலும் தேவனுடைய ஆசீர்வாதத்திற்காக காத்து இருக்கிறீர்களா? நம்பிக்கையோடு ஜெபியுங்கள். தேவனுக்குச் சித்தமானால் நிச்சயம் அவர் உங்கள் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கொடுப்பார். அவரால் ஆகாதது என்று எதுவுமில்லை.
ஜெபம்: நல்ல ஆண்டவரே, நன்மையான எந்த ஈவும் ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என்ற நம்பிக்கையோடு நாங்கள் கர்த்தருக்கு காத்திருக்கிறோம். ஆமென்.