அழைத்தவர் நடத்துவார்!
தியானம்: பிப்ரவரி 9 வியாழன்; வேத வாசிப்பு: எரேமியா 1:1-19
“நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. …நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக” (எரேமியா 1:7).
ஆசாரியனுக்கு மகனாகப் பிறந்த எரேமியா மென்மையானவரும் தனக்குள் தைரியமற்றவருமாயிருந்தார். ஆனால் தனது பணிக்கு இவரே உகந்தவர் என்று தேவன் கண்டார். எரேமியாவோ தான் சிறு பிள்ளை பேசத் தெரியாதவன் என்று சாக்குச்சொன்னார். ஆனால் தேவன் அவரை விட்டுவிடவில்லை. அடுத்ததாக, தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்றதால் எரேமியாவின் வாழ்வு இலகுவானதாக அமையவில்லை. பல உபத்திரவங்களையும் கஷ்டங்களையும் அவர் சந்திக்கவேண்டியிருந்தது. தேவனை மறந்து தங்கள் போக்கில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த இஸ்ரவேலர் சந்திக்கப்போகும் ஆபத்தைக்குறித்து முன் அறிவிக்கவேண்டிய ஆபத்தான பணி எரேமியாவிற்குக் கொடுக்கப்பட்டிருந்தது. தேவபயமற்று, தேவகட்டளைகளை மீறி நடந்த இஸ்ரவேலரைக் கண்டிக்க வேண்டிய பணி அது. ஆனால் மக்களோ தேவவார்த்தைக்குப் பயப்படாமல் எரேமியாவைப் பகைத்தார்கள். பிரபுக்களும் அரசரும் அவரைச் சிறையிலடைத்தார்கள். துரவில் போட்டார்கள். அயலகத்தாரும் குடும்