வெளிச்சமாயிருக்கிறீர்கள்…
தியானம்: பிப்ரவரி 1 புதன்; வேத வாசிப்பு: எபேசியர் 5:1-10
“…இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8).
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதில் ‘நாம் யார்’ என்று நம்மைக் குறித்துச் சிந்தித்திருக்கிறோமா? உலகத்தில் பிறந்து மரிக்கும் சகல மக்களையும் ஏழை-பணக்காரன், ஆண்-பெண், கறுப்பன்-வெள்ளையன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்று பிரிக்க முடியாது. காரணம், இவ் இரண்டு பிரிவுகளுக்கும் இடைப்பட்டவர்கள் சிலரும் இருக்கின்றார்கள். ஆயினும் உலகிலுள்ள மக்களை இரு சாராராக வேதாகமம் பிரிக்கின்றது. ஒன்று இருளின் பிள்ளைகள்; மற்றது வெளிச்சத்தின் பிள்ளைகள். அதாவது, கிறிஸ்தவன்-புறஜாதியான் என்றோ, கற்றவன்-கல்லாதவன் என்றோ கீழ் தேசத்தான் – மேல் தேசத்தான் என்றோ மக்கள் இனத்தைப் பிரிக்காமல், அவன் வெளிச்சத்தின் பிள்ளையாக நடக்கிறானா அல்லது இருளின் பிள்ளையாக நடக்கிறானா என்பதை வைத்தே வேதாகமம் மனுமக்களை இரு சாராராக பிரித்துக்காட்டுகின்றது. நமது ஆவிக்குரிய வாழ்வில், நம்மையும் அறியாமலே நாம் இவ்விரண்டு சாராரில் ஒன்றுக்குள் அடங்குகிறோம்; என்பதே உண்மை. இதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
கிழக்கிற்கும் மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு வித்தியாசம் இவ்விரு சாராருக்கும் உண்டு. எப்படி இவ்விரு சாராரையும் வேறுபிரித்துக் கண்டுகொள்வது? அதற்கு, நம்மிடமிருப்பது தேவனுடைய வார்த்தை ஒன்றுதான். ஒளியின் பிள்ளை தேவ வார்த்தையின்படி நடப்பான். இருளின் மக்களோ ஒன்றில் அதை வெறுப்பார்கள்; அல்லது அதை அறிந்திருந்தாலும் அதை ஒதுக்கி விடுவார்கள். அதாவது தாம் ஒளியின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டும் அவ்வழியில் நடப்பதில்லை. இதிலே நாம் யாராக இருக்கின்றோம் என்பதை நமது வாழ்க்கை என்ற மரம் கொடுக்கின்ற பலன்களினாலேயே கண்டு பிடித்துவிடலாம். நல்ல கனிகளைக் கொடுப்பவன் அவன் வெளிச்சத்தில் நடக்கிறவனாயிருப்பான். கெட்ட கனிகளைக் கொடுப்பானாயின் அவன் இருளின் பிள்ளையாகவே இருப்பான். அதேசமயம் ஏனோதானோவென்று வாழ்பவர்கள் இருளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு, தம்மை அறியாமலேயே இருளின் கிரியைகளை ஆதரிப்பார்கள். ஆகவே, கிறிஸ்தவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இருளைப்பற்றிய அறிவு இல்லாவிட்டால் எப்படி நாம் வெளிச்சத்தை வாஞ்சிக்க முடியும்? நாம் வெளிச்சத்தை வாஞ்சிக்கிறவர்களானால் எப்படி இருளுக்குள் இருக்கமுடியும்?
இருளுக்குரிய காரியங்களை விட்டுவிட்டு தேவனுடைய வெளிச்சத்திற்குள் நம்மைக் கொண்டுவருவோமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, இருளுக்கு அடையாளமாகிய பழைய பாவங்கள், மாம்சத்தின் இச்சைகள் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ உமதாவியின் பெலன்தாரும். ஆமென்.