சகோ.எம்.எல்.பிரான்சிஸ்
(மே-ஜுன் 2012)

இயேசு தேவனிடமிருந்து வந்தவர். தேவனால் அனுப்பப்பட்டவர். அவர் அப்போஸ்தலர். தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர். இதனால் அவர் கிறிஸ்து (மேசியா) பட்டத்துக்கு உரியவர். கிறிஸ்து இயேசு தேவனது வார்த்தைகளைப் பேசினார். அதனால் அவர் தீர்க்கதரிசி (Prophet) மட்டுமல்ல, பாவிகளை இரட்சிக்க வந்தவர். அதனால் அவர் இரட்சகரானார்.

இரட்சிக்க வந்த இயேசுவைக் குறித்தே நாம் சிந்திக்க இருக்கிறோம். பரலோகத்தில் இறைவனோடு சகல மகிமையோடும் இருந்தவர், இறைவனாகவும் இருந்தவர், ஆதியோடு அந்தமுமாய் இருந்த நித்தியர், உலகிலே மனிதனாக வரவேண்டிய அவசியம் என்ன? உலகில் பிறந்து, வாழ்ந்து சிலுவை மரணத்துக்கு ஆளாக வேண்டுமா? பாடுபட்டு, வேதனைப்பட்டு, ஆறு மணி நேரம் சிலுவையில் தொங்கி, இரத்தம் சிந்தி, சிலுவை மரணம் பெறவேண்டுமா?

பாவத்திற்கு அடிமையாய், சாத்தானுக்கு அடிமையாய் இருக்கின்ற மனிதனை மீட்க, இரட்சிக்க வேறு வழி இருந்தால் அந்த வழியை தேவன் தெரிந்தெடுத்திருப்பார். அப்படியே தேவன் தனது தன்மையிலிருந்து, இயல்பிலிருந்து மாறுபாடாக நடக்கமுடியாது. அவர் அன்புடையவர் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அவரது நீதிச்சட்டங்களுக்கு எதிரானவர்கள்மேல் அவருக்கு வரும் உக்கிர கோபமும் (Wrath) என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர் கோபத்தை இல்லாதொழிக்க ஏதாவது வழி உண்டா? மனிதன் கண்ட வழிகள்தான் சமயங்கள் (மார்க்கங்கள்), மதங்கள் என பல பெயராலும் அழைக்கப்படுகின்றன.

ஏதோ ஒரு வகையில் நீதிச்சட்டங்களைத்தான் மதங்கள் போதிக்கின்றன. நீதிச்சட்டங்களைப் போதிக்கும் எந்த மதமும் மனிதனை தேவனிடம் சேர்க்க வல்லமையற்றதாகவே இருக்கிறது. எந்த மதமும் (வழியும்), நமக்கு இரட்சிப்பளிக்க வல்லமையற்றதாக இருப்பதனாலேயே, ஒரே வழியாக தேவனால் இயேசு நியமிக்கப்பட்டார். இயேசுவே வழி. ஆகவேதான் இயேசு தன்னை நானே வழி என்றார். இயேசுவை ஏற்று அவரை விசுவாசித்தோர் வழியின் மக்கள் என்றே அழைக்கப்பட்டனர். இவர்களை கிறிஸ்தவர்கள் என்று பின்னர் அழைத்தனர். இரட்சிப்பு இயேசுவால்மட்டுமே கிட்டும். ஒரு மதமும், ஒரு சபையும், ஒரு சட்டமும், ஒரு மதகுருவும் இரட்சிப்பைக் கொடுக்கமுடியாது. இயேசு ஒருவரே வழி. அவரே கதி.

கிறிஸ்து இயேசு ஒருவரே நமக்குள்ளே ஒரே வழியாக இருக்கிறார். அவர்மட்டுமே இரட்சிப்பைத் தரவல்லவர். நாம் சர்வசாதாரணமாக காப்பாற்றுகிற ஒருவனை இரட்சகன் எனக் கூறுவதுண்டு. நம்மைக் காப்பாற்றி தேவனிடம் சேர்க்கவல்ல மீட்பனாக, இரட்சகனாக காப்பாற்றுபவராக இயேசு ஒருவரையே குறிப்பிடமுடியும். ஆதலால் இந்த சிறப்பான இரட்சிப்பு எத்தகையது என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

