மாறுபடும் முகம்!
தியானம்: ஜூலை 8 வெள்ளி
வாசிப்பு: தானியேல் 3:19, யோவான் 15:18-23
‘அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால்,
உங்களையும், துன்பப்படுத்துவார்கள்.’
(யோவான் 15:20)
‘என்னுடன் ஒருவர் மிகவும் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கு நான் இணங்கவில்லை என்பது தெரிந்ததும் அவர் முகம் வேறுபட்டது. என்னை ஒரு எதிரிபோலப் பார்க்கத் தொடங்கினார். அவருக்குள் இப்படியொரு முகம் இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை’. இப்படியாக ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். உங்களுக்கும் இந்த அனுபவம் நேரிட்டதுண்டா? அல்லது, நாமே பிறரோடு இப்படியாக நடந்து கொண்டிருக்கிறோமா? தனக்குச் சாதகமாக இருந்தால், மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது, எதிர்த்தால் அவரையே எதிரியாகப் பார்ப்பது. இது எதைக் குறிக்கிறது? முதலில் காட்டிய அன்பும் பாசமும் பொய் என்பதையே காட்டுகிறது.
தானியேலின் மூன்று நண்பர்களுடனும் பேசிக்கொண்டிருந்த ராஜா, இன்னொரு தருணம் கொடுக்கவும் தயாராயிருந்த ராஜா, திடீரென கடுங்கோபமுற்றான். அவனுடைய முகம் வேறுபட்டது என்று வாசிக்கிறோம். காரணம் என்ன? மரணத்திலும் தங்கள் தேவனுக்கு உண்மையாயிருந்த இந்த மூன்று பேரும் அந்த ராஜாவின் பேச்சுக்கு இணங்கவில்லை என்பதே. இணங்கியிருந்தால் ராஜ மரியாதையோடு ராஜா அவர்களை விடுவித்திருப்பான். அது அவர்களுக்கு அன்று இலகுவாக இருந்திருக்கும். ஆனால் இன்றும் அவர்கள் பேசப்படத்தக்கதாக அவர்களைக் குறித்த சாட்சியை நாம் கேட்டிருப்போமா?
நாம் உலகத்தோடு ஒத்து வாழ்ந்தால் உலகம் நம்மை நிச்சயம் நேசிக்கும். இவ்வுலகில் இலகுவாக வாழ ஏதுவாயிருக்கும். ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படியும்போது நிச்சயமாக இவ்வுலகம் நம்மைச் சும்மாவிடாது. இதுவரை நேசிக்கிறதுபோல பாசாங்கு செய்த இந்த உலகத்தின் உண்மையான முகம் அப்போதுதான் தெரியவரும். ஆண்டவர் இயேசுவுக்கும் அதுதான் நடந்தது. இவ்வுலக ராஜ்யத்திற்கு ஏற்ப அவர் வாழ்ந்திருந்தால் அவருக்கு சிலுவை கிடைத்திராது. அவர் தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற முன்வந்ததால்தான் உலகம் அவரைச் சிலுவையில் அறைந்தது. அதனால் இயேசு தோற்றுப் போனாரா? இன்றும் வெற்றி வேந்தனாகவே ஜீவிக்கிறார். தேவபிள்ளையே, வெளிப்படையான முகங்களைப் பார்த்து ஏமாறாதே. அவர்கள் பாதை தவறு என்று கண்டு நீ விலகிப்பார், அங்கேதான் உண்மை முகத்தைக் காணமுடியும். ஆனால் அதைக் கண்டு பயப்படாதே. உலகமும் உலகத்தாரும் உன்னை எதிர்க்கிறார்கள் என்றால் நீ கர்த்தருடைய வழியில் நிற்கிறாய் என்பது தெளிவு. இறுதி வெற்றி உனக்குத்தான். ஆகவே மாறுபடும் முகங்களைக் கண்டு நீ பயப்படாதே. அவ்வாறே நீயும் இரட்டை முகத்தோடு பிறரோடு பழகாதே.
ஜெபம்: “பிதாவே, இவ்வுலகம் காட்டும் போலிமுகத்தைக் கண்டு ஏமாறாமல், எந்த நிலையிலும் உமக்கு மாத்திரமே உண்மையாயிருக்க அருள் தாரும். ஆமென்.”