Pastor.பிரையன் கிளார்க்கின்
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

வருடத்தின் இந்த நாட்களில் நமது கலாச்சார மானது கிறிஸ்துமஸ் செய்திகளினால் எவ்விதமாக முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் செய்தியானது இசையின் மூலமாக எவ்விடத்திலும் பரவிக்கொண்டிருக்கிறது. ஆலயத்தில் நாம் பாடும் அநேக கிறிஸ்தவப் பாடல்கள், ஆழ்ந்த இறையியல் செய்தியை அறிவிப்பதோடு எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. பெரிய, பெரிய வணிக வளாகங்களிலும், கடைகளிலும், பள்ளிகளிலும் வானொலிகள் மூலமாக பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்பாடல்களை கேட்கும் அனேக மக்கள், அவற்றின் அர்த்தத்தை உணருகிறார்களா என்பதைக் குறித்து நான் அதிகம் எண்ணுவது உண்டு. மிகவும் புகழ்பெற்ற இறையியல் வல்லுனர்களால் இயற்றப்பட்ட பாடல்களை நான் கேட்கும்போது, அவற்றின் ஆழமான அர்த்தத்தை எப்படி நாம் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறோம், அப்பாடல்களை நீங்கள் பாடும்பொழுது அவற்றின் அர்த்தத்தை ஏன் நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை என்று நான் அதிகமாக ஆச்சரியப்படுவதுண்டு.

அதைக்குறித்து இப்படியாக சிந்தித்து பாருங்கள்: இக்கடைசி நாட்களில் நம் வாழ்க்கையில் மிகவும் சோர்வடைந்திருக்கிறோம். மனம் குழம்பி போய், தவிக்கிறோம் என்று எண்ணுகிற மக்கள் கூட்டத்தாரால் மிகப்பெரிய வணிக வளாகங்கள் அனைத்தும் நிரம்பி காணப்படும். மன அமைதியைப் பெற்றுகொள்ள எப்பக்கம் திரும்புவதென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

அவர்களது திருமண வாழ்க்கை நொறுங்கி விழுந்துகொண்டிருக்கிறது. அவர்களது வியாபாரமும் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அவர்களது பிள்ளைகளுடைய வாழ்க்கை சீர் கெட்டுப் போய் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யாரிடத்தில் அவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். யார் கூறுவதை கவனிப்பதென்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை துன்பத்தாலும், ஏமாற்றத்தாலும் நிறைந்துள்ளது. “என் வாழ்க்கை இப்படி இருக்குமென்று நான் எண்ணவில்லை” என்று வருந்துகின்றனர். அவர் களது வாழ்க்கை சலிப்பினாலும், பயத்தினாலும், கோபத்தினாலும் நிறைந்ததாய் இருக்கும்.

ஆயினும் அவர்களை சுற்றிலும் ஒரு நல்ல செய்தி உள்ளது. அதாவது நமது இதயங்களை உடைக்கக்கூடிய காரியங்களை மாற்றி அமைக்கும் ஒரே நோக்கத்தோடு ஒருவர் வந்துள்ளார். என்று அச்செய்தி கூறுகிறது. அச்செய்தியைப் பற்றிதான் இன்று நாம் தியானிக்கப் போகிறோம். இதுவே, நான் உங்களுக்கு கொடுக்கும் கிறிஸ்துமஸ் பரிசாகும்.

இன்றையதினம் உங்கள் இருதயத்தை உடைக்கக்கூடிய காரியம் எதுவாக இருந்தாலும் அதை நன்மையாக மாற்றி அமைத்து, உங்களது நம்பிக்கையை மென்மேலும் வளரச்செய்ய நமக்காக ஒரு இரட்சகர் வந்துள்ளார் என்பதே அந்த செய்தியாகும்.

உங்கள் வேதாகமத்தில் ஏசாயா 9ம் அதிகாரம் 6ம் வசனத்திற்கு திருப்பிக்கொள்ளுங்கள். இந்த வசனம் நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட வசனமாகும்.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும் (ஏசா.9:6).

வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள நாமங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை அல்ல. அவைகள் அப்பெயருள்ள நபரின் தன்மையை விவரிக்கின்றன. ஆகவே வரப்போகிற இவருடைய நாமத்தைப் பற்றிக் கூறும்போது, அவர் யார்? அவர் என்ன செய்ய இருக்கிறார்? என்பதை இவ்வசனம் நமக்கு விவரிப்பதாக உள்ளது.

