நீ கணக்கு கொடுக்க வேண்டியவன்

Dr.தியோடர் வில்லியம்ஸ்

(செப்டம்பர்-அக்டோபர் 2012)

உக்கிராணத்துவம் என்ற பதத்தை சாதாரணமாக பணத்துடன் சேர்த்துக் கவனிக்கிறோம். இந்தப் பொருளில் பல ஆழமான கருத்துகள் உண்டு. கிறிஸ்தவ உக்கிராணத்துவத்தில் பணத்தை மட்டும் வலியுறுத்திவிட்டு, மற்ற முக்கிய நோக்கங்களை மறந்து விட்டோம். பவுலடியாருக்கு ஆழமான உக்கிராணத்துவ உணர்வு இருந்தது. அதை அவர் 2கொரிந்தியர் 5ஆம் அதிகாரத்தில் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

நற்செய்தியின் உக்கிராணத்துவம்

முதலாவது, நற்செய்தியின் உக்கிராணத்துவம் பற்றி பவுல் அதிக உணர்வுடன் கூறியுள்ளார். இது அவரது செய்திகள் மூலம் தெளிவாகிறது. “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்” (ரோ.1:14). “இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்” (1கொரி. 4:1). “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ…. உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே” (1கொரி.9: 16,17). “அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்….. கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்” (2கொரி. 5:18,19). ஒப்புரவாக்குதலின் ஊழியமும் அத்துடன் ஒப்புரவாக்குதலின் உபதேசமும் நமக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

நாம் கூறும் நற்செய்தியானது செயலிலும் சொல்லிலும், உதட்டிலும் வாழ்விலும், பேச்சின் பிரகடனத்திலும், நடைமுறைச் செயலிலும் கடந்துசெல்ல வேண்டும். இதுவே நமது உக்கிராணத்துவம்.

நற்செய்தியின் உக்கிராணக்காரர்களாகிய நாம், மற்றவர்களுக்கு அதை எடுத்துச் செல்லும் கடனாளிகளாக இருக்கிறோம். இது மேட்டிமையான எண்ணத்துடன் செய்யும் ஊழியமன்று. எல்லாம் உள்ளவர்கள், ஒன்றுமில்லாதவர்களிடத்தில் செல்வது போலவும், சிலாக்கியம் பெற்றவர்கள் எந்த சிலாக்கியமும் இல்லாதவர்களிடத்தில் செல்வது போலவும் நாம் செல்லவில்லை. அறிவிக்க கடமைப்பட்டவர்கள், நற்செய்தியைக் கேட்க வாய்ப்பில்லாதவர்களிடத்தில் செல்லுகிறோம். இதற்காகப் பெருமை பாராட்டவோ உயர்த்திக் கூறவோ இடமில்லை. இது தெரிந்துகொள்ளப்பட்ட சிலருக்கு மட்டுமா? இல்லை, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், முழு திருச்சபைக்கும் உரிய உக்கிராணத்துவம்.

அருட்பணியின் ஈடுபாடு ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. அப்படியே அருட் பணிக்கான கீழ்ப்படிதலும் தியாகமும் எல்லா விசுவாசிகளுக்கும் உரியது. அருட்பணியின் அழைப்பில் வேறுபாடு உண்டு. சிலர் ஊழியம் செய்ய அழைக்கப்படலாம். சிலர் ஊழியரை அனுப்ப அழைக்கப்படலாம். “அருட் பணியாளர்,” “அவரை அனுப்புவோர்” என்னும் இந்தப் பிரிவு மனிதரால் வகுக்கப்பட்ட பிரிவுதான். அனுப்புவோருக்கும் அனுப்பப்படுவோருக்கும் உக்கிராணத்துவம் ஒன்றே. அதைச் செயல்படுத்துவது தேவனுடைய சித்தமாகும்.

கர்த்தரின் கடைசிக் கட்டளையைத் தங்கள் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களை ‘உலகக் கிறிஸ்தவர்கள்’ என்று அழைக்கலாம் என்று பிரசித்திபெற்ற அருட்பணி வல்லுனரான டாக்டர் ரால்ப் வின்டர் கூறுகிறார். இன்னும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறியாத மக்கள் கூட்டங்கள் உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்வது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும். இந்த உக்கிராணத்துவத்தை செயல்படுத்துவதில் நாம் ஒவ்வொருவரும் நமது நேரம், தாலந்துகள், பணம், சம்பத்து அனைத்தையும் கர்த்தருக்கு உரிமையாக்க வேண்டும். அவை அவர் சித்தப்படி செலவிடப்பட வேண்டும்.

