தைரியமாய் பேசு!

தியானம்: செப்டம்பர் 9 வெள்ளி;
வாசிப்பு: தானியேல் 5:22-23; 2 பேதுரு 1:5-9

அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத்
தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும்
சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. (எபேசி. 3:12)

தான் விட்டுவந்த மதசடங்காசாரங்களுக்கு ஒத்த காரியங்கள் சபையிலே இடம்பெற்றதைக் கண்ட ஒரு சகோதரி, அது தவறு என்று உணர்ந்தாள். சபையார் தன்னைப் புறம்பே தள்ளிவிடுவார்கள் என்று பயந்ததால், அதைக்குறித்து பேச தைரியமற்றவளாய், மவுனமாய் இருந்தாள். ஆனால் இந்த சம்பவம் அவளுக்குள் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில், என்னை மீட்டெடுத்த இயேசுவின் நாமத்தினிமித்தம் பேசாதிருப்பது நல்லதல்ல, அவர்கள் என்னைத் தள்ளினாலும் நான் சத்தியத்தைப் பேசுவேன் என்று சொல்லி, தைரியமாய் எழுந்து சென்றாள்.

அந்நாட்களில், அநேகமாக எந்தவொரு ராஜாவும், தனக்குச் சாதகமான காரியத்தைப் பேசாத, பாதகமான செய்தியைக் கூறுகிற, தான் சொல்லுகிற காரியத்தைச் செய்யாத எவரையும் கோபங்கொண்டு கொன்றுபோடுவது வழக்கம். அதனாலேயே ராஜாவின் முன்னிலையில் உண்மை நிலைமையைப் பேசவே அதிகாரிகள் பயப்படுவார்கள். தானியேலின் நிலைமையும் அதுதான். பெல்ஷாத்சாருக்குச் சொல்ல நல்ல செய்தி எதுவும் தானியேலிடம் இல்லை. அதிலும் ராஜாவைக் கண்டித்துப் பேசவேண்டிய சூழ்நிலை தானியேலுக்கு. ஆனால் தானியேலோ எதையும் எதிர்கொள்ளத் தயாரானவராக, தைரியமாக, ராஜாவின் முன்னே உண்மையைப் பேசினார். ராஜா தானியேலைக் கொன்றாரா?

இன்றைய சூழ்நிலையிலே நாமும் நமது காரியமும் என்றிருப்பதே நல்லது என்று நாம் அநேகர் வாழுகிறோம். அதே மனப்பான்மையுடன் அன்று பேதுருவும் யோவானும் பவுலும் மற்றவர்களும், பின்னர் பல மிஷனரிமாரும் தேவ பிள்ளைகளும் இருந்திருந்தால் இன்று நாம் தேவனுக்குப் பிள்ளைகளாகும் பாக்கியத்தைப் பெற்றிருப்போமா? சத்தியத்தைப் பேசுவதற்கு பரிசுத்தாவியானவர் நமக்குத் தைரியம் தந்திருக்கிறார். பெந்தெகோஸ்தே நாளிலே பரிசுத்தாவியானவர் சீஷர் மீது இறங்கியபோது, பயந்து ஒளித்திருந்த பேதுரு எழுந்து பேசினாரே; அன்றைய தினமே இயேசுவை ஏறக்குறைய மூவாயிரம் பேர்கள் ஏற்றுக்கொண்டனர் அல்லவா! நமக்குள்ளும் அதே ஆவியானவர் இருப்பது உண்மையென்றால், சத்தியத்தைப் பேச நாம் தைரியமாய் எழுந்து நிற்போம். சத்தியத்திற்கு விரோதமானவற்றையும் சுட்டிக்காட்ட தைரியமாய் முன் நிற்போம். இதனால் மனுஷர் நமக்குத் தீங்கு செய்யலாம். ஆனால் அவர்களால் நமது ஆத்துமாவைத் தொடமுடியாது. தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டுமானால் நாம் ஆவியானவருக்குள்ளான தைரியத்தை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. தேவ வார்த்தைக்கு விரோதமானவற்றை அனுமதிக்கவும் கூடாது.

ஜெபம்: பிதாவே, நான் மௌனமாக இருக்காதபடி உம்மைப் பற்றும் விசுவாசத்துடனும் தைரியத்துடனும் நடக்க உம் வல்லமையைத் தந்தருளும். ஆமென்.