தேவ வழிநடத்துதல்
தியானம்: 2026 நவம்பர் 3 செவ்வாய் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 13:8-25

மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: … நீர் அனுப்பின மனுஷன்…..நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான் (நியா.13:8).
எவ்வளவுதான் நாம் ஜெபம்பண்ணி, ஒரு குழந்தைக்காக வேண்டிக் கொண்டாலும், பிள்ளை வயிற்றில் தங்கிவிட்டது என்று கேள்விப்பட்டதும், தேவனுக்கு நன்றி சொல்லுவோம். ஆனால் அதன் பின்னர் அதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் மருத்துவ வசதிகளைத் தேடுவதிலும்தான் நாம் நமது கவனத்தைச் செலுத்துவோம். அதுதான் உண்மையும்கூட.
ஆனால் இங்கே மனோவாவோ, தன் மனைவி வந்து சொன்னதைக் கேட்டவுடன், ஆ, ஆண்டவரே! உம்முடைய தூதன் மீண்டும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, அந்தப் பிள்ளையை எப்படியாக நாங்கள் வளர்க்க வேண்டும் என்று எங்களுக்குக் கற்பிப்பாராக என்று ஜெபிப்பதைக் காண்கிறோம். கர்த்தர் பிள்ளையைத் தந்துவிட்டார், அந்தப் பிள்ளையை அவருக்குப் பிரியமானபடி வளர்க்கவேண்டுமே என்று மனோவா அதிக அக்கறையோடு மன்றாடுவதைக் காண்கிறோம். இன்று எத்தனை பெற்றோர் இவ்வண்ணமாக நமது பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறோம்? பிள்ளைகளைக் கர்த்தருக்கு ஏற்றவர்களாய் வளர்க்க வேண்டும் என்று எத்தனைபேர் உண்மையிலேயே வாஞ்சிக்கிறோம்? இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுப் பிள்ளையோடு போட்டி போட்டுக்கொண்டு, எங்களது பிள்ளைதான் எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்கவேண்டும் என்ற நினைவோடு நமது பிள்ளைகளை வளர்க்க எத்தனிக்கிறோமா?
நாம் வாழும் இந்தக் காலம் மிகவும் பொல்லாததாய் இருக்கிறது. பிசாசானவன் ஒளியின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு வந்து நம்மை வஞ்சிப்பான். இன்று நமது நவீன காலத்தில் பிள்ளைகள் உபயோகிக்கும் எல்லா நவீன உபகரணங்களுக்குள்ளும் நன்மையும், தீமையும் கிடக்கிறது. அதை இனங் கண்டு அவற்றைப் பிரயோகிக்க நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோமா? அதிக பணம் கொடுத்து திறமையானவற்றை வாங்கிக் கொடுக்க எத்தனிக்கும் நாம், அவற்றில் இருக்கும் ஆபத்துக்களைக்குறித்து பிள்ளைகளை எச்சரிக்காமல் விட்டோமேயாகில், நாமே அவர்களைப் படுகுழிக்குள் தள்ளுகிறவர்களாய் மாறிவிடுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.
“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியில் அவனை நடத்து” என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. பிள்ளைகளுக்கு நடக்கத் தெரியாது, நாம்தான் சொல்லிக் கொடுக்கவேண்டும். பிள்ளை நடக்கத் தொடங்கியதும் அதை சரியாக நடத்தவேண்டும். காலத்தைத் தவற விடவேண்டாம். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்வோம். பிள்ளைகளைக் கர்த்தருடைய பாதையில் நடத்துவது பெற்றோரின் அதி முக்கிய கடமை. அதற்கு ஆவியானவர் துணையை நாம் கட்டாயம் நாடவேண்டும்.
ஜெபம்: “அன்பின் பிதாவே, பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் அலட்சியமாய் இருந்து விடாதபடி, அவர்களை நடத்தவேண்டிய வழியிலே நடத்த தூயஆவியானவர் உதவி செய்யும்படி தாழ்மையோடு ஜெபிக்கிறோம். ஆமென்.”