1. அவர் நாமம் அதிசயமானவர்

அவர் அதிசயமான ஆலோசனைக் கர்த்தாவா அல்லது அதிசயமானவரா என்று எப்பொழுதுமே ஒரு விவாதம் உண்டு. அதைத் தெளிவாக தீர்மானிக்க இயலவில்லை. அது இலக்கணப் பிழையல்ல. பழைய ஏற்பாட்டில் தேவன் அவரைப் பற்றி விவரிப்பதற்கு அதிசயமானவர் என்ற வார்த்தையை ஓரிரு முறை பயன்படுத்தியுள்ளார், “என் நாமம் அதிசயம்” என்று கூறியுள்ளார். அதிசயமான ஆலோசனைக் கர்த்தர் என்று இணைத்துக் கூறும்பொழுது அதிசயமானவர் என்ற வார்த்தையின் ஆழமான அர்த்தத்தைத் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

அருமையானவர்களே, உங்கள் வாழ்க்கையில் சலிப்போடு காணப்படுகிறீர்களா? அதிசயமானவர் என்ற நாமத்தை உடைய அவரிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும்.

இன்றைய உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று என்னவென்றால், அளவிற்கு அதிகமான தகவல்களால் நாம் நிரப்பப்பட்டுள்ளோம். எண்ணிக்கைக்கு அடங்காத தகவல்களால் நிரப்பப்பட்டு வரும் நம்மைப்போல, இதற்கு முன் இவ்வுலக சரித்திரத்தில் யாருமே வாழ்ந்தது கிடையாது.

ஆனால் உண்மை என்னவென்றால், தகவல்கள் நமக்கு அறிவைக் கொடுக்காது. அவற்றால் நாம் வாழ்க்கையை நன்றாகப் புரிந்துகொண்டோம் என்று அர்த்தமல்ல. நாம் மிகவும் அதிகமானத் தகவல்களைப் பெற்றுக்கொண்டாலும் மிகவும் குறைவாகவே அறிவைப் பெற்றுள்ளோம் என்று நான் எண்ணுகிறேன். நாம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறோம் என்று எண்ணுவதால், மிகமிகக் குறைந்த அளவு மக்களே, தேவன் நமக்கு தந்துள்ள வாழ்க்கை அதிசயமானது என்ற எண்ணத்தோடு வாழ்கிறார்கள். இன்று நாம் Google க்கு சென்று, நமது கேள்விகளுக்கான பதில்களையும் பெற்றுக்கொள்கிறோம். உலகில் அறியப்படாத எந்த இரகசியமும் இல்லை, உலகில் அனைத்துக் காரியங்களுக்கும் கூகுள் பதில் கூறிவிடுகிறது. நமது தொழில் நுட்ப அறிவு, அறிவியல் அறிவு, நமக்குள்ள அனைத்து வசதிகள் இவற்றின் மூலமாக நாம் அறிய வேண்டியவைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறோம் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் நாம் மிகவும் குறைவாகவே அறிந்து கொள்கிறோம்.

இன்று நாம் அறிந்திருப்பது என்னவென்றால், “நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் வாழ்ந்த மக்கள் கற்பனையில்கூட எண்ணியிருக்க முடியாத அளவு இன்றைய உலகம் மிகவும் சிக்கல்களும் புதிர்களும் நிறைந்த உலகமாக உள்ளது” என்று.

தேவன் ஏன் இப்படிப்பட்ட சிக்கலான புதிரான உலகத்தை சிருஷ்டித்தார்? நம்மை ஏன் அவரது சாயலாகச் சிருஷ்டித்தார்? இந்தக் கேள்விகளுக்கான பதிலையே அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையின் புதிரைப் புரிந்துகொள்ளும் வாஞ்சையோடு இருக்கிறோம். அதனை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையின் சலிப்பை மேற்கொள்ள விரும்புகிறோம்.

வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். நாம் நமது வாழ்க்கையை ஆச்சரியமான உணர்வுடனும், ஒரு பணி செய்யும் நோக்கத்துடனும் வாழ வேண்டும்.அவ்வாறு வாழ்வதற்கு தைரியம் தேவை. வாழ்க்கையில் பலவித இடர்பாடுகளும் ஏற்படும். அவற்றை சந்திக்க அதிசயமானவர் என்ற நாமமுடைய அவரிடம் சரணடைய வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம் வாழ்க்கையின் சலிப்புகளை வெற்றிகரமாகச் சந்திக்கலாம்.

