காத்திருக்குதல்!
தியானம்: 2026 நவம்பர் 25 புதன் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 13:8-23

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போலிருக்கும் (நீதி.13:12).
காத்திருப்பது என்பது நம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒன்றுதான். பலவேளைகளிலும் நாம் பொறுமையிழந்து, அதனால் பல காரியங்களை நமது கைகளாலேயே நாசப்படுத்தி விடுவதும் உண்டு. ஆனால் ஆண்டவர் பல வேளைகளிலும் தமது பிள்ளைகளைக் காத்திருக்கும்படிக்கே அழைக்கிறார். “அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்கிறார். கர்த்தர் செயற்படவேண்டுமானால் நாம் அமர்ந்திருக்கத்தான் வேண்டும். நாமே முந்திக்கொண்டு செயற்பட்டுவிட்டால் கர்த்தர் செயற்படுவதற்கு நாமே தடைக்கற்களாகி விடுவோம்.
தான் வருமளவும் பலியிடுவதற்காகக் காத்திருக்கும்படிக்கு சாமுவேல் சவுலிடம் கூறுகிறார். அந்நாட்களில் தேவன் இவ்விதமாக தீர்க்கதரிசிகள் மூலமே மக்களோடு பேசினார். எனவே இது தேவன் சவுலுக்குச் சொன்ன ஒரு காரியமாகவே இருந்தது. ஆனால் சவுலோ, சாமுவேல் சொன்னபடியே ஏழுநாள் மட்டுமே காத்திருந்தான். சாமுவேல் வரவில்லை. மக்கள் ஒவ்வொருவராக சவுலை விட்டுப்போவதை உணர்ந்த சவுல் தனது ஜனங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, சாமுவேலுக்காகக் காத்திருப்பதை விட்டு, தானே சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். பலியிட்டு முடிகிறபோது, சாமுவேல் வந்தான். சவுல், சாமுவேலுக்கு வந்தனம் செய்வதற்காக வந்தபோது, சாமுவேல், சவுலைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்?” என்று கேட்க, ஜனங்கள் தன்னைவிட்டுப் போவதையும், பெலிஸ்தர் தங்களைச் சுற்றிப் பாளயம் இறங்கியதையும் கண்டு, பயந்து இதைச் செய்தேன் என்கிறான் சவுல். உடனே சாமுவேல், “நீர் செய்த காரியம் உமது தேவனுக்கு விரோதமானது. ராஜ்யபாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் வார்த்தைகளை நீர் மீறினீர். தேவன் சொல்லுகிறார், உமது ராஜ்யபாரம் உமது கையை விட்டுப்போனது. தேவன் தமது இருதயத்துக்கு ஏற்ற ஒருவனைத் தெரிந்து கொண்டார்” என்று சொன்னார்.
சவுல் தேவனின் வார்த்தைக்காகக் காத்திராமல், தன்னுடைய ராஜ்யபாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே, அவசரப்பட்டு இப்படியான ஒரு முடிவை எடுத்தான். அவன் எடுத்த முடிவால் அவன் தக்கவைத்துக்கொள்ள எண்ணிய ராஜ்யபாரம் அவனைவிட்டு எடுபட்டுப்போனது. அதை அவனுக்குக் கொடுத்ததே கர்த்தர்; அவரையே சவுல் அந்த நொடிப்பொழுதில் மறந்து போனான். அருமையானவர்களே, நாமும் இவ்வண்ணமாகப் பொறுமையிழந்து போன நேரங்களை ஒருகணம் எண்ணிப் பார்ப்போம். கர்த்தர் நமது வாழ்வில் செயற்பட முடியாதபடிக்கு நாமே முட்டுக்கட்டையாய் இருந்த சந்தர்ப்பங்களை நினைந்து மனந்திரும்புவோமாக.
ஜெபம்: தகப்பனே, அநேகவேளைகளில் எங்களது அவசரதீர்மானங்களால் உம்முடைய ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம். எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். ஆமென்.