Dr.W.வாரன் வியர்ஸ்பி
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் ( லூக்கா. 2:6,7).


ஆண்டவராகிய இயேசுவுக்குப் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் முதற்பேறானவர் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. புறஜாதியாரான நமக்கு, முதற்பேறானவர் என்பது அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் யூதர்களுக்கு அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் முதற்பேறான குமாரனுக்குப் பல உரிமைகளும், சலுகைகளும் உண்டு.

எனினும் புதிய ஏற்பாட்டில் முதற்பேறானவர் என்பது முதலில் பிறந்த குழந்தை என்பதை மட்டும் குறிப்பதில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தவரையில், அவர் மரியாளின் முதற்பேறான குமாரன். அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்தாள். கன்னி மரியாளின் மகனாகப் பிறந்தார். மாற்கு 6:3இன்படி மரியாளுக்கும் யோசேப்புக்கும் பல பிள்ளைகள் பிறந்தார்கள் என்று அறிகிறோம். இயேசு மரியாளிடம் பிறந்த பிறகு யோசேப்பும், மரியாளும் கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள். ஆனால் நமது ஆண்டவர் அற்புதமான முறையில் உருவாகிப் பிறந்தார். இயேசுவைப் பொறுத்தவரையில் யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே. உலகப்பிரகாரமான தந்தை அல்ல. மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தாள். இயேசு அவளுடைய முதற்பேறான குமாரன்.

வேதாகமத்தில் முதற்பேறானவர் என்பது மேன்மையையும், முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் பெறுகிறது. முதற்பேறானவர்கள் குடும்பத்தில் மிகச்சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர்.

முதற்பேறான பிள்ளைகளுக்கு சேஷ்ட புத்திர பாகம் என்னும் ஆஸ்தியில் சிறப்பான பங்கு கொடுக்கப்படும். யாத்திராகமம் 4:22இல் தேவன் இஸ்ரவேலைத் தம்முடைய சேஷ்ட புத்திரனாகக் கருதியதாக அறிகிறோம். “இஸ்ரவேல் என்னுடைய குமாரன். என் சேஷ்ட புத்திரன்”. எனவே முதற்பேறானவர் என்னும் பெயரைக் கேட்டதும், முன்னுரிமை பெறுபவர். எல்லாரிலும் மேலானவர், உயர்ந்தவர்களிலும் உயர்ந்தவர் என்னும் பொருள்களைத் தெரிந்துகொள்வோமானால், இந்தப் பட்டத்தை ஆண்டவராகிய இயேசுவுக்குக் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

வேதாகமத்தில் இயேசுகிறிஸ்துவை முதற் பேறானவர் என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம், அதில் நான்கு அம்சங்கள் இருப்பதைக் காணலாம். அவை இயேசுவின் ஆளத்துவம், ஊழியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும். இந்தத் தன்மைகளை வெளிப்படுத்தும் வேத வசனங்களைப் பார்ப்போம்.

“அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ.1:15).

“எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும், மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்” (கொலோ. 1:18).

“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்” (ரோம. 8:29).

“மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச் செய்தபோது: தேவ தூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்” (எபி.1:6).

இந்த நான்கு வசனங்களையும் நாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து. அவை இயேசுகிறிஸ்துவில் காணப்படும் சிறப்புத்தன்மையைப் புரிந்து கொள்வோம்.

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்

முதலாவதாக இயேசு சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறானவர் என்பதைச் சிந்திப்போம் (கொலோ. 1:15). கொலோசெயர் நிருபத்தின் மையக்கருத்தே “இயேசுகிறிஸ்துவின் முந்தின தன்மையே”. எல்லாவற்றிலும் முதல்வராய் இருக்கும்படி (1:18) என்றிருப்பதைக் கவனியுங்கள். கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார் ( கொலோ. 3:11).

கொலோசெயர் முதல் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து இரட்சிப்பில் முதல்வராய் இருப்பதைக் காண்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், (கொலோ.1:12).

(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோ.1:14). நமது ஆண்டவராகிய இயேசு இரட்சிப்பில் முதற்பேறானவர்.

படைப்பிலும் அவர் முதற்பேறானவர். 16ஆம் வசனம் சகலமும் அவரைக் கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறுகிறது. அப்படியானால் அவர் படைக்கப்பட்டவரல்ல. படைப்புக்கு முன் இருந்தவர் என்று தெளிவாகிறதல்லவா? சிலர் இயேசுகிறிஸ்து படைக்கப்பட்டவர். படைப்புகளில் முதற்பேறானவர், அவர் நித்திய தேவன் அல்ல என்று நம்மை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் 16ஆம் வசனம் அவரால் சகலமும் படைக்கப்பட்டது. அவரே படைத்தவராயிருக்க, அவர் படைக்கப்பட்ட பொருளாக எப்படி இருக்க முடியும்?

அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ள வைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது (கொலோ.1:16,17). இந்த வசனம் இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல. அவரே சிருஷ்டிகர் என்பதற்கு ஆதாரம்.

“இயேசுகிறிஸ்து எல்லாவற்றிற்கும் முந்தினவர்”. சிருஷ்டிகளில் முதற்பேறானவர் இயேசு என்று சொல்வதன் பொருள் என்ன? அதாவது சிருஷ்டிகள் எல்லாவற்றிலும் முதல் நிலையில் உள்ளது என்று பொருள். “சேஷ்ட புத்திரன்” என்பதில் முன்னுரிமை, உயர்பந்த நிலை, உயர்ந்ததிலும் உயர்ந்தது என்னும் பொருள்கள் உண்டு என்பதை நினைவுகூருங்கள். சுதந்தரத்தில் முதற்பங்கை, சிறப்பான பங்கைப் பெறுகிறவர் முதற்பேறானவர்.

இயேசுகிறிஸ்து படைக்கப்பட்ட அனைத்தைக் காட்டிலும் உயர்ந்தவர். ஏனெனில் எல்லாம் படைக்கப்படுவதற்கு முன்னரே இயேசு இருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று (யோவா.1:3). அதாவது அவரே சகலத்தையும் உண்டாக்கினார்.

சகலமும் அவரைக் கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. ..எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. இவை படைப்புக்கள் எல்லாவற்றையும்விட இயேசு உயர்ந்தவர் என்பதைக் காட்டுகின்றன.

இன்று படைப்புகளோடு நமக்குப் பிரச்சனைகள் உண்டாகக் காரணம் என்ன?

சுற்றுச் சூழல் மாசுபடுதல் (Pollution) ஒரு பிரச்சனை

இயற்கைச் சூழல்களில் பிரச்சனைகள்.

அவை பொருளாதாரத்தைப் பாதித்தல்

அவை அரசியல் பிரச்சனைகளாதல்

இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஏன் வருகின்றன?

பிரச்சனைகளுக்கு முதற்காரணம் நாம் படைப்பின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. படைப்புகளுக்கெல்லாம் மேலானவர், உயர்ந்தவர் என்ற இடத்திலிருந்து இயேசுகிறிஸ்துவை எடுத்துவிடுகிறோம். இதன் பலனாக நாம் பெறுவது, அழகுக்குப் பதிலாக அவலட்சணம், வளர்ச்சிக்குப் பதிலாக அழிவு, கட்டுமானத்துக்குப் பதிலாகச் சீரழிவு, இவை காரணமாக விக்கிரகாராதனையும், வீணாகுதலும் அதிகரிக்கின்றன.

மக்கள் சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களைத் தொழுதுகொள்கிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வணங்குகிறார்கள் (சிலை, உருவங்கள்). இயேசுகிறிஸ்துவுக்குப் படைப்புகள் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவர் என்ற நிலையைக் கொடுத்துவிடும்போது, இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும். அப்பொழுது நாம் இந்தப் படைப்புகளைத் தம்மை மகிமைப்படுத்துவதற்காக இயேசுவினால் படைக்கப்பட்டவை என்று சிருஷ்டிப் பொருட்களைக் கண்ணோக்குவோம். கிறிஸ்துவே சர்வசிருஷ்டிக்கும் மேலானவர்!

இயேசுகிறிஸ்து மகிமையோடே திரும்பி வரும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். அப்பொழுது படைப்புக்கள் அனைத்தும் அடிமைத் தனத்திலிருந்தும், கெட்டுப்போவதிலிருந்தும் விடுதலை பெறும். நமக்கு அழகும், ஐக்கியமும், ஒருமைப்பாடும், அன்பும், மகிமையும், ஆசீர்வாதமும் இருக்கும். ஏனெனில் இயேசுகிறிஸ்துவே சிருஷ்டிகராக அனைத்துக்கும் முதற்பேறானவராக. உன்னதமாக இருந்து ஆட்சி செய்வார்.

மரித்து உயிர்த்தவர்களில் முதற்பேறானவர்.

இயேசுகிறிஸ்து முதற்பேறானவர் மட்டுமல்ல, அவரே மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (கொலோ.1:18). “மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்” என்று இயேசுவைக் குறித்து யோவான் வெளி.1:5இல் கூறுவதையும் காணலாம்.

