எஸ்.ஜீ.யோகநாதன்
(நவம்பர்-டிசம்பர் 2021)

இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (மத்.2:9,10).


கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் மக்களுடைய வாழ்க்கையில் குதூகலம். குழந்தைகளைப் பொறுத்தமட்டில், அதனுடைய அர்த்தம் தெரியாத போதிலும், கிறிஸ்துமஸ் நாட்களில் நடைபெறும் இன்பகரமான காரியங்கள் அவர்களுக்கு கிறிஸ்துமஸ் ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக்கிவிடுகின்றது. இன்று அநேக கிறிஸ்தவர்களும் இவ்வாறு குழந்தைகளைப்போல தாங்கள் செய்வது என்ன வென்று தெரியாமல் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தில் பல பொருட்கள், நபர்கள், சம்பவங்கள் நமக்கு ஞாபகத்தில் வரும். அதில் ஒன்று நட்சத்திரம்!

இது குழந்தைகளை மகிழ்விக்கும் ஒரு காரியமாகும். வீட்டுக்கு வீடு அழகிய நட்சத்திரங்களை செய்து அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எழுதி தொங்கவிட்டிருப்பார்கள். சிலர் அந்த நட்சத்திரத்தினுள் ஒரு மின்சார பல்பை மாட்டி அது விட்டு விட்டு எரியும்படிச் செய்து உயரத்தில் தொங்கவிட்டு மகிழ்ச்சியடைவார்கள். இதைவிட பெரிய மகிழ்ச்சியும் ஆனந்தமும் இந்த நட்சத்திரத்தைக் குறித்து உண்டு. அதைப்பற்றி தியானிப்பது கிறிஸ்துமஸை சரியான விதத்தில் கொண்டாட உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

ஆளுகை செய்யும் நட்சத்திரம்

ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் (எண்.24:17). இது ஒரு சாதாரண நட்சத்திரமல்ல. இது தீர்க்கதரிசிகளால் முன்குறிக்கப்பட்ட ஒரு நட்சத்திரம். இஸ்ரவேலை ஆளுகை செய்ய எழும்பிய செங்கோலே அந்த நட்சத்திரமான இயேசு கிறிஸ்து! எனவே, உங்கள் வீட்டில் இந்நாட்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் நட்சத்திரம் இதைத்தான் குறிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் நட்சத்திரத்தை செய்து மாட்டியிருக்கலாம். அது பெயரளவில் மாட்டப்பட்ட நட்சத்திரமாக இருந்திருக்கலாம். உங்களை தேவன் ஆளுகை செய்ய இடங்கொடாமல், நட்சத்திரத்தைத் தொங்கவிடுவதில் அர்த்தமில்லை. இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் ஓர் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். இயேசுவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் நீங்கள் அவர் உங்கள் உள்ளத்தில் பிறந்த தினத்தையும் உங்களை ஆளுகை செய்ய உங்களை நீங்கள் ஒப்புக்கொடுத்த தினத்தையும் உங்களுக்கு நினைவூட்டட்டும்.

கிறிஸ்துமஸ் காலத்தில் நட்சத்திரத்தை தொங்கவிடும்போது என்னை ஆளுகிறவர் பிறந்திருக்கிறார் என்ற எண்ணத்துடன் அதைத் தொங்கவிடுங்கள். அந்த நட்சத்திரத்தைக் காட்டி என்னை ஆளுகிறவர் பிறந்திருக்கின்றார். அதன் அடையாளம்தான் இந்த நட்சத்திரம் என்று மற்றவர்களுக்கும், உங்கள் இல்லங்களுக்கு வருகிறவர்களுக்கும் கூறுங்கள். ஏனென்றால் கிறிஸ்து பிறப்பின்போது அந்த நட்சத்திரத்தைக் கண்ட சாஸ்திரிகள், யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை பணிந்துகொள்ள வந்தோம் (மத்.2:2) என்று கேட்டார்கள். இன்று உங்கள் வீட்டில் இருக்கும் நட்சத்திரம் உங்கள் ராஜாவைக் குறிக்கிறதா? அவர் உங்களுக்கு ராஜாவாக இல்லாதிருந்தால் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவரை நீங்கள் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. இன்று அவர் உங்கள் உள்ளத்தில் ராஜாவாகப் பிறக்கட்டும். அதனைக் கொண்டாடுங்கள்.

அடையாளமான நட்சத்திரம்

…..கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமிற்கு வந்து….(மத்.2:1).

வானத்தில் தோன்றிய நட்சத்திரம் சாஸ்திரிகளுக்கு, ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை அடையாளம் காட்டியதுமட்டுமல்ல, அவர்களைத் தேடவும் வைத்தது. சாதாரண மனுஷன் அதனைப் பார்த்திருப்பானாகில் அதன் அர்த்தம் என்னவென்று அறிந்துகொள்ளமாட்டான். ஆனால், ஞானிகள் அதைக் கண்டபோது, ஆளுகை செய்யும் ராஜா பிறந்திருக்கிறார் என்றும், அவர் பணிந்து கொள்ளப்பட வேண்டிய ராஜா என்பதையும் உணர்ந்து அவரைத் தேடிவந்தனர்.

