பயம் வேண்டாம்!

தியானம்: ஜூலை 23 சனி;
வாசிப்பு: எசேக்கியல் 3:17-21; 1 தீமோத்தேயு 1:6-8

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல்,
பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள
ஆவியையே கொடுத்திருக்கிறார். (2தீமோத். 1:7)

பிறர்மீது அன்பும் கரிசனையும் இருப்பது மெய்யென்றால் தேவையான நேரங்களில் தேவையானதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு ஏன் தயக்கம்? நான் ஜெபிக்கிறேன், ஆனால் நேரிலே பேசி பகையை வளர்க்க நான் விரும்பவில்லை என்று நாம் அநேகந் தடவைகளில் தட்டிக்கழிக்கிறோம். இதன் உண்மைநிலை என்னவெனில் நமக்குள் பயம் இருக்கிறது என்பதுதான்.

நீர் மாடுகளைப்போல புல்லை மேய்ந்து ஆகாயத்துப் பனியிலே நனைவீர் என்று ஒரு ராஜாவைப் பார்த்துச் சொல்லுவது என்பது இலகுவான காரியம் அல்ல. இது தானியேலுக்கு உயிராபத்தைக் கொண்டுவரக்கூடிய சந்தர்ப்பம். ஆனால் தானியேலோ உண்மையாகவே ராஜாமீது அன்பும் கரிசனையும் கொண்டிருந்தார். ஆகையினாலே தனக்கு நேரிடும் தீங்கைக் குறித்தல்ல, ராஜாவைக் குறித்ததான மனப்பாரத்துடன் சொப்பனத்தின் விளக்கத்தைப் பயமின்றி சொன்னார். அதற்காக ராஜா தானியேலைத் தண்டித்தாரா?

சத்தியத்தை சத்தியமாய் சொல்ல நாம் ஏன் பின்நிற்கிறோம்? ஏனெனில் நமக்குள் இருக்கும் பயம்தான் காரணம். சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், ….நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன்… சாவான். அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன் (எசே.3:18). நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி நீதிகேடு செய்யும் போதும், …..நீ அவனை எச்சரிக்காவிட்டால், அவன் சாகும்போதும் அவனது இரத்தப்பழியையும் உன் கையிலே கேட்பேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். இப்படியிருக்க நாம் பயந்திருப்பது எப்படி? கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் (நீதி.14:26) இதைத்தான் அன்று பவுலும் தீமோத்தேயுவுக்கு வலியுறுத்தி எழுதினார். தேவன் நமக்குப் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியைத் தந்திருக்கிறார். அந்த ஆவியை நாம் அவித்துப்போடலாமா? உண்மைதான், சத்தியத்தைச் சொன்னால், மனந்திரும்பாவிட்டால் அழிவு என்று சொன்னால், தவறுகளை எடுத்துச் சொன்னால், உலக இன்பத்தில் சுகித்திருக்கிற மக்கள் நமக்கு எதிராக எழும்புவார்கள். ஆனால், அதற்காக இவ்வுலகிற்கு நாம் பயப்படத் தேவையில்லை. நமது ஆத்துமாவைத் தொடவல்ல தேவனுக்கன்றி நாம் ஏன் யாருக்கும் பயப்பட வேண்டும்? நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்து வெட்கப்படாமல் தைரியமாகப் பேசலாமே. தானியேல் எப்படி தைரியமாக ராஜாவுடன் பேசினார்? அதே கர்த்தருடைய ஆவி உனக்குள்ளும் இருக்கிறார் என்றால் பயத்தை நீக்கிவிட்டு தைரியமாக எழுந்து நில். கர்த்தர் பேசுவார்.

ஜெபம்: பிதாவே, எனக்குள் இருக்கும் பயத்தின் ஆவியை நீர் அகற்றிப் போட்டு, தைரியமாக உமது செய்தியைச் சொல்ல கிருபை தாரும். ஆமென்.