2. அவரது நாமம் ஆலோசனைக் கர்த்தர்

நீங்கள் எப்பொழுதாவது தீய ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறீர்களா? உங்களது பணத்தைக் கையாளும் முறையில் உங்களது வியாபாரத்தில் உங்களது குழந்தைகளை வளர்க்கும் விதத்தில், தீய ஆலோசனைகளைப் பெற்றுள்ளீர்களா? நாம் வசிக்கும் இந்த உலகம் அதிகமான சிக்கல்கள் நிறைந்த உலகமாகும். நமது வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான சத்தங்கள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

நாம் எப்படி வாழவேண்டும், மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது, எப்படியாக அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது குறித்து பிறரால் கூறப்படும் பல்வேறு ஆலோசனைகள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன அவைகள் அனைத்தும் நம்மை அளவிற்கு அதிகமாக குழப்புவதாக உள்ளன.

உங்களது வாழ்க்கையை ஆரம்பமுதல் இந்நாள்வரை நன்கு அறிந்தவரும் எப்பொழுதுமே சிறப்பான ஆலோசனை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த ஆலோசகரை உங்களுக்கு அறிமுகப்படுத்தினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள். அவர் ஒருக்காலும் யாருக்கும் தவறான ஆலோசனை கொடுத்தது கிடையாது. ஒரு நாளில் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களுக்கும் அவரது சிறந்த ஆலோசனை கிடைத்தால் உங்களுக்கு எவ்வளவு நன்றாக இருக்கும். அவரது ஆலோசனையைப் பெற நீங்கள் பணம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. அவரது ஆலோசனைகளைப் பெற நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அதுபோதும்! உங்களுக்காக தலைசிறந்த ஆலோசனைகளால் நிறைந்த ஒரு புத்தகத்தையே அவர் எழுதி நமக்கு தந்துள்ளார்.

தற்காலத்தில் அநேக மக்கள், தேவன் தங்களுக்கு தந்திருக்கின்ற வேதாகமத்தை ஏனோ தானோவென்று பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அநேகவிதமான ஆச்சரியமான காரியங்கள் பற்றியெல்லாம் பேசுவார்கள். ஆனால் ஒரு ஞாயிற்றுக் கிழமையிலிருந்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அவர்கள் வேதப்புத்தகத்தைத் திறப்பதும் கிடையாது, வாசிப்பதும் கிடையாது. வேதாகமம் வாழ்க்கையின் G.P.S கருவி போன்றதாகும். (புவிக்கோள் இருப்பு பற்றிய தடங்காட்டி).

எனது திருமண வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்துவது? எனது பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பது எப்படி? எனது பொருளாதாரத்தை எவ்வாறு சிறப்பாக கையாள்வது? எனது வியாபாரத்தை எவ்வாறு திறம்பட நடத்துவது? வாழ்க்கையால் மிகவும் கடினமான பகுதிகளை கையாள்வது எப்படி? போதை மருந்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி? இவ்வாறான அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களை பரிசுத்த வேதாகமம் நமக்கு கொடுத்து நல்ஆலோசனைகளையும் தந்து நம்மை சரியான வழியில் நடத்தும்.

தாவீது வேதாகமத்தைப் பற்றிக் கூறும்பொழுது, “அது பொன்னிலும் பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதாய் இருக்கிறது” (சங்.19:10) என்று கூறுகிறார். முற்காலத்தில் மட்டுமல்லாது எக்காலத்திலும் மதுரமுள்ள அனைத்திலும் அதிமதுரமானது தேனாகும். அனைத்து உலோகங்களிலும் மதிப்புமிக்கதும் விலையேறப்பெற்றதும் பொன்னாகும். அதுபோல மதிப்பு மிகுந்த பல ஆலோசனைகள் நிறைந்த ஒரு புத்தகத்தை தேவன் நமக்குக் கொடுத்துள்ளார்.

அந்தப் புத்தகத்தை அனைவரும் மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அப்புத்தகத்தின் ஆசிரியரோடு நாம் நேரடியாகப் பேசி தொடர்பு கொள்ளலாம்.

3. அவர் நாமம் வல்லமையுள்ள தேவன்

கிறிஸ்துமஸ் அதிசயம் யாருக்காவது தேவைப்படுகிறதா? அநேகருக்குத் தேவை என்பதை நான் அறிவேன். யாருடைய திருமண வாழ்க்கையிலாவது அற்புதம் நிகழ வேண்டியுள்ளதா? யாருடைய பிள்ளைகளாவது வழிதப்பி நடக்கிறார்களா? தீராத வியாதியினால் யாராவது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? வாழ்க்கையில் நம்பிக்கையேயில்லாமல் இருக்கிறீர்களா? பொருளாதார நெருக்கடியில் உள்ளீர்களா? உங்களுக்கு கிறிஸ்துமஸ் அற்புதம் நிகழ வேண்டுமா?

