தீமைக்கு நன்மை செய்தல்
அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2011)
– Dr.உட்ரோ குரோல்
அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள் (ஆதி.26:31).
அலெக்ஸாண்டர் போப் என்ற ஆங்கில எழுத்தாளர் தன்னுடைய ‘விமரிசனத்தைப் பற்றிய கட்டுரை’ என்ற ஆய்வில் “தவறு செய்வது மனித இயல்பு; அதை மன்னித்துவிடுவதோ தெய்வீகம்” என்ற ஓர் உயர்ந்த கருத்தினை எழுதியுள்ளார். ஒரு மனிதனுக்கு தீங்கு இழைப்பது மிக எளிது; ஆனால் தீங்கு செய்தவனை மன்னிப்பது மிகக் கடினமான செயலாகும். நமது எதிரிகளை எதிர்க்கவும், பகைக்கவும், அவர்களை அழிப்பதற்கு ஏற்ற தருணங்களைத் தேடவுமே பிசாசு நமக்கு ஆலோசனை தருகிறான்.
ஆனால் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்.5:44) என்று கட்டளையிட்டுள்ளார். தீயோர் நிறைந்த இவ்வுலகில் வாழும் நமக்கு தீமை செய்வோரை மன்னிப்பது மிகக் கடினமாகவே தோன்றும்.
‘தீமைக்கு நன்மை செய்தல்’ என்பதற்கு வேதாகம பக்தர்களில் ஈசாக்கை எடுத்துக்காட்டாக நாம் கூறமுடியும். ஈசாக்கு குடியிருந்த கானான் தேசத்தில் பஞ்சம் உண்டான பொழுது அவர் தென் தேசமான கேராரின் பள்ளத்தாக்கிலே குடியிருக்கும்படி சென்றார். அங்கே ஈசாக்கு விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அவ்வருஷத்தில் அவன் நூறுமடங்கு பலனை அடைந்தான்; மேலும் அநேக மந்தைகளையும் ஆடுகளையும் உடைய செல்வந்தனாக மாறினான். இது கேராரூரின் பெலிஸ்தியருக்கும் அவர்களது இராஜாவான அபிமலேக்குக்கும் பொறாமையை உண்டாக்கியது.
எனவே அவர்கள் ஈசாக்கை தங்கள் ஊரிலிருந்து வெளியேறிச் செல்ல கேட்டுக் கொண்டனர். ஈசாக்கு மேலும் தென்பகுதிக்குச் சென்றார். அங்கே “ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்” (வச.19,20). அதையும் தேவமனிதர்களுக்கே உரிய பொறுமையுடன் விட்டுக்கொடுத்த ஈசாக்கு புதிதாக வேறொரு துரவைத் தோண்டினான். அதைக்குறித்தும் வாக்குவாதம் பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான் (வச.21). தன் மனிதர்களின் பிரயாசத்தினாலும் கடின உழைப்பினாலும் தோண்டிய துரவையும் தியாக உணர்வுடன் விட்டுவிட்டு மீண்டும் தென்திசையில் பயணம் செய்து மூன்றாவது துரவை வெட்டினான். இத்துரவு பொறாமை கொண்ட பெலிஸ்தியரிடமிருந்து தொலைவில் அமைந்து விட்டதால் அவர்கள் ஈசாக்கைத் தொல்லை பண்ணவில்லை. எனவே, “நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்” (வச.22).
ஈசாக்கின் திரண்ட ஆஸ்தியையும் பலத்தையும் கண்ட அபிமலேக் அரசன் அவனை நேரில் சந்திக்க வந்தான். “அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். அதற்கு அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்” (வச.27,28) என்றார்கள். ஈசாக்கை நல்லமுறையில் நடத்தினதாக அபிமலேக்கும் அவன் நண்பர்களும் கூறிக்கொண்டனர். அவனுக்கு நன்மையே அன்றி தீமை செய்யவில்லை என்றும் கூறினர். ஆனால் உண்மையில் நூறு மடங்கு பலன் கொடுத்த நிலங்களிலிருந்து ஈசாக்கை வெளியேற்றினர்; ஈசாக்கு தோண்டிய இரு துரவுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் ஈசாக்கு அதிக மனவேதனையடைந்தான். ஆயினும் தனக்கு விரோதமாய் செயல்பட்ட அவர்களை மன்னித்து தமது தெய்வீக குணத்தை வெளிப்படுத்தினான்.
தன்னைத் தேடிவந்த அவர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தை ஆயத்தம் பண்ணினான்; மறுநாள் காலமே ஒருவருக்கு ஒருவர் தீங்கிழைக்கக் கூடாது என்று இவர்கள் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். இது ஒரு பாரபட்சமான உடன்படிக்கை. இவ்வுடன்படிக்கையின் கருத்தினை அவர்கள் கூறின பொழுது நிச்சயமாகவே ஈசாக்குக்கு சினம் பொங்கியிருக்கும். ஏனெனில் அவன் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபொழுதும் விலகியே சென்று விட்டான்.
ஆயினும் தனது சத்துருக்களை மன்னித்து அவர்களை சமாதானத்துடன் அனுப்பிவிட்டான். அன்றைய தினத்தில் அவனது வேலைக்காரர்கள் பெயெர்செபாவில் ஒரு துரவை வெட்டி தண்ணீரைக் கண்டார்கள்.
நன்மைக்குத் தீமை செய்வது பிசாசின் பண்பு.
நன்மைக்கு நன்மை செய்வது மனிதப் பண்பு.
தீமைக்கு நன்மை செய்வது தெய்வீகப் பண்பு.
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மகாசெல்வந்தனான ஈசாக்கு தனக்கு அநியாயம் செய்த அபிமெலேக்குக்கு மன்னிப்பளிக்க எந்த ஒரு அவசியமும் இல்லை. தேவ அன்பு அவனை நெருக்கி ஏவினதாலேயே அந்த உடன்படிக்கைக்கும் இணங்கினான். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என்பது கிறிஸ்துவின் கட்டளை (லூக். 6:35,36). அவரைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் இனியாவது அவரது ஆணைக்குக் கீழ்ப்படிவோமா?
அதிகாலைப் பாடல்
இயேசுவைப்போல நான் மாறிடவேண்டுமே
அவரது அன்பு என்னில் வெளிப்படவேண்டுமே;
சுயத்தை வெறுத்து சிலுவை சுமந்தோனாய்
அவரது அடிச்சுவட்டை நான் தொடரவேண்டுமே.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை