ஒளிவட்டம் தெரியுமா?

தியானம்: பிப்ரவரி 6 திங்கள்; வேத வாசிப்பு: ஏசாயா 9:1-7

“…மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது…” (மத்தேயு 4:15).

தேவனுடைய பிள்ளைகளைச் சுற்றி ஒளிவட்டம் தெரியுமா என்று ஒரு கிறிஸ்தவர் என்னிடம் கேட்டது அதிர்ச்சியாக இருந்தது. தேவனுடைய வெளிச்சத்தில் நாம் நடந்தால் நம்மைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்ற மாயையான கற்பனையில் விழுந்துவிடக்கூடாது. வெளிச்சமானது இருளிலே பிரகாசிப்பது உண்மை. ஆயினும் அந்த வெளிச்சமானது ஒருவரின் தலையின் பின்னால் ஒரு ஒளிவட்டமாகத்தான் தெரியவேண்டும் என்றில்லை. எந்தவொரு பரிசுத்தவானுக்கோ ஊழியருக்கோ, ஒளிவட்டம் என்ற ஒன்று யாருக்கும் கிடையாது. கற்பனையான வரைபடங்களைப் பார்த்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது.

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” என்கிறது பரிசுத்த வேதாகமம். இந்த இருள் என்ன? நமது தேவன் யார் என்பதை அறியாததாலேயே மனித வாழ்வை இருள் சூழ்ந்துகொள்கிறது. அந்த அறிவு இல்லாததாலேயே இருளின் கிரியைகளும் அதிகரிக்கிறது. இருளில் இருக்கிற ஜனங்களுக்கு வெளிச்சம் தேவை. அதாவது அவர்களுக்கு தேவனை பற்றிய அறிவு தேவை. இந்த மெய்யான அறிவை மக்களுக்குக் கொடுப்பது யார்? “நீங்கள் உலகிற்கு ஒளியாயிருங்கள்” என்று சொன்ன ஆண்டவருக்கு சாட்சியான நம்மிடமே அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாமோ, நமக்கு நாமே போலி ஒளிவட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுகிறோமா என்று எண்ணத்தோன்றுகிறது. நாம் வெளிச்சத்தில் நடப்பது மெய்யானால் பிறரையும் அதிலே நடப்பிக்கலாமே. ஒளிவட்டம் என்பது வரைந்து காட்டப்படுவதல்ல; அது நமது மெய்யான வாழ்வில் பிரகாசிக்கவேண்டும். இருளாயிருந்த நாம் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஒளி நிறைந்த வாழ்வினால் பிறரையும் அந்த வெளிச்சத்துக்குள் அழைத்துக்கொண்டு வரவேண்டும். இன்று அநேகர் பாவ இருளில் மாத்திரமல்ல, அன்றாட வாழ்வில் மரணத்தைக் குறித்த திகிலோடும், நாளை என்னவாகுமோ என்ற அங்காலாய்ப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் தங்களைத் தாங்களே இருளுக்குள் தள்ளிப்போட்டவர்கள். இவர்களது வாழ்விலே வெளிச்சம் வரவேண்டும். மரண திகில் நீங்கவேண்டும். பாவத்தில் சிக்குண்டு வாழ்வை கசப்பாக்கி இருளுக்குள் கிடக்கிறவர்களுக்கு மன்னிப்பின் செய்தி போகவேண்டும். நித்திய வாழ்வின் நிச்சயத்தின் செய்தி இவர்களுக்கு வேண்டும். இதை யார் செய்வார்?

தேவனுடைய வார்த்தை நம் வாழ்வில் வெளிச்சம் கொடுத்தது மெய்யானால் அதைச் சுமந்துகொண்டு இருளுக்குள் இருப்பவர்களிடம் செல்லுவோமாக. மாறாக, பொய்யான ஒளிவட்டங்கள் நமக்கு வேண்டாமே!

ஜெபம்: ஆண்டவரே, உம்முடைய வார்த்தை எங்கள் வாழ்விற்கு வெளிச்சம் கொடுத்தது. அதை உலகிற்கு நாங்கள் பிரதிபலிக்க அருள்தாரும். ஆமென்.