Bro.K.P.ஆபிரகாம்
(நவம்பர்-டிசம்பர் 2021)

வாசகர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாக அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.

கிறிஸ்துமஸ் காலம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் நாட்கள். அதேபோல நம் தேசத்திலுள்ள ஆண்டவரைப்பற்றி அறியாத ஏனைய மக்களுக்கும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் நோக்கத்தை எடுத்துரைக்க தகுந்த நாட்களாய் காணப்படுகிறது. இப்படிப்பட்ட பாரத்தோடு இந்நாட்களைப் பிரயோஜனப்படுத்துகிற ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கும் தேவன் நிறைவான பலனைத் தந்தருளுவாராக!

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் உதிப்பதற்கு முன்னதாக ஏறத்தாழ 400 ஆண்டுகள் இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்திலே அமைதி நிறைந்த நாட்களாயும் இருண்ட காலமாயும் காணப்பட்டது. ஏனென்றால், அந்த காலகட்டத்தில் தேவனிடமிருந்து மக்களுக்கு எந்தவொரு வார்த்தையும் கிடைக்கவில்லை, எந்தவொரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. அந்நாட்களின் முடிவில் யூத மக்கள் ரோமர்களினால் அடிமைப்பட்டிருந்த அந்த வேளையில் தேவன் தமது கால கடிகாரத்தின்படி செயலாற்ற ஆரம்பித்தார். தங்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்க ஒரு மேசியா வெளிப்படுவார் என இஸ்ரவேலர் எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பின்படியே, மனுக்குல முழுவதையுமே பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியாக தேவகுமாரன் மனுஷகுமாரனாக பரலோகத்தை விட்டிறங்கினார்.

அவ்வாறு மேசியாவின் வருகையை எதிர் பார்த்திருந்தவர்களில் ஒருவர்தான் முதிர் வயதான சிமியோன்! இந்த சிமியோன் எப்படிப்பட்ட அந்துஸ்துள்ளவராக வாழ்ந்தார் என்று பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அவர் ஒரு தேவாலயத்தில் பணியாற்றும் ஆசாரியராகவோ அல்லது லேவியனாகவோ இருந்ததாகத் தெரியவில்லை. அவரைப்பற்றி வேதாகமத்தில், சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான் (லூக்.2:25) என்றுமட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அவர் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த சிமியோனுக்கும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்ததான தெளிவான வெளிப்பாடு கிடைத்தது. தேவாலயத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சிமியோனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள் (லூக்.2:33). அந்தளவுக்கு சிமியோனுடைய தரிசனம் அவர்களை ஆச்சரியத்துக்குட்படுத்தியது. ஏனென்றால் அவருடைய தரிசனத்தில் தேவனுடைய உன்னத நோக்கம் வெளிப்படுவதைக் காண்கிறோம்.

சிமியோன் ஒரு யூதனாய் இருந்தபோதும் தன்னுடைய ஜனமான இஸ்ரவேலருக்கு மகிமையாக மாத்திரமல்ல, புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும் வெளிப்பட்டிருப்பதைக் குறித்து களி கூர்ந்து தேவனை ஸ்தோத்திரித்தார். இப்படியாக சிமியோனுடைய தரிசனம் பரந்து விரிந்திருந்தது. தேவன் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணினதை தனது கண்களால் காண வேண்டுமென்று காத்திருந்த சிமியோனுடைய ஆசையும் வாஞ்சையும் அவருடைய வாழ்வில் நிறைவேற தேவன் கிருபை செய்தார். ஆபிரகாமுக்கும் இந் நாளைக் காணவேண்டுமென்ற ஆசை இருந்தது. தான் காண்கிற அந்தக் குழந்தை நமக்காக ஆயத்தம் பண்ணின ‘இரட்சண்யம்’ என்று கூறுகிறார். ஆம், சிமியோனுடைய கூற்றின்படியே, இதை வாசிக்கிற நம் ஒவ்வொருவருக்கும் சிலுவையிலே சிந்தின இரத்தத்தினாலே தேவன் ஆயத்தம் பண்ணின இரட்சண்யத்தை இன்றைக்கு நாம் காண்கிறவர்களாக மாத்திரமல்ல, அதைப் பெற்று அனுபவிக்கும் ஒரு ஒப்பற்ற சிலாக்கியத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் அல்லவா?. கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணும் பாக்கியம் தனக்கு கிடைத்தவுடன் சமாதானத்துடனே இந்த உலகை விட்டு கடந்துசெல்ல ஆயத்தமானார்.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய ஒப்பற்ற ஒரு தரிசனமும் வெளிப்பாடும் சிமியோனுடைய வாழ்வில் காணப்பட்டதற்கு காரணம் என்ன? யார்தான் சிமியோனை இவ்வாறான வெளிப்பாட்டிற்கு வழிநடத்தியிருக்கக்கூடும்? அவர் பெற்ற ஞானமோ, திறமையோ, அறிவோ இந்த தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் சிமியோனுக்குத் தரவில்லை. பரிசுத்த ஆவியானவரே சிமியோனுடைய வாழ்வில் இன்றியாமையாத நீங்காத ஒரு இடத்தைப் பெற்றிருந்தார். அவரே சிமியோனுக்கு இப்படிப்பட்ட பாக்கியத்தை அருளினார். சிமியோனுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட்ட விதத்தைத் தொடர்ந்து தியானிப்போம்.