நமது பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய வழி முறைகளை கடவுளைப்போல நாமும் கையாள முயன்றோமென்றால், விரைவில் நாம் நம்பிக்கையை இழந்து விரக்தி அடைந்துவிடுவோம். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையின் அமைப்பை, உங்களால் மாற்றியமைக்க முடியாது என்பதை உங்கள் உள்ளான உள்ளத்தில், உங்களுக்கே நன்றாகத் தெரியும். என்னால் மாற்றியமைக்க முடியாது. எனது பிள்ளைகளைச் சரியான முறையில் வளர்க்க இயலாது, இந்த வியாதியை குணமாக்க என்னால் இயலாது போன்ற எண்ணங்கள் என்னை நம்பிக்கையற்றவனாகவும் விரக்தி அடைந்தவனாகவும் செய்கிறது. ஆனால், வல்லமையுள்ள தேவன் என்ற பெயரை உடையவரும் இந்த அண்ட சராசரங்களைப் படைத்த தேவனால் முடியாத காரியம் எதுவுமே கிடையாது.

மரியாளிடம் தேவதூதன் தோன்றி, “மரியாளே, இதோ நீ ஒரு குமாரனைப் பெறுவாய்” என்று கூறினபொழுது மரியாள் அது எப்படியாகும்? “புருஷனை அறியேனே” என்றாள். அப்பொழுது தேவதூதன் “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று கூறினான்.

இன்னொரு மிகச் சிறந்த சம்பவம்! (யோவான் 4). கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீ. அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். ஆனால் அச்சமயம் அவள் ஆறாவது மனிதன் ஒருவனுடன் வாழ்ந்து வந்தாள். அக்கலாச்சாரத்தின் அடிப்படையில் அவள் முற்றிலும் கைவிடப்பட்டவளாய் (ஒதுக்கி வைக்கப்பட்டவளாய்) வாழ்ந்து வந்தாள். அவள் முற்றிலும் நம்பிக்கையற்றவளாய் காணப்பட்டாள். சமுதாயம் அவளை வெறுத்து இழிவாக ஒதுக்கித் தள்ளிய நிலையில் புறக்கணிக்கப்பட்டவளாகக் காணப்பட்டாள். அவள் கிணற்றண்டைக்குச் சென்ற அந்த நாளில், வல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தையுடையவரை முகமுகமாய் அவள் தரிசிப்பாள் என்று யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஸ்திரீயே! நீ எதைத் தேடுகிறாய் என்பதை நான் அறிவேன். ஆனால் நீ தேடும் இடத்தில், நீ தேடும் பொருளைக் காணமுடியாது. நீ தாகத்தால் மரித்துக்கொண்டிருக்கிறாய். நான் ஜீவத்தண்ணீராய் வந்துள்ளேன். நீ இதுவரை வாஞ்சித்த அனைத்தும், இதுவரை நீ தேடிய அனைத்தும் – என்னைத்தான்; நீ வாஞ்சிக்கும் அனைத்தையும் நான் உனக்குத் தருவேன் என்றார்.

மற்றுமொரு சம்பவம் (யோவான் 5). முப்பத்தெட்டு வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் அந்த குளத்தினருகே படுத்திருந்தான். குளத்தின் தண்ணீர் கலக்கப்படும்பொழுது, குளத்தில் இறங்கினால் போதும்; உடனே சொஸ்தமடைவேன் என்பதை நம்பியிருந்தான். முப்பத்தெட்டு வருடங்கள் தண்ணீரில் இறங்கி சுகமடைய முயற்சி செய்தான். இதில் ஆச்சரியப்படத்தக்க காரியம் என்னவென்றால்; வல்லமையுள்ள தேவன் இயேசு பாலகனாக அவதரித்த அந்த நள்ளிரவின் வேளையில் அந்த மனிதன் எருசலேமிலிருந்து கல்லெறி தூரத்தில் இருந்த அந்தக் குளத்தின் அருகே எட்டு ஆண்டு காலமாக படுத்திருந்திருக்கிறார். வல்லமையுள்ள தேவன் அந்த நள்ளிரவில் மாமிசமாக அவதரித்தது அவனுக்கு தெரிந்திருக்குமோ இல்லையோ நாமறியோம். 30 ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தையாக அவதரித்த வல்லமையுள்ள தேவன் தன் இளமை பருவத்தில் 38 ஆண்டுகளாக அந்த குளத்தின் அருகே படுத்திருக்கும் தன்னைத் தொட்டு சுகமளிப்பார் என்று அவன் எவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க முடியும்? நம்பிக்கையற்ற நிலைமை என்று சொல்லுவதற்கு இடமே இல்லை.