இன்று பாவத்தோடு இருக்கும் மனிதன் அந்த நட்சத்திரத்தைக் கண்டவுடன் தன்னை பாவத்திலிருந்து மீட்டுக்கொள்ளக் கூடியவர் பிறந்துவிட்டார் என்ற உணர்வு அவனுக்கு வரவேண்டும். சாஸ்திரிகளுக்கு மட்டும்தான் அதன் அர்த்தம் விளங்கியதுபோல, பாவிகளுக்கு மட்டும்தான் அதன் அர்த்தம் விளங்கியிருக்க முடியும். ஒருவன் தன்னை பரிசுத்தவான் என எண்ணினால் தனக்கு ஒரு மீட்பர் அல்லது தன்னை விடுதலையாக்குபவர் தேவை என்பதை அவன் உணர்ந்து கொள்ளமாட்டான். ஆனால், பாவியோ தான் பாவத்தில் அடிமைப்பட்டுள்ளதை அறிந்துள்ளதால் தன்னை விடுதலையாக்க ஒருவர் தேவை என்பதை அறிந்துகொள்வான்.

நீங்கள் பல வருடங்களாகக் கிறிஸ்துமஸை கொண்டாடியிருக்கலாம். ஆனால், உங்களுக்கு ஒரு மீட்பர் தேவை என்பதை எப்பொழுதாவது உணர்ந்துகொண்டீர்களா? கிறிஸ்துமஸ் தினத்தில் நட்சத்திரத்தைக் காணும்போது என்னை மீட்கக்கூடியவர் பிறந்துள்ளார் என்ற உணர்வு உங்களுக்கு வருகிறதா?

சாஸ்திரிகள் உணர்ந்துகொண்டதோடு நிறுத்திவிடாமல் அவரைத் தேடியும் வந்தார்கள். ராஜா பிறந்துள்ளார் என்பதை அறிந்துகொண்ட சாஸ்திரிகள் அறிந்துவிட்டு சும்மா இருக்கவில்லை. அவரைத் தேடி பணிந்துகொள்ள வருகிறார்கள். கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடும் அநேக கிறிஸ்தவர்கள், தங்களுக்கு ஒரு மீட்பர் தேவை என்பதை உணர்ந்துகொள்வதில்லை. காரணம், தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரஞ்சத்தின் தேவனானானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கியிருக்கிறான் (2கொரி.4:4).

பல வருடமாக நீங்கள் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடியிருக்கலாம். அப்போதெல்லாம் தோன்றிய நட்சத்திரமானவரின் ஒளியை நீங்கள் கண்டு கொள்ளாதபடி சாத்தான் களியாட்டங்களையும், ஆடம்பரங்களையும் காட்டி உங்கள் கண்களைக் குருடாக்கி இருந்ததால், இவ்வருடமாவது அந்தக் கண் திறக்கப்படட்டும். நட்சத்திரத்தின் ஒளியை இந்த வருடத்தில் நீங்கள் கண்டுகொண்டு சாஸ்திரிகளைப்போல அவரைத் தேடி வரத் தயாராக இருக்கின்றீர்களா? அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவரைப் பணியத் தேடியும் வரவேண்டும். அவரைக் கண்டுகொள்ளாமல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை, இந்த வருடம் அவரைத் கண்டுகொண்டவர்களாக கொண்டாடுங்கள்.

ஆனந்தமடையச் செய்த நட்சத்திரம்

அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (மத். 2:10).

அந்த நட்சத்திரத்தை சாஸ்திரிகள் கண்டபோது அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சிக்கான காரணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் (ஏசா.9:2) என்ற வசனத்தின்படி வந்த மாற்றம்தான் என்பதைக் கண்டுகொள்ள முடியும். வருடா வருடம் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் இன்னும் இருளிலேயே இருந்த வண்ணமாக அதைக் கொண்டாடினால் அது மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லவா? உங்கள் வாழ்க்கையின் இருளாகிய பாவங்களான விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (கலா.5:19,21) ஆகியவற்றுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடாமல், ஒளியாகிய கிறிஸ்துவை இந்த வருடத்தில் கண்டுகொண்டு அந்த ஆனந்த சந்தோஷத்துடன் இந்நாளைக் கொண்டாடுங்கள்.

அற்புத வழிகாட்டியான நட்சத்திரம்

நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது (மத்.2:9).

சாஸ்திரிகள் மீண்டும் அந்த நட்சத்திரத்தைக் கண்டு அதன் வழியில் சென்றபோது பிள்ளை இருக்குமிடத்திற்கு அது சாஸ்திரிகளை அழைத்து வந்தது. அந்த சாஸ்திரிகள் எதைக் கண்டுகொள்ள வேண்டுமோ அதைக் கண்டுகொள்ள வைத்தது. சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் அவர்களை யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரத்தைக் காண வழிநடத்தியது. ஆனால், நாம் நினைவுகூரும் இந்த நட்சத்திரமோ நித்திய ஜீவனுக்கு நேராக நம்மை வழி நடத்துவதுமன்றி, அவரே வழியாகவும் வந்தார். எனவே, கிறிஸ்துமஸ் தினத்தை நினைவுகூரும் ஒவ்வொருவரும் தன்னை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துகிறவரே வழியாக பிறந்துள்ளார் என்பதை நினைவுகூரவேண்டும்.

சாஸ்திரிகள் சென்று அடையவேண்டிய இடத்திற்கு அந்த நட்சத்திரம் அவர்களை வழி நடத்திச் சென்றது. நாமும் அடையவேண்டிய இடம் ஒன்று உண்டு. அதனை அடையத்தக்க வழியில் நாம் நடக்கிறோமா? நானே வழி (யோவான் 14:6), என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 10:9) என்ற ஆண்டவரின் வாக்கின்படி அவர் வழியில் நடப்போம்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் வழிகாட்டும் நட்சத்திரமாகிய கிறிஸ்துதாமே உங்களை வழி நடத்தி நித்தியத்தின் பாதையில் அழைத்துச் செல்வாராக!