வேதாகமம் இரட்சிப்பு என்று கூறுவது ஒரு விலைகொடுத்துப் பெற்றுக்கொள்ளுதலையே. இதை மீட்பு என்றும் கூறலாம் (Redumption). பழைய ஏற்பாட்டுக் காலத்திலே இச்சொல் உபயோகிக்கப்பட்ட விதத்தை விரிந்துரைக்க இங்கு வசதியில்லை. புதிய ஏற்பாட்டிலே 1பேது. 1:18-19ல் விசுவாசிகள் வெள்ளி, தங்கத்தினால் அல்ல, கிறிஸ்துவின் உயர் மதிப்புடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டார்கள் என்று கூறுகிறது. இந்த இரத்தத்தினால் மீட்கப்பட்டது புதிய ஏற்பாடு முழுவதும் காணப்படும் விஷயமாகும். இரத்தம் சிந்துதல் இன்றி பாவ நிவாரணம் இல்லை, மீட்பு இல்லை. இதனாலேயே சிலுவையில் இயேசு மரிக்கவேண்டிய கட்டாயம் வந்தது. தேவன் ஆவியானவர். ஆதலால் அவருக்கு இரத்தமில்லை. மனிதர்கள் இரத்தமோ பாவக்கறையுடையதாக இருக்கிறது. ஆகவே தேவனே மனிதனாகி தமது இரத்தம் சிந்தியே, விலைகொடுத்தே மீட்பை பெறமுடியும் என்றாயிற்று. வேறு வழியில்லை.

இரட்சிப்பு என்பதில் மீட்பும் அடங்கும். ஆனால் மீட்பு மட்டுமல்ல இரட்சிப்பு. ஒப்புரவாகுதல் (Reconciliation) என்பதனையும் அது உள்ளடக்கும். கிறிஸ்துவின் சிலுவை மரணம் மீட்பை கொடுத்தது மட்டுமல்ல, தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் வந்த பகைமைகளை விலக்கி, நட்பை, புரிந்துணர்வை ஏற்படுத்தியது. தேவனது குடும்பத்திற்குள் உறுப்பினர் ஆக்கியது. ஒப்புரவாகுதல் இதையேக் குறிக்கிறது. இயேசுவின் செயல், அவரது சிலுவை மரணம் நம்மை தேவனோடு ஒப்புரவாக வழி உண்டாக்கியது. இன்னொரு விதமாக பார்த்தால், தேவனே இயேசுவின் சிலுவை மரணத்தில் நின்று, உலகத்தை தன்னோடு ஒப்புரவாக்குகிறார் என்பதைக் காணலாம். ஒப்புரவாக்குதல் பகைமையை அழித்தது, நட்பை தந்தது, ஆண்டவரது குடும்ப அங்கத்தவராக்கியது.

இரட்சிப்பு மீட்பை மட்டுமல்ல, ஒப்புரவாக்குதலை மட்டுமல்ல, இன்னொன்றையும் சேர்க்கிறது. அதை கிருபாதார பலி (Propitiation) என்பர். சிலுவையில் இயேசு கிருபாதார பலியானார். அந்தப் பலி பாவநிவாரணம் மட்டுமல்ல, தேவனது கோபத்தை, பாவத்தின் மேலுள்ள அவரது உக்கிர கோபத்தை நம்மீது விழாதபடித் தடுத்தது, தணித்தது, திருப்தி செய்தது, இல்லாதொழித்தது என்றெல்லாம் கூறலாம். கிறிஸ்து தன் சிலுவை மரணத்தால் இந்த பெரிய வேலையைச் செய்தார். தேவனது கோபம் முழுவதும் அவர்மேல் விழுந்தது. தேவன் அவ்வேளையில் பிதாவாக இயேசுவுக்குப் புலப்படவில்லை. இயேசு பிதாவால் கைவிடப்பட்டவராக கோபம் கொண்ட தேவனாகவே காட்சியளித்தார். என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று அவரைப் பேச வைத்தது. தேவஅன்பைப் பற்றியே இன்று அதிகம் பேசப்படுகிறது. தேவனது உக்கிரகோபத்தைக் குறித்து பேசு பவர்கள் சிலர். இயேசு சிலுவையில் செய்த ஒப்பற்ற செயல், தேவனின் கோபத்தை சாந்தி செய்ததாகும், தணித்ததாகும், தானே தாங்கிக்கொண்டதாகும். இதை மறந்த நிலையில் உலக மக்கள் பலர் இன்று வாழ்கின்றனரே.

நாம் இரட்சிப்பு என்றால் என்ன என்பதை, மீட்பு, ஒப்புரவு, கிருபாதார பலி என்று மூன்று சொற்களின் ஊடாக ஓரளவிற்காவது புரிந்துகொண்டோம். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து என்ன செய்தார் என்றதும், தேவன் கிறிஸ்துவில் நின்றும், கிறிஸ்து மூலமாகவுமே இதைச் சாதித்தார் என்பதும் விளங்கிக்கொள்ள முடிகிறது. தேவனுக்கு மனுக்குலத்தை மீட்க வேறு வழியுமிருக்கவில்லை. நீதிச்சட்டங்களோ, மனிதன் பெரிதாக எண்ணும் மதங்களோ, சடங்குகளோ, நற்செயல்களோ இரட்சிப்பை அளிக்க வல்லமையற்றவை. இதை நாம் மனதில் நன்கு பதித்துக் கொள்ள வேண்டும்.