தேவன் வல்லமையுள்ளவர் என்பதை நாம் விசுவாசிக்கும்பொழுது நாம் மனக்கலக்கம் கொள்ளவோ சோர்வடையவோ மாட்டோம். தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமே இல்லை!

4. அவர் நாமம் நித்திய பிதா

அவர் குமாரனானால் அவர் எப்படி பிதாவாக இருக்கமுடியும் என்று கேட்கிறீர்கள்? ஆம், பிதா என்ற பதத்திற்கு எபிரெய மொழியில் துவக்கமானவர் என்று பொருள்படும். கிரேக்க மொழியிலும் அதே பதம்தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அவர் துவக்கமானவர்! அதனால்தான் சாத்தானை பொய்யனும் பொய்க்கு பிதாவுமானவன் என்று அழைக்கிறோம். அவன் பொய்களுக்கெல்லாம் துவக்கமானவன். இவ்வாறு பிறந்த இயேசு, நித்தியத்திற்கு துவக்கமானவர் என்றும் தம் கரத்தில் நித்தியத்தை வைத்திருக்கிறவர் என்றும் இந்த வேதபகுதி கூறுகிறது.

இது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஏமாற்றங்களைப்பற்றி கூறுகிறது. நம்முடைய வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்று அநேகர் பகற் கனவு காண்பார்கள். ஆனால் அந்தக் கனவு பயங்கரமானதாக மாறும். என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நான் ஒரு சிறிதும் நினைக்கவில்லை என்றும், இதைவிட என் வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கும் என்று நினைத்தேன் என்று பெரும்பான்மையான மக்கள் கூறுவதுண்டு. என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நினைப்பவர்கள் ஏமாற்றங்களை எதிர்கொள்வார்கள். புதிய வானம், புதிய பூமியின் காலத்தில் “காலம்” என்பது இருக்குமா, இருக்காதா என்ற பெரும் பட்டிமன்றங்களே நடக்கும். இன்று நாம் அறிந்திருக்கிற அறிவின்படி, நிச்சயமாக அங்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த கிரமமான காலவரைக் கோடுகளும் ஒரே சீராக உயர்வுடன் கூடிய மாற்றங்களும் இருக்கும். ஆனால் “காலம்” என்பது இருக்கவே இருக்காது. இன்றைய உலகில் காலத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களை சிந்திப்பது சற்று கடினமான காரியம். நமது அறிவிற்கு எட்டியது அவ்வளவுதான்.

காலத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் காலம் நம் நண்பனல்ல. காலம் வெகு வேகமாக கடந்து செல்வதால் அது நமது எதிரி என்பதுதான் உண்மை. நாம் அநுபவிக்கும் ஒவ்வொரு வினாடியும் அற்புதமாகவும் நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருந்தாலும், நம் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள உள் உணர்வு இந்த நிலை கடந்துபோகும் (மாயை) என்று உணர்த்தும். காலம் இந்த நிலையை என்னிலிருந்து எடுத்துக்கொள்ளும். நமக்குத் தேவை என்று நாம் கருதும் அனைத்தையும் காலம் எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிடும்.

சிறுபிள்ளைகளையுடைய இளம் தம்பதியினரின் குடும்பங்களில் கிறிஸ்துமஸ் அன்று காலை குதூகலமும், பண்டம் பலகாரம் விருந்து கொண்டாட்டமும் நிரம்பி வழியும். முற்றிலும் குதூகலமும் கொண்டாட்டமும் நிரம்பி வழியும் எண்ணிப்பாருங்கள். காலம் செல்லச்செல்ல அந்த மகிழ்ச்சியின் கொண்டாட்டங்கள் குறைந்துவிடும். அந்த மகிழ்ச்சியான காலங்கள் ஒரு கனவைப் போல மறைந்துபோகும். இளமைப் பருவத்தில் அருமையாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளத்தில் நிலைத்திருந்தாலும் காலப்போக்கில் அந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மறைந்தே போகும். இதுதான் உண்மை என்று நீங்கள் நம்பாவிட்டால் இந்த வாரத்தில் ஒரு முதியோர் இல்லத்திற்குச் செல்லுங்கள். அவ்விடுதியில் தனிமையில் தங்கியிருக்கும் ஒரு முதியவரிடமோ, முதிய அம்மாவிடமோ கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்று, கிறிஸ்துமஸ் தினத்தைப் பற்றிப் பேசுங்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் இளம்பருவத்தில் தங்கள் இளம்பிள்ளைகளோடு குடும்பமாக கிறிஸ்துமஸை சிறப்பாக குதூகலமாகக் கொண்டாடிய இனிய காலங்களை நினைவுகூருவார்கள். அதை அவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க முடியவில்லை. இன்று கிறிஸ்துமஸ் நாளை தனிமையில் கொண்டாடுகிறோம் என்பார்கள். காலம் நமக்கு கொடுப்பது இதுதான். கிறிஸ்துமஸ் வாரம் இன்று உங்கள் வாழ்க்கையில் மிகமிக குதூகலமாக கொண்டாட்டமாக இருக்கலாம். இது நிலையான சந்தோஷம் அல்ல, காலம் ஓர் ஏமாற்று வித்தை. காலம் அனைத்தையும் கடந்தோடச் செய்யும்.

