சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2021)

அருமையானவர்களே, நம்முடைய ஆண்ட வராகிய இயேசுவானவர் உயிர்த்தெழுந்தார். உண்மையாகவே நம்முடைய வாழ்க்கையிலே மிக முக்கியமான ஒருநாள் இருக்குமென்றால் அது ஈஸ்டர் அல்லது கர்த்தர் உயிர்த்தெழுந்த திருநாளாகும். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளானது, திருச்சபைக்கு மாத்திரமல்ல, உலகம் அனைத்திற்குமே, ஒரு திருப்புமுனை அதிகாரங்கள் என்று சொல்லலாம். இயேசுகிறிஸ்து கர்த்தராக, மீட்பராக, இராஜாதி இராஜாவாக, அறிவிக்கப்படுவதற்கு காரணம் என்னவென்றால் அவர் உயிரோடுகூட எழுந்தார். யோவான் நற்செய்தி நூல் 20ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள். வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக் கண்டாள் (வச.1).

உயிர்த்தெழுதல் என்பது, நற்செய்தியினுடைய அஸ்திபாரமாக காணப்படுகிறது. ஆன்ட்ரு முரே என்கிற தேவமனிதன் சொல்லுகின்றார், கிறிஸ்துவானவர் எனக்காக என்ன செய்தார் என்பதை நற்செய்தி நூல் சொல்கின்றது. ஆனால், சிலுவையிலே அவர் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததன் மூலமாக, கற்றுக்கொள்ளுகிற செய்தி என்னவென்றால் ஆண்டவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.

நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்துவானவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு என்னென்ன அத்தாட்சிகள் என்று பலர் கேட்கலாம்? திருமறையின் அடிப்படையிலே வேதாகமத்தின் அடிப்படையிலே, சூழ்நிலையின் அடிப்படையிலே, வரலாற்றின் அடிப்படையிலே நம்முடைய ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பல அத்தாட்சிகள் இருக்கிறது. ஏசாயா 53:8-12 வரை வாசித்தால் அவருடைய பிறப்பிற்கு முன்பாக சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால், நம் ஆண்டவர் மரிப்பதும், உயிரோடு எழுந்திருப்பதும், அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இது மிக முக்கியமான ஒரு காரியமாகும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய அந்த மரணமானது ஆண்டவராலே சொல்லப்பட்டிருக்கிறது. அவரது மரணத்திலிருந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பது குறித்து இயேசுவே மத்தேயு 12:38-40 வரையுள்ள வசனங்களில் முன்னுரைத்ததைப் பார்க்கிறோம். யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் (வச.40). நம்முடைய ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அது மிகவும் உண்மை. அவர் இறந்த பிற்பாடு அவரை கல்லறையில் வைத்தார்கள். ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அவர் உயிரோடு எழுந்ததற்கு அடையாளம் என்னவென்றால், அவருடைய வெறுமையான கல்லறையாகும்.

முதலாவதாக, இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு, திருமறையின் அடிப்படையிலே அடையாளம் என்னவென்றால், திருச்சபையினுடைய வளர்ச்சியும் அநேகருடைய மாற்றப்பட்ட வாழ்க்கையும் என்று நாம் சொல்லலாம். இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த பிற்பாடு, அநேகருக்கு உயிருள்ளவராக தன்னைக் காண்பித்தார் என்று வேதம் சொல்லுகிறது (மத்.28:9). அவர் .. அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் (அப்.1:3).

இரண்டாவதாக, இயேசுவானவர் மரித்து உயிர்த்தெழுந்ததை, வேதத்தில் நாம் காணும் சூழ்நிலைகளைக் கொண்டும் விளங்கிக்கொள்ளலாம். அவரது சீடர்களின் வாழ்க்கை மாறியது. அவர்கள் கடைசிவரை அவருடைய உயிர்த்தெழுதலிலே நம்பிக்கை உடையவர்களாயிருந்தார்கள். அதே சமயத்திலே முன்பு, யூதருடைய ஓய்வு நாள் அங்கு கொண்டாடினார்கள். இப்பொழுது கர்த்தருடைய உயிர்த்தெழுந்த நாளைத்தான் ஆராதிக்கிற நாளாக கொண்டாடினார்கள். அதுமாத்திரமல்லாமல், அவரது சபை வளர ஆரம்பித்தது, சபைகள் பெருகிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் திருமறையின் அடிப்படையிலும் அதே சமயத்திலே, சூழ்நிலையின் அடிப்படையிலும் நம் ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்குரிய அடையாளங்களாகும்.

முன்றாவதாக, சரித்திரபூர்வமாகவும் (Historical) அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு இரண்டு காரியங்களைத் தியானிப்போம். தாமஸ் அர்னால்டு என்கிற ஒருவர் இருந்தார். The Modern History of Oxford University என்கிறதான அந்த யுனிவர்சிட்டியிலே அவர் ஒரு பெரிய சரித்திர ஆசிரியர் ஆவார், ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு சிறந்த பூரணமான அடையாளங்கள் அல்லது அத்தாட்சிகள் உண்டு என்று மிக விளக்கமாக அவர் தனது நூலிலே எழுதுகிறார். ஜோசபஸ் என்கிற ஒரு சரித்திர ஆசிரியர் முதல் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். இவர் அந்த அரசாங்கத்தாலே நியமிக்கப்பட்ட ஒரு நல்ல சரித்திர ஆசிரியர் ஆவர். இவர் அந்நாட்களில் நடந்த எல்லாக் காரியங்களையும், மிக உண்மையாகவும் யதார்த்தமாகவும், சத்தியமாகவும் எழுதுகிறவர். அவர் சொல்லுகிறார்: இயேசுவானவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பத்தாயிரத்திற்கும் மேலான அதிசயமான சான்றுகள் இருப்பதாக அவர் எழுதுகிறார்.

ஆகவே அருமையானவர்களே, நம்முடைய ஆண்டவர் உயிர்த்தெழுந்தது உண்மை. அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அடையாளம் என்ன? மாற்றப்பட்ட மக்களுடைய வாழ்க்கை, வளர்ந்து பெருகும் திருச்சபை. அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு ஒரு பெரிய அடையாளமாகும். அவர் நம் ஜெபங்களுக்கு கொடுக்கிற பதில்கள். அதுமட்டுமல்ல, ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை அவர் தம்முடைய ஜனத்திற்கு தருவதுமாகும்.

பிரியமானவர்களே! நம்முடைய ஆண்ட வராகிய இயேசுவானவர் உயிர்த்தெழுந்ததினால் நமக்கு கிடைக்கிற ஆசீர்வாதங்களைக் குறித்து நாம் பார்க்கலாம்.

புதியவாழ்க்கை:

முதலாவது, ஆசீர்வாதம் என்னவென்றால், ஒரு புதிய வாழ்க்கை (A New Life) நமக்கு கிடைக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே அவரை ஏற்றுக்கொண்ட அத்தனை மக்களுக்கும் ஒரு புது வாழ்க்கையைத் தருகிறார். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின (2கொரி. 5:17). இரண்டு நபர்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஒன்று, பேதுரு அப்போஸ்தலன். மத்.26:69-74 வரையிலும் வாசிக்கிறோம். அவன் இயேசுவைத் தெரியாது, அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். இதே பேதுரு உயிர்த்தெழுந்த ஆண்டவரைத் தரிசித்த பிற்பாடு, அவன் அநேக ஜனங்களுக்கு முன்பாக நின்று, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள் (அப்.3:15) என்று துணிச்சலோடும் சவாலாகவும் பேசினான். பேதுருவுக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது யார் என்று சொன்னால், உயிர்த்தெழுந்த அந்த ஆண்டவர் கொடுத்த நம்பிக்கைதான்!

இரண்டாவது, பவுல் அப்போஸ்தலன். இவன் சபையை துன்பப்படுத்தினவன். நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன் (பிலி. 3:6). அப்படிப்பட்ட ஒரு மனிதன், ஆண்டவருடைய திருச்சபையைத் துன்பப்படுத்துகிறான். இயேசுவை மததுரோகி என்று கருதினான். கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறி … பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோதுதான் பெரிய வெளிச்சத்திலிருந்து தன்னோடு பேசுகிற உயிர்த்தெழுந்த ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்று சொல்லி ஆண்டவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறதை அப்.9 ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். திருச்சபையைத் துன்பப்படுத்தின மனிதனை ஆண்டவர் சந்தித்தப்பின் ஆண்டவருக்காக பாடுபடுகிறவனாகவும், அவரது சபையைக் கட்டுகிற மனிதனாயும் மாறினான். இந்த இரண்டு பேரையும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் மாற்றினார். இதேபோல உங்களையும் என்னையும் மாற்ற அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

புதிய புரிந்துகொள்ளுதல்:

உயிர்த்தெழுந்த ஆண்டவர் கொடுக்கிற இரண்டாவது ஆசீர்வாதம், புதிய புரிந்து கொள்ளுதல் (A New Understanding). ஆண்டவரையும், வசனத்தையும், உலகத்தையும், திருச்சபையையும் புரிந்துகொள்வதற்கு ஆண்டவர் உதவி செய்கிறார். சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தை சவுல் கேட்டான் அல்லவா? சவுல் இயேசுவை சிலுவையில் அறையவில்லை, அவரது விலாவிலே குத்தவில்லை, ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய் என்று ஆண்டவர் தன்னிடத்தில் கேட்டதின் அர்த்தத்தைப் பின்பு திருச்சபையானது ஆண்டவருடைய சரீரமென தனது நிருபத்திலே எழுதுகிறார் (எபே.4:11-16). ஆகவே ஆண்டவரையும், அவருடைய வசனத்தின் தன்மையையும் புரிந்துகொள்கிற அறிவைத் தருகிறார். லூக்கா 24:13-27 வரையுள்ள சம்பவத்தில் எம்மாவூர் சீடர்களிடத்தில், தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என்று அவர்களை கடிந்துகொண்டு, வேத வாக்கியங்களிலிருந்து தம்மைக் குறித்து சொல்லியதை விளக்கி காண்பித்தபொழுது, அந்த சீடருடைய உள்ளம் கொழுந்துவிட்டு எரிந்ததை அவர்கள் உணர்ந்தும் புரிந்துகொண்டார்கள்.

இதைப்போன்று இன்று நமக்கும் வேத வசனத்தை, கிறிஸ்துவின் வல்லமையை, சபையின் வலிமையை, நித்தியத்தை அறிந்துகொள்ள, உயிர்த்தெழுந்த ஆண்டவர் நமக்கு புதிய புரிந்துகொள்ளுதலைத் தருகிறார், நாம் ஒரு செய்தித்தாளைப் படிப்பதுபோல, திருமறையை அறிந்துகொள்ள முடியாது. திருமறையை அறிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஆண்டவரே நமக்கு உதவி செய்கிறார்.

புதிய வல்லமையைத் தருகிறார்:

உயிர்த்தெழுந்த ஆண்டவர் தரும் மூன்றாவது ஆசீர்வாதம், புதிய வல்லமையைத் தருகிறார். லூக்கா 24ஆம் அதிகாரம் 47 முதல் 51 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார் (வச.49). புதிய மனிதனாய் மாற்றி, புதிய புரிந்துகொள்ளுதலைத் தரும் ஆண்டவர் உன்னதத்திலிருந்து வரும் வல்லமையாலும் நம்மை நிரப்புகிறவராய் இருக்கிறார். அருமையானவர்களே, உன்னதத்திலிருந்து வரும் அந்த வல்லமையினாலே தரிப்பிக்கப்படும்பொழுது, கோழையாயிருந்த சீடர்கள் பெலனடைந்தார்கள். பயந்திருந்தவர்கள் பெலசாலியாக மாறினார்கள். ஞானமற்றவர்கள் ஞானத்தோடு வாழ ஆரம்பித்தார்கள். பாடுகளுக்கு பயந்து ஓடினவர்கள், ஆண்டவருக்காக பாடுபட ஆரம்பித்தார்கள். மட்டுமல்ல, அவர்கள் சரித்திரத்தையே அசைத்தார்கள், உலகத்தையே தலைகீழாக மாற்றினார்கள், அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்களை நடுங்க வைத்தார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன? சுயபலம் அல்ல, பணபலம் அல்ல, ஆள்பலம் அல்ல, தேவன் தந்தருளின பரிசுத்தாவியானவரின் பெலன்!

ஆகவே, உயிர்த்தெழுந்த ஆண்டவர் உன்னத பெலத்தினாலே நம்மையும் நிரப்பி அவருக்காய் வாழ கிருபை செய்வார்!