1. ஆட்கொண்ட பரிசுத்தாவியானவர்

அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார் (லூக். 2:25). பரிசுத்த ஆவியானவர் சிமியோனுடைய வாழ்வை நிரப்பி ஆட்கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள்ளே அவரது வாழ்க்கை முழுவதும் இருந்தது. அவரே சிமியோனைப் போதித்து அனுதினமும் வழிநடத்தினார். சிமியோனைப்பற்றி “அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்” என்று வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஆட்கொள்ள எப்படிப்பட்ட உள்ளத்தைத் தெரிந்தெடுத்திருந்தாரெனப் பார்த்தீர்களா? நீதியும் பக்தியும் நிறைந்த அந்த உள்ளத்திலே பரிசுத்தாவியானவர் நிறைந்திருந்தார். நீதியைப் பின்பற்றுகிறவனையோ கர்த்தர் நேசிக்கிறார் (நீதி.15:9) என்றும் ‘பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்’ (சங்.4:3) என்றும் வாசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேவதிட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாத்திரம் பரிசுத்த ஆவியானவர் தேவன் தெரிந்துகொள்ளும் நபரிடத்தில் இறங்குவார். அந்தக்காலக் கட்டத்தில் வாழ்ந்த சிமியோனோடு பரிசுத்த ஆவியானவர் தங்கியிருந்தார். அந்தளவுக்கு தேவன் சிமியோனுடைய நீதி வாழ்க்கையின்மேலும் பக்தி வாழ்க்கையின்மேலும் பிரியமாயிருந்தார்.

இந்த கிருபையின் நாட்களிலே, என்றென்றும் நம்முடன் தங்கியிருக்கும்படியாகவும் தேற்றரவாளானாகவும். நம்மை வழிநடத்தும்படியாகவும். நம்மிலே வாசமாயிருக்கும்படியாகவும் பரிசுத்தாவியானவர் நம்மிலே ஊற்றப்பட்டிருக்கிறார். இதற்கு நாம் எவ்வளவேனும் தகுதியற்றவர்கள். முன்பு நம்முடைய நீதி அழுக்கான கந்தலாயும் நம்முடைய பக்தியோ அற்றுப்போனதாகவும் காணப்பட்டது. அப்படியாய் வாழ்ந்த நம்மேல் அவர் கிருபை வைத்தார். பாவத்தினாலும் சாபத்தினாலும் குற்றுயிராயிருந்த நம்மை நல்ல சமாரியனாகிய கிறிஸ்து எவ்வளவாய் அன்போடு எடுத்து காயங்களிலே திராட்சரசத்தையும் எண்ணையையும் வார்த்து நம் காயங்களைக் கட்டினார். பரிசுத்த ஆவியானவரை நமக்கு கிருபையின் அருட்கொடையாய் தந்தாரே! பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணும் நமது இருதயம் எப்படி இருக்கிறது? நீதியும் தேவபக்தியும் வாசம் பண்ணுகிற உள்ளமாய் காணப்படுகிறதா? அப்படிப்பட்ட உள்ளத்தையே தேவன் அதிகம் நேசிக்கிறார்.

அநீதியும் அவபக்தியும் தேவனுடைய பார்வையில் பாவமாயிருக்கிறது. பரிசுத்தமுள்ள தேவன் அதை வெறுக்கிறார். நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? … தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம் (1கொரி. 3:16,17).

அடுத்ததாக, சிமியோன் இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்தார். ஏனென்றால் ரோம ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தனத்தினால் ஆறுதலற்றுக் காணப்பட்ட தங்கள் தேசத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர ஒரு மேசியா தங்களுக்கு வருவார் என்ற யூத மக்கள் அனைவரும் நம்பினர். சிமியோனுக்கும் தன் மக்களின் விடுதலைக்காக அவர் உள்ளம் ஏங்கியது. அந்த மெய்யான விடுதலையைத் தரப் போகிற மேசியா யார் என்பதைக் குறித்து பரிசுத்த ஆவியானவரால் தெளிவாகப் போதிக்கப்பட்டிருந்தபடியால் அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்த மேசியா இயேசு கிறிஸ்துவே என்றும் அவரே இஸ்ரவேலின் ஆறுதலாயிருக்கிறார் என்று விசுவாசித்து பொறுமையோடும் ஆயத்தத்தோடும் அவரை சந்திக்கக் காத்திருந்தார்.