ஆம்! கிறிஸ்து பிறப்பின் சம்பவங்களை நாம் நன்கு அறிவோம். நமக்கு அந்த மகிமையின் நித்திய மீட்பை நமக்கு தந்தவர்தான் உலக இரட்சராக இம்மண்ணில் உதித்தவர். மனுக்குலத்தின் பாவத்தைப் போக்க முன்னணையில் பிறந்த இயேசு தம்மைத்தாமே ஏகபலியாக ஒப்புக்கொடுத்தார். நமது பாவத்தின் நிந்தையையும், அவமானத்தையும் போக்க வல்லமையுள்ள தேவனாகிய நித்திய பிதா, சிலுவையில் மரித்து தம் இரத்தத்தைச் சிந்த வேண்டியதாக இருந்தது. அதன் விளைவாக நாம் பாவம் மன்னிக்கப்பட்டவர்களாய் தேவனுடன் ஐக்கியம் கொள்ளும் பாக்கியத்தைப் பெறுகிறோம். நித்திய வாழ்வு எதற்கு? என்பதற்கு வேதம் கூறும் ஒரு காரணம் உண்டு. நித்திய ஜீவன் என்பது ஒரு காலக்கட்டத்தைக் குறிப்பது அல்ல. அது வாழ்க்கையின் தன்மை.

இயேசு உங்களுக்கு நித்திய ஜீவனை வாக்களிக்கும்பொழுது நீங்கள், நித்திய நித்திய காலமாய் வாழ்வது மட்டுமல்லாது நீங்கள் ஆவலுடன் வாஞ்சிப்பதைப் பெற்று மகிழ்வீர்கள். நித்தியத்திற்கு முடிவே இல்லை. நித்திய நித்திய காலமாய் நாம் அனுபவிக்கப் போகிறதை இப்பொழுது நாம் நிழலாட்டமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் இந்த ஆனந்த பாக்கியத்தை நாம் பெற்று அனுபவிக்கப் போகிறதற்குக் காரணம் இயேசுவின் சிலுவை மரணமே. இதை அவர் இலவசமான ஒரு பரிசாக அளிக்கிறார். கிறிஸ்துமஸின் அடிப்படை சாராம்சமே இதுதான்.

5. அவர் நாமம் சமாதானப்பிரபு

இன்று யாருக்காவது அச்சம், பேராவல் கோபம் இருக்கிறதா? ஆனால் சமாதானம் தருகிறவர் ஒருவர் இருக்கிறார். அவர் தருவது, புயல்களுக்கு மத்தியில் சமாதானம்! (அமைதி). விவரிக்க இயலாத தேவசமாதானம் என்னை ஆட்கொண்டது என்று பவுல் அப்போஸ்தலன் சிறைச்சாலையிலிருந்து எழுதியிருக்கிறார். அது கொந்தளிக்கும் புயல்கள் மத்தியில் காணப்படும் சமாதானமாகும்! எனக்குப் பிரியமானவற்றைத் தெய்வமாகக்கொண்டு அதன் அடிப்படையில் சுயத்தில் நான் வாழ்ந்தால், என் வாழ்க்கையானது பயமும், குழப்பமும் நிறைந்த அமைதியற்ற வாழ்க்கையாகவே காணப்படும். ஏனெனில் உள்ளான மனிதனில் நான் தேவனுக்கு முன்னிலையில் தகுதியற்றவனாகவே காணப்படுகிறேன். என் சுயம் என்னை ஆட்கொண்டால் பயம் என்னில் ஏற்படுவது நிச்சயம். ஆனால் சமாதானப் பிரபுவாகிய தேவனிடம் நான் என்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும்பொழுது அந்தகணமே சமாதானம் என்னை ஆட்கொள்ளும் என்பது நிச்சயம்.

அந்த சமாதானம் வாழ்க்கையில் புயல் அடியாத நிலையில் கிடைக்கும் சமாதானம் அல்ல. கொந்தளிக்கும் புயலின் மத்தியில் சமாதானம். ஆனால் ஒருவருக்குத் தேவையான, போதுமான அனைத்து வசதிகளும் இருக்கும்பொழுது இருப்பதே “சமாதானம்” என்று ஒருவர் சமாதானத்திற்கு விளக்கம் கூறியிருந்தார். ஆனால் என் வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும், எந்தவித குழப்பமோ பயமோ இன்றி அதன் வழியாக சமாதானமாக, அமைதலாகக் கடந்து செல்வேன். இதைவிட ஒளிமயமான நாளைச் சந்திப்பேன் என்பதும் உறுதி.

இப்படிப்பட்ட கற்பனை நிகழ்வுகளை நமது பிள்ளைகளிடம் பல விதங்களில் காணமுடியும். நம் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்பொழுது வசந்த காலத்திலோ, கோடை காலத்திலோ புயல் வீசுவது போன்றும், இடியும் மின்னலும் வீட்டைத் தாக்கி வீட்டையே அசைப்பது போன்றும் பல காரியங்கள் நடந்திருக்கலாம். அப்படி அந்தப் பிள்ளைகள் என்னதான் செய்தார்கள்? அவர்கள் எழுந்து அப்பா, அம்மா அறைக்கு ஓடி அவர்களிடம் செல்வர். இப்படிப்பட்ட இடி மின்னல்களைத் தடுத்து நிறுத்த அப்பா, அம்மாவினால் முடியாது. ஆனால் அந்த பிள்ளைகள் அம்மா அப்பாவுடன் இருக்கும் பொழுது தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது மகள் ஆஷ்லே நான்கு வயதாக இருக்கும்போது நான் ஒரு வாலிப முகாமில் செய்தி கொடுக்கச் சென்றிருந்தேன். அந்த முகாமின் கடைசி நாள் இரவில் முகாமில் கலந்துகொண்ட அனைவரும் அங்குள்ள மலையின் வடபுறமுள்ள மிகவும் இயற்கை காட்சிகள் நிறைந்த நெப்ராஸ்கா மலை மீது ஏறச்சென்றார்கள். அங்கு அவர்கள் காம்ப் ஃபயரை முடித்து அந்த ஒரு வார முகாமை முடிவு செய்ய விரும்பினார்கள். எனவே நாங்கள் அங்கே புறப்பட்டுச் சென்றோம்.

அந்த மாலை மிகவும் இதமாகவும் இனிமையாகவும் இருந்தது. ஆனால் திடீரென புயல் அடிக்கத் துவங்கியவுடன் இடியும் மின்னலும் எங்களைத் தாக்க ஆரம்பித்ததால், நிலைமை மிகவும் மோசமாக மாறியது. எனவே அனைவரும் போன வேகத்தில் மலையிலிருந்து கீழிறங்க ஆரம்பித்தோம். அது ஆபத்தாகக் காணப்படாவிட்டாலும் அந்த இருட்டு வேளை எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் நம்பிக்கையற்ற தன்மையைக் கொடுத்தது. ஆனால் அப்படி நாங்கள் மலையைவிட்டு கீழே இறங்கும்பொழுது ஆஷ்லேயை நான் சற்று கவனிக்கவேண்டிய நிலையில் அவள் விருப்பப்படி அவளை தூக்கிக் கொண்டு நடக்கும்போது இடியும் மின்னலும் எங்களைத் தாக்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழையும் பொழிந்தது. சேறும் சகதியுமான மலைப்பகுதியில் தட்டுத் தடுமாறி எங்கள் பாதையையும் கண்டுபிடித்து நடக்க நேர்ந்தது. அது சற்று அமைதியும், இனிமையுமான பயணமாக இருந்தது. இவ்வாறு மலையடிவாரத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தபொழுது என் மகள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்று நினைக்கிறீர்கள்? அவள் என் தோளின்மீது படுத்து அயர்ந்த நித்திரை செய்து கொண்டிருந்தாள். இடி மின்னலைக் கட்டுப்படுத்த எனக்கு வலிமை கிடையாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு மலையிலிருந்து அடிவாரம் வரை சுமந்து வந்தேன் என்பதும் அவளுக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் அவள் தன் தகப்பனின் கரத்தில் இருக்கும்வரை தனக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்பதில் அவளுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து வரும்பொழுது, நமது பாதுகாப்பு அரண் பெலவீனமுள்ளது என்பதை நன்கு அறிந்துகொள்வார்கள். என் தந்தை எப்பொழுதும் பாதுகாக்கும் அரணாக இருப்பார் என்ற தனது எண்ணம் முற்றிலும் தவறானது என்பதை அறிந்தவர்களாய் தங்கள் பரமத் தந்தையே நிரந்தர பாதுகாப்பு என்று அறிந்து அவரையே சார்ந்துகொள்வார்கள். இப்படித்தான் நாம் தேவன் மீது முற்றிலும் நம் நம்பிக்கையை வைக்க ஆரம்பிக்கிறோம். என் வாழ்க்கைப் பாதையில் என்னவிதமான இடர்பாடுகளை நான் சந்திக்க நேர்ந்தாலும் எனக்கு ஓர் அடைக்கலப் பட்டணம் உண்டு என்றும், அதில் நான் பாதுகாப்புடன் இருப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. என் வாழ்க்கையில் எவ்வித பயங்கரமான புயல்கள் அடித்தாலும் அதை மேற்கொள்ளத் தேவையான அத்தனையையும் சந்திக்க எனக்கு ஒருவர் இருக்கிறார். அவர் என்னை அந்த துன்பத்தின் பாதைகளின் வழியே சுகமாய் நடத்தி எனக்கு சமாதானம் கட்டளையிடுவார்.

உங்கள் வாழ்க்கையில் சலிப்பை உணர்கிறீர்களா? அது உங்களைச் சஞ்சலப்படுத்துகிறதா? சஞ்சலப்படும் உங்கள் வாழ்க்கையை அற்புதங்களால் நிறைத்து உங்களை மகிழ்வுக்குள்ளாக்க இவ்வுலகிற்கு வந்த ஒருவரை உங்களுக்கு நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன். அவர் அதிசயமானவர்!

உங்கள் வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அல்லது உங்கள் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் யாரேனும் கலங்கித் தவிக்கிறீர்களா? உங்கள் ஆலோசனைக் கர்த்தாவாக ஒருவர் வந்திருக்கிறார். அவர் தவறு செய்யமாட்டார். வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் எவ்விதக் கட்டணமுமின்றி உங்கள் ஆலோசகராக செயல்பட ஆயத்தமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கு அருமையானவர்களே! உங்களுக்கு கிறிஸ்துமஸின் அற்புதம் தேவையா? இவ்வுலகிற்கு பாலகனாக வந்துதித்தவர் வல்லமையுள்ள தேவன் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அண்ட சராசரங்களையும் தன் வார்த்தையினாலே சிருஷ்டித்தவர். எனவே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீக்குவது என்பது அவருக்கு ஒரு கடினமான காரியமா? உங்கள் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையா?

என் வாழ்க்கை இப்படி இருக்கும் என்று நான் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா? வாழ்க்கையில் அப்படி சில தருணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அத்தருணங்கள் வரும், போகும். உங்கள் வாழ்க்கையில் முடிவே இல்லாத மறக்க முடியாத தருணங்களையே உங்கள் உள்ளான மனம் வாஞ்சிக்கிறது. அந்த வாஞ்சைதான் நித்திய பிதாவாக வந்துதித்தவர்! அவர்தான் உங்களுக்கு நித்திய ஜீவனையும் ஒருபோதும் அழியாத தருணங்களையும் நமக்களிக்கிறார்.

யாரேனும் பயத்துடனும் ஆவலுடனும் இருக்கிறீர்களா? இவ்வுலகிற்கு வந்துதித்தவர் சமாதானப் பிரபு! உங்கள் வாழ்க்கையில் இப்பொழுது அடித்துக்கொண்டிருக்கும் புயல் போன்ற கஷ்டங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவர் உங்களுக்கு ஓர் அடைக்கல பட்டணமாக இருக்கிறார். அவர் உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து உங்களுக்கு சமாதானம் அருளுவார் என்று வாக்களிக்கிறார். அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் போகும்.

மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

மொழியாக்கம்: Mrs.Sweetleen / Mrs.Jeya Suseelan


பெத்தலையில் பெருவிளக்கு

காரிருளை கிழித்திறங்கி
காட்டி வந்த நட்சத்திரம்
காபிரியேல் செய்தி கூறி
கண்டாரே ஓர் சத்திரம்

பெத்தலையில் வந்துதித்த
பேறான பெருவிளக்கு
பெருமிதம் கொண்டு பாடும்
பேரின்ப ஒளிவிளக்கு

ஆட்டிடையர் போற்றி நின்ற
அன்பான மகிமைச் சின்னம்
ஆனிரைகள் நோக்கி நின்ற
அதிசய அன்பின் சின்னம்

நட்சத்திரம் உதித்து நின்று
நல்லொளியைக் காட்டி நிற்க
பெத்தலையில் தொழுவத்திலே
சத்தியர் வந்துதித்தார்

உலகின் பாவ இருள் அகல
உதித்திட்ட மகிமை ஒளி
வெறுமை வாழ்வு விட்டகல
வெற்றியின் விடியலானார்

– எஸ்.தர்மகுலசிங்கம் –