கர்த்தரின் தெரிவு
தியானம்: 2026 நவம்பர் 23 திங்கள் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 9:1-27

அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? … என்றான் (1சாமு. 9:21).
“ஆசையாக ஒருவரை விருந்துக்கு அழைத்தோம். அவர் வீட்டுக்கு வந்த நேரமுதல், உங்கள் வீடு என்ன விலைக்கு வாங்கினீர்கள், உங்களிடம் கார் உண்டா? என்ன டிவி இவ்வளவு சிறியதாக இருக்கிறதே, பெரிய டிவி வாங்கலாமே என்று தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே போனார். இவர் நமது பொருட்களை வைத்தே நம்மை எடைபோடுகிறார். நமது அன்பும், உபசரிப்பும் அவருக்குப் பெரிதல்ல என்று உணர்ந்தபோது, எங்களுக்குள் ஒரு சோர்வு வந்தது” என்று தனது அனுபவத்தை ஒருவர் பகிர்ந்து கொண்டபோது, உலகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் என்று எனக்குள்ளே சிந்தித்தேன்.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபோது, அதற்காக கர்த்தரும் ஒரு தெரிவைச் செய்கிறார். காத்தரேதான், சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாகத் தெரிவு செய்கிறார். அதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும், “இவனைத்தான் நான் தெரிந்துகொண்டேன், இவனை ராஜாவாக அபிஷேகம்பண்ணு” என்று கர்த்தர் சாமுவேலுக்குச் சொல்லுகிறார். இந்த சவுல், மிகச்சிறிய கோத்திரமான பென்யமீன் கோத்திரத்தானும், பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களில் மிகவும் அற்பமான குடும்பத்தில் பிறந்த ஒருவனாக இருந்தான். அவனைத்தான் தேவன் தெரிந்து கொண்டார். தேவனுடைய தெரிவு ஒருபோதும் மனிதரின் தெரிவுபோல இருக்கமாட்டாது. காரணம் அவர் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கிற தேவன். அவர் ஒருவனுடைய உள்ளத்தையே பார்த்து தெரிவுகளைச் செய்பவராக இருக்கிறார்.
சவுல் அந்நேரம் இஸ்ரவேலிலுள்ளவர்களில் மிகவும் சவுந்தரியவானாக இருந்தான். அத்தோடு அனைவரும் அவனது தோளுக்குக் கீழாக இருக்கும்படிக்கு உயரமுடையவனாகவும் இருந்தான். அதேநேரம் உள்ளத்திலோ மிகவும் தாழ்மையுடையவனாக இருந்தான் என்பது அவன் சாமுவேலோடு பேசுவதில் இருந்து நமக்குப் புலப்படுகிறது. சவுலை ராஜாவாகத் தெரிவுசெய்தபோதும்கூட அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டு இருந்தான் (1சாமு.10:22). கர்த்தர் அவனுக்குள் இருந்த தாழ்மையைப் பார்த்தார். அவனுக்குள் இருந்த பயத்தைப் பார்த்தார். கழுதையைப்பற்றி விசாரிக்க சாமுவேலினிடத்தில் வந்தபோது, சாமுவேலுக்குக் கொடுக்க அவனிடத்தில் எதுவும் இல்லாதிருந்த அவனுடைய ஏழ்மையைப் பார்த்தார். நாம் கர்த்தருடைய பணியைச் செய்ய எத்தனிக்கும்போது, நமது தகுதிகளையும், படிப்பு, பட்டங்களையும், வேத அறிவையும் குறித்து நாம் பெருமைப்படுகிறோமா? கர்த்தரோ நமது உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறார்; அதுவே அவர் பார்க்கும் தகுதி. அந்தத் தகுதி நமக்குண்டா?
ஜெபம்: கர்த்தாவே, எங்களால் ஏதாகிலும் ஆகும் என்று யோசிக்க, மேன்மை பாராட்ட, நாங்கள் தகுதியானவர்கள் அல்ல, எங்கள் தகுதி உம்மால் உண்டாயிருக்கிறது. ஆமென்.