உக்கிராணத்துவம் என்பது, பிரசங்கிப் பதிலும் போதிப்பதிலும் மட்டும் அல்ல, நமக்குரியதெல்லாம் அதில் அடங்கியிருக்கிறது. அதாவது, நமது முழு வாழ்க்கையும் உக்கிராணத்துவத்தில் அடங்கியுள்ளது. நமது மதிப்பீடுகள், இலக்குகள், ஈடுபாடுகள் ஆகியவை மூலம் நற்செய்தியை ஒருபோதும் கேளாதவர் கேட்கும்படி கொண்டுச்செல்ல வேண்டும். இதுவே உக்கிராணத்துவத்தின் விளைவு. நாம் நற்செய்தியாகிய கண்ணாடியை அணிந்து, நம் வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் பார்க்கவேண்டும்.

மக்களின் உக்கிராணத்துவம்

இரண்டாவதாக, மக்களின் உக்கிராணத்துவமாகும். “…இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்” (2கொரி.5:16) என்று பவுல் கூறுகிறார். இதில் மக்களைப் பற்றி தம் மனப்பான்மை மாறினதைப் பவுலடிகள் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் என்ன? இதன் தொடர்பை முந்தின வசனத்தில் காண்போம். பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

நாமும் மக்களை உலகத்தார் காண்கிறது போல அவர் தம் கோத்திரம், ஜாதி, நிறம், பிரிவு, அந்தஸ்து இவற்றின் அடிப்படையில் காணக்கூடாது. இதற்குப் பதிலாக கல்வாரியின் வெளிச்சத்தில் காணவேண்டும். மக்களை நமது தன்னலத்துக்கென்று விளையாட்டுப் பொம்மை போலவும், தொல்லை தருபவர்களாகவும் காணக்கூடாது. அவர்களுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை நினைவில் கொண்டு, கல்வாரியின் கண்ணாடி கொண்டு காணவேண்டும்.

மத்தேயு 24:45-51 வசனங்களில் ஆண்டவர் கூறுவதைக் காண்போம். பொல்லாத ஊழியக்காரன் புசித்தும் குடிகாரருடன் குடித்தும் தன் எஜமானின் ஆஸ்தியைத் தவறான வழியில் செலவழித்துப் போட்டான். அதுமட்டும் அன்றித் தன் உடன் ஆட்களை அடித்தான். இதனால் அவர் மனிதர் மேலும் எஜமானின் ஆஸ்தியின் மேலும் உள்ள உக்கிராணத்துவத்தில் தவறிப்போனான். நம்முடன் வசிக்கும் மக்களுக்கும், நமது தலைமுறையில் வாழும் பிற மனிதருக்கும் நாம் கடனாளிகளாயிருக்கிறோம். இந்தப் பொறுப்பு நமது குடும்பத்திலும் அலுவலகத்திலும் நம் தேசத்திலும் உலகத்தின் கடைசி பரியந்தமும் உள்ள மக்கள்பால் நமக்கு இருக்கிறது. இவர்களில் ஒருபோதும் நற்செய்தியை அறியாதவர்கள் இருக்கலாம். பிறருக்காக கவலைப்பட வேண்டும். ஜெபிக்க வேண்டும். அவர்களுக்காக அக்கறை கொள்ளவேண்டும். நம்முடைய சொந்த செயல்பாடுகளிலும் திட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் சிக்கிக்கொண்டு மற்ற மக்களை மறந்துவிடுவது எளிது.

நம் நாட்டின் பலகோடி மக்களின் அடிப்படையான தேவைகள் சந்திக்கப்படவில்லை. இதுபற்றி நாம் கவலை கொள்கிறோமா? இவர்களில் பலர் கிறிஸ்துவை ஒரு முறையாவது தம் வாழ்வில் கேள்விப்படாமல் மாண்டு போகிறார்கள். இதற்காக நாம் கவலைப்படுகிறோமா? அந்தமான் தீவுகளில் “கிறிஸ்துவைப்பற்றி இன்னும் அறிய நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்குப் புத்தகங்கள் வேண்டும்” என்று மக்கள் கூறுகிறார்கள். நாம் அவர்களுக்காக கவலைப்படுகிறோமா? ஒரிஸ்ஸாவில் பல்லஹாரா பகுதியில் உணவு இன்றி ஒரு முதிய தம்பதியர் மாண்டார்கள். இவர்களுக்காகக் கவலைப்படுகிறோமா?

சொந்த வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

இறுதியாக, சொந்த வாழ்க்கையைப் பற்றிய உக்கிராணத்துவத்தைக் கவனிப்போம். “….சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்” (2கொரி.5:10). நம்முடைய வாழ்க்கையின் இன்றைய நிகழ்ச்சிகளையும், நாளைய நிகழ்ச்சிகளையும் ‘நித்தியம்’ என்னும் கண்ணாடி கொண்டு நோக்குவோம். நம்முடைய தலைமுறை, சுயநலம் நிறைந்ததென்று சமுதாய நிபுணர்கள் சொல்லுகிறார்கள். நம்மையும் நமது இன்பத்தையுமே வாழ்வின் மையமாகக் கொண்டுள்ளோம். மெய்யாகவே நமது சந்ததி சிற்றின்பங்களை நாடிச் செல்லும் சந்ததிதான்.