அருமையான தேவபிள்ளையே, இந்தக் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதலைத் தரும்படி வரப்போகிற மேசியாவை சந்திக்க ஆயத்தத்தோடுக் காத்திருக்கிறீர்களா? சிமியோனுடைய காத்திருத்தல் வீண்போகவில்லை. இதை வாசிக்கும் பிரியமானவர்களே, நாமும் சிமியோனைப்போல நீதியும், தேவபக்தியும், ஆறுதல் வரக்காத்திருக்கிறவர்களாய் காணப்படவேண்டும். ஆகையினால்தான் பவுல் அப்போஸ்தலன் உத்தம குமாரனாகிய தீத்துவிற்கு எழுதும்போது, ‘எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் … இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது’ (தீத்து.2:11-13) என எழுதுகிறார்.

2. வாக்களித்த பரிசுத்தாவியானவர்

கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது (லூக்கா 2:26).

சிமியோன்மேல் தங்கியிருந்த பரிசுத்த ஆவியானவர் அவருக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அருளியிருந்தார். இஸ்ரவேலின் மகிமையாகவும் புற ஜாதிகளுக்கு ஒளியாகவும் வெளிப்படப்போகிற கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்ற வாக்கை அறிவித்திருந்தார். அந்த வாக்குத்தத்தத்தை நம்பினவராய் தன் வயோதிப நாட்கள் வரை நம்பிக்கையோடு காத்திருந்தார். நம்மில் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவர் ஆளத்துவமுடைய தேவன். அவர் நம்மையும் நம் வாஞ்சைகளையும் துக்கத்தையும் தேவைகளையும் அறிந்தவராயிருக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளை வாக்குத்தத்தங்களினால் ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். நமது வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தப்பிச்செல்ல நம் குறைவுகள் நீங்கி நிறைவுள்ளவர்களாய் வாழும்படியாக எத்தனையோ வாக்குத்தத்தங்களை தேவன் தம்முடைய வேதத்திலே அருளியிருக்கிறார். நம்முடைய வாழ்வின் பிரச்சனைகளுக்கு ஏற்ற வாக்கை பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வசனத்திலிருந்து நமக்கு எடுத்துக்கொடுக்கிறார். இதை பேதுரு அப்போஸ்தலன் இப்படியாய் எடுத்துக்கூறுகிறார்: ‘நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது’ (2 பேதுரு 1:3,4). அருமையானவர்களே, சோர்ந்துபோனீர்களா? வாக்களித்த தேவனுக்கு காத்திருங்கள்.

3. வழிநடத்திய பரிசுத்தாவியானவர்

அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். …தாய்தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: …உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றான் (லூக்.2:27-32).

மந்தையில் தங்கள் ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களை இயேசுவை தரிசிக்கப் போகும்படியாய் தூதர்கள் வழிநடத்தினர். கிழக்கிலே தோன்றிய நட்சத்திரம் இயேசுவைத் தரிசிக்கும்படியாக ஞானிகளை எருசலேமுக்கு நேராக வழிநடத்தியது. அதேபோல, கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என சிமியோனிடத்தில் வாக்களித்த பரிசுத்த ஆவியானவர் அவரை அந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்கு வழிநடத்தவும் செய்தார். ஏனென்றால், ‘வாக்குத்தத்தம் பண்ணினவர்; உண்மையுள்ளவராயிருக்கிறாரே’ (எபி.10: 23). ‘தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2கொரி. 1:20). ‘மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?’ என வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. பரிசுத்தாவியானவர் தம்முடைய வார்த்தையின் முலம் நமக்கு வாக்களித்திருப்பாரானால் அதை உறுதிப்படுத்தவும் செய்வார். அந்த வாக்குத்தத்தத்தின் நிறை வேறுதலுக்கு உங்களை வழிநடத்தவும் செய்வார். அதுவரை பொறுமையோடு சிமியோனைப் போல காத்திருப்பது அவசியம். அதுமாத்திரமல்ல, நம் வாழ்வில் கீழ்ப்படிதலும் அவசியம்.

இயேசுவிற்கு நியாயப்பிரமாணத்தின் முறைமைகளைச் செய்யும்படி அவருடைய தாயும் தகப்பனாரும் பிள்ளையை தேவாலயத்திற்குக் கொண்டு வருவதை சிமியோன் அறியவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை அறிந்திருந்தபடியால், சிமியோனை அவர் தேவலாயத்திற்குப் போகும்படியாய் ஏவினார். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்கு உடனே கீழ்ப்படிந்து அங்கு சென்றார். தேவாலயத்தில் பிள்ளையைக் கண்டு அதை தன் கைகளில் ஏந்தி தேவனை ஸ்தோத்திரித்தார். சிமியோன் தன் வாழ்நாளை சஞ்சலத்தோடு அல்ல, சமாதானத்தோடு முடிக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார். “நீ உத்த மனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்” (சங். 37: 37).

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் சிமியோன் கண்டடைந்ததுபோல நீங்கள் உங்கள் குடும்பத்தார் அனைவரும் ஆறுதலையும், இரட்சண்யத் தின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கண் டடைய பரிசுத்தாவியானவர்தாமே வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக!


சிந்தியுங்கள்

தேவனும் மனிதனும் சந்திக்கும் ஒரு இடம் இயேசுகிறிஸ்து மட்டுமே!