இறந்தவர்களில் உயிரோடெழுந்தவர்களில் முதற்பேறானவர் இயேசு என்று கூறமுடியாது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்கள் உண்டு. இயேசு மரித்த மூன்று பேரை உயிரோடு எழுப்பினதைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். அவர் கூடுதலானவர்களையும் உயிரோடு எழுப்பியிருக்கலாம். ஆனால் உயிர்த்தெழுந்தவர்களில் முதற்பேறானவர் என்று கூறப்படுவது ஏன்?

தம்மைத்தாமே உயிர்ப்பித்தார்.

மரித்து உயிர்த்தவர்களில் முதல் நிலையில் உள்ளவர் இயேசு. அவரே மகா பெரியவர். மற்ற எல்லாரையும் விட உயர்ந்த நிலையில் நிற்பவர் இவரே. நமது ஆண்டவராகிய இயேசு தாம் மரித்த பின் உயிர்த்தெழுவது உண்டு என்று அறிந்திருந்தார், அவர் அதைத் தமது சீஷர்களுக்கு அறிவித்தார். அதுமட்டுமல்ல, அவர் தம்மைத்தாமே மரணத்திலிருந்து எழுப்பவும் செய்தார். அவர் இப்படிக் கூறினார் அல்லவா?

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் … அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு (யோவான் 10:17,18). லாசரு தன்னை மரணத்திலிருந்து எழுப்பவில்லை (யோவா.11:1-44). யவீருவின் மகள் தன்னைத்தானே உயிரோடு எழுப்பவில்லை (மாற்கு 5: 21 – 43). நாயீன் ஊர் விதவையின் மகன் தன்னைத்தானே மரணத்திலிருந்து எழுப்பவில்லை (லூக் 7:11-18). ஆனால் இயேசு தம்மைத்தாமே மரணத்திலிருந்து உயிரோடு எழும்பினார். மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்ட அனைவரிலும் முதல்வரானவர் இயேசுகிறிஸ்து!

மறுபடியும் ஒருபோதும் மரிப்பதில்லை!

இரண்டாவதாக, இயேசு தமது வல்லமையினால் மரித்தோரிலிருந்து தாமே உயிர்த்தெழுந்தார். ஆனால் இனி எப்போதும் அவர் மரிப்பதில்லை. உயிர்த்தெழுந்த லாசரு மறுபடியும் மரித்தான். உயிர்த்தெழுந்த யவீருவின் மகள் மறுபடியும் மரித்தாள். உயிர்த்தெழுந்த நாயீன் ஊர் விதவையின் மகன் மறுபடியும் மரித்தான். ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு இன்றும் வாழ்கிறார்! அவருக்கு இனி எப்போதுமே மரணம் இல்லை. இயேசுவுக்குத் தன் உயிரை விடவும் வல்லமை உண்டு. இயேசுவுக்குத் தன் உயிரை எடுத்துக்கொள்ளவும் வல்லமை உண்டு.

இப்பொழுது அவர் ஒரு முடிவற்ற வாழ்க்கை வாழ்கிறார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு, இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்கிறார். மரணம் அவரை அண்ட முடியாது. மரித்து உயிர்த்தவர்களில் முதல்வர் இயேசு அவரே பெரியவர்! அவரே உயர்ந்தவர்!! அவர் தம்மைத்தாமே உயிரோடு எழுப்பிக்கொண்டார். மறுபடியும் எப்போதும் அவர் மரிப்பதில்லை.

மற்றவர்களை உயிரோடு எழுப்ப முடியும்; எழுப்புவார்.

மற்றவர்களை மரித்தோரிலிருந்து எழுப்பத் தக்கதாக, இயேசு தம்மைத்தாமே எழுப்பினார். லாசரு வேறு எவரையும் எழுப்பவில்லை. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த எவருமே வேறு எவரையும் உயிரோடு எழுப்பியதாக வரலாறு இல்லை. ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார். மரித்த பலரை உயிரோடு எழுப்பினார். இன்னும் எழுப்புவார். இயேசு மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்” (2தீமோத்.1:10).

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவர்களில் முதற்பேறானவராகிய இயேசுகிறிஸ்துவை நாம் விசுவாசிக்கிறபடியால், நீங்களும், நானும் மரணத்துக்குப் பயப்பட வேண்டியதில்லை.

இயேசு மரணத்தை மேற்கொண்டவர். மரணம் இனிமேல் அவரை ஆட்கொள்வதில்லை. அவர் தம்முடன் இருக்கும்படி நம்மை அழைக்கும்போது, மரணம் நம்மைத் தடை செய்யவும் முடியாது.

அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவர்!

ரோமர் 8:29 இந்தவசனம் இயேசுகிறிஸ்து முதற்பேறானவர் என்று கூறும் மூன்றாவது கருத்தாகும். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லா ஆசீர்வாதங்களையும் தமக்கே வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

ஒருவர் இப்படிக் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் இயேசுவைப்போல இருக்கவேண்டும் என்னும் அளவுக்கு தேவன் தமது குமாரன்மேல் அன்பு செலுத்துகிறார். இதை நீங்களும், நானும் ஒருநாள் அனுபவிக்கப்போகிறோம். நாம் அவரைப் பார்ப்போம். அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் (1யோவா. 3:2).

இயேசுவை உங்கள் இரட்சகராக அறிந்திருப்பீர்களானால், நீங்கள் அவருடைய அநேக சகோதரர்களுக்குள் ஒருவர். ஒரு நாள் நீங்கள் அவரைப்போல இருப்பீர்கள். ஏனெனில் அவர் அநேக சகோதரர்களுக்குள் முதற்பேறானவராயிருக்கிறார் (ரோமர் 8:29). இயேசு இன்று எப்படி இருக்கிறாரோ, நாமும் ஒரு நாள் அப்படியே இருப்போம். முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை என்று சபை அழைக்கப்படுகிறது (எபி.12:23). ஒரு வகையில் பார்க்கும்போது, நாம் எல்லாரும் இரண்டாவதாகப் பிறந்தவர்களின் சபையாக இருக்கிறோம். நான் முதற் பிறப்பு பிறந்த முறையில் தேவன் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால் நான் இரண்டாவது ஒரு தடவை பிறந்ததன் மூலம் (மறுபிறப்பு) நித்திய ஜீவனை அடைந்துள்ளேன். ஒருநாள் நானும் இயேசுவைப் போல இருப்பேன். நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர்களானால் நீங்கள் முதற்பேறானவர்களின் சபைக்குச் சொந்தமானவர்கள். அது உயர்ந்த சபை. மிகுந்த சலுகைகளைப் பெற்ற சபை. ஒருநாள் நீங்கள் அவருடைய மகிமையில் பங்கு பெறுவீர்கள். அவரே அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவர். ஒருநாள் நீங்கள் அவரைப் போல இருப்பீர்கள்.

இது எப்போது நடக்கப் போகிறது? எபி.1:6 இதற்குரிய விடையைத் தருகிறது. இந்த நிருபத்தை எழுதியவர் இயேசுவின் வருகையை மனதிற்கொண்டு எழுதுகிறார்.

மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார் (எபி. 1:6). சில வேதாகம மாணவர்கள் இந்த வசனத்தை ஒத்துக்கொள்ளுகிறதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் And again என்று உள்ளது. தமிழில் மேலும் என்று கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தின்படி பொருள் கொண்டால் மறுபடியும் என்று கூறவேண்டும். இது இயேசுவின் வருகையைக் குறிப்பிடுகிறது. அவர் தமது முதற்பேறானவர்களை உலகுக்குக் கொண்டு வரும்போது, தேவதூதர்கள் எல்லாரும் அவர்களைத் தொழுதுகொள்ளட்டும்.

இதை நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம். இயேசு தமது சபை ஏற்றுக்கொள்ள வரும்போது முதல் தடவை இயேசு இந்த உலகத்தில் வந்தபோது தேவதூதர்கள் அவரை வழிப்பட்டார்கள். அப்பொழுது அவர் தாழ்மைக்கோலத்தில் வந்தார்.

அவர் மறுபடியும் வரும்போது, மகிமையோடே திரும்ப வருவார். முதல் தடவை வந்தபோது இயேசு பெத்லகேமில் பிறந்தார். இயேசு பலவீனமுள்ள ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார். ஆனால் இயேசு மறுபடியும் வரும்போது வல்லமையோடும் மகிமையோடும் வருவார். இயேசு பெத்லகேமில் பிறந்தபோது உலக மக்களுக்கு இரட்சிப்பு தருவதற்காக வந்தார். அவர் மறுபடியும் வரும்போது நியாயத்தீர்ப்பு நடைபெறும். அவர் முதல் தடவை வந்தபோது, அவர் முட்கிரீடம் தாங்கி தனது வாழ்க்கையை முடித்தார். ஆனால் அவர் மறுபடியும் வரும்போது, அவர் ஒரு வெற்றியின் கிரீடத்தை அணிந்திருப்பார்.

இயேசுகிறிஸ்து தேவனுடைய முதற்பேறானவர். அவர் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளப் போகிறார். அவருக்கு எல்லாக் கனமும், மகிமையும் உரித்தாகும். நீங்கள் அவரை உங்கள் சொந்த இரட்சகராக அறிந்துள்ளீர்கள். அதனால் நீங்கள் அவருடைய நித்திய சுதந்தரத்தில் பங்கு பெறுவீர்கள்.

மொழியாக்கம்: G.வில்சன்