கிறிஸ்தவர்கள்கூட, தங்கள் சுய மகிழ்ச்சியைத் தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சி ஒன்றே கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்காக இருக்க முடியாது. அது ஒரு துணைப்பயன்தான். அதைப் பின் தொடர்வாயானால் அதைத் தவறவிடுவாய். தேவனுடைய நோக்கத்திற்காக வாழுவாயானால் நீ அதைக் கண்டடைவாய். ‘நான் எனக்காக வாழவேண்டும், எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் கவலைப்பட வேண்டும், அவரவர்கள் தங்களுக்காக கவலைப்படட்டும்’ என்று மக்கள் கூறுவதை நாம் எத்தனை முறைக் கேள்விப்படுகிறோம்!

ஒருநாள் நீ உன் எஜமானுக்கு முன்னால் நின்று உன் வாழ்க்கையைப் பற்றிக் கணக்குக் கொடுக்கவேண்டும் என்பதை அறிவாயா? உன் நேரத்தையும் பிரயாசத்தையும் இப்பொழுது எந்தக் காரியங்களுக்காகக் கொடுக்கிறாய்? நித்தியத்தின் வெளிச்சத்தில் அலசிப் பார்க்கும்பொழுது அந்தக் காரியங்கள் நிற்குமா?

ஒரு சிறுவன் தன் கிராமத்தில் புழுதி படிந்த ஒரு தெருவழியே சென்றான். அவன் ஏதோ ஒரு வைரக் கல்லோ, ஒரு புதையலோ தனக்கு ஒருநாள் கிடைக்கும் என்றும், அதனால் அவன் உடனடியாகப் பணக்காரன் ஆகலாம் என்றும் எப்பொழுதும் கனவு காண்பதுண்டு. அப்படி திடீர் என்று பணக்காரனானால் தான் வாழும் மண் குடிசை ஒரு மாளிகையாக மாறிவிடும் என்று அவன் நினைப்பதுண்டு.

இப்படி நினைத்துக்கொண்டு சென்ற பொழுது திடீரென்று ஏதோ ஒன்று புழுதியில் மின்னுவதைக் கண்டான். அதைக் கையில் எடுத்தான். அது கதிர் ஒளியுள்ள கல்லைப் போல் காணப்பட்டது. தான் கண்ட கனவு நனவாகும் வேளை வந்துவிட்டது என்று எண்ணினான். அவன் குடிசையில் அதை சோதித்தறிய சரியான விளக்கு இல்லை. அதை ஒரு தீப்பெட்டியில் வைத்து விடியற்காலை வரை அதைக் காணக் காத்திருந்தான்.

இரவு முழுவதும் மாணிக்கக்கல்லைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். விடியற் காலையில் தீப்பெட்டியில் இருந்து அதை எடுத்துப் பார்த்தான். ஐயோ! என்னே ஏமாற்றம்! அது ஒரு சாதாரண வர்ணம் பூசப்பட்ட கண்ணாடி வளையல் துண்டுதான். இரவில் அது கதிர் வீசியது; மங்கிய ஒளியில் மாணிக்கக் கல்லாகத் தோன்றியது. ஆனால் காலையில் வெளிச்சத்தில் அது விலைமதிப்பற்ற கண்ணாடித் துண்டு என்னும் உண்மை புலப்பட்டது.

ஒருநாள் நம்மீதும் நித்திய வெளிச்சம் உதிக்கும். நாம் இப்பொழுது மங்கிய ஒளியில் சேகரித்தவைகள் அப்பொழுது எறிந்துவிடக் கூடியவையாக, விலைமதிப்பு அற்றவையாகப் போய்விடக்கூடும். இப்பொழுது மதிப்புள்ளது, அப்பொழுது முற்றிலும் மதிப்பில்லாமல் போகும். நித்தியத்தில் உண்மை மதிப்பு பெறக் கூடியவை எவை என்று இப்பொழுதே கண்டறிய வேண்டும். நம் வாழ்வில் காணும் வெற்றிகளும் சாதிக்கும் செயல்களும் தேவனுடைய மீட்புப் பணியின் நோக்கத்தில் எவ்விதத்திலாவது இணைக்கப்பட்டு இருக்கவேண்டும். இல்லையெனில் அவை விலைமதிப்பு அற்றவை.

ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் சீக்கிரமாய்க் கழிந்துபோகும், கிறிஸ்துவுக்காக செய்வது மட்டும் நிலைத்திருக்கும். நீ கணக்குக் கொடுக்கவேண்டியவன் என்பதை மனதில் வைக்கவேண்டும்.

சத்தியவசனம்