இருளுக்குட்படாமல்…
தியானம்: பிப்ரவரி 2 வியாழன்; வேத வாசிப்பு: 1தெசலோனிக்கேயர் 5:1-11
“…தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே” (எபேசியர் 5:5).
நமக்குத் தெரிந்திருந்தும், அதிகம் கரிசனை காட்டாத பல காரியங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அது தாமதமாவதாலும், அது வாக்களிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுகள் ஓடி மறைந்துவிட்டதாலும், இன்னும் காலம் இருக்கலாமே என்ற தொரு அசட்டைத்தனம் நம் மத்தியில் உண்டு என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இரண்டு காரியங்கள் உண்மை. கிறிஸ்து திரும்பவும் வருவது ஓர் உண்மை. அவர் வரும் நாளை, பிதாவைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள் என்பதுவும், யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் வருவார் என்பதுவும் அடுத்த உண்மை. இப்படியாக நிச்சயமாக நடக்கப்போகிற நிகழ்வைக் குறித்த கரிசனையற்றவர்களாகவும் தூங்குகிறவர்களாகவும் நாளை மாறிப்போகும் காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறவர்களாகவும், உலக விஷயங்களில் அதிக சிரத்தை கொண்டவர்களாகவும் நாம் வாழலாமா?
எந்த நேரமும் ஆயத்தமுள்ளவர்களாக, நமது தவறுகளை உணர்ந்து நம்மைத் திருத்திக்கொள்பவர்களாக நாம் நடந்தால், அவரது வருகையைக் குறித்துப் பயப்படவேண்டியதில்லை. குற்றம் செய்தவனைப் பிடிக்க காவல்துறை முன் சொல்லிவிட்டா வரும்? திடீரென வரும்போது குற்றம் செய்தவன் ஒளித்துக்கொள்ள அவகாசம் கிடைக்காது அல்லவா? அப்படியே பவுலடியார், யார் யார் தேவனுடைய ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லை என்று தெளிவாக எழுதியுள்ளார். இந்தச் செயல்களை யாராவது வெளிச்சத்தில் செய்வார்களா? குற்றம் புரியாத எவனும் ஒளிந்து நடக்கவேண்டியதில்லையே! ஆனால் தவறான பாதையில் செல்லும் எவனும் வெளிப்படையாகச் செல்லவேமாட்டான். நமது தனிப்பட்ட வாழ்க்கையைத் தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாக ஒப்புக்கொடுப்போம். பிழை இல்லையானால் நாம் தலை நிமிர்ந்து நிற்கலாமே.
இன்று கிறிஸ்துவின் வருகை இருக்குமானால் நமது நிலை என்ன? நாம் அவரோடேகூடவே செல்லுவோமா? அல்லது கைவிடப்படுவோமா? அவர் நம்மைக் குற்றவாளிகளாகக் காண்பாரா? அல்லது தமது வருகைக்காக விழித்திருக்கும் பிள்ளைகளாகக் காண்பாரா? தேவனால் கைவிடப்படுவது போன்றதொரு பயங்கர நிலைமை நம்மில் யாருக்கும் வரக்கூடாது. நாம் இருளில் வாழ்கிறோமா, அல்லது, வெளிச்சத்தில் நடக்கிறோமா என்பதை அவர் கவனித்துக் கொண்டே இருக்கின்றார்.
ஆகவே, இப்போதே, நம்மில் தொத்திக்கொண்டிருக்கிற இருளின் காரியங்கள், நாம் ஒளித்துச் செய்யும் செயல்கள், மனதில் தேக்கிவைத்திருக்கும் தவறான சிந்தனைகள் யாவையும் அழித்துவிடுவோமாக.
நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே! (1தெசலோனிக்கேயர் 5:5).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே அறிந்தும், அறியாமலும் எங்களை ஒட்டிக்கொண்டிருக்கும் அசுத்தங்களை அழித்துவிட உம்மையே நாடி வந்திருக்கிறோம். உதவி செய்யும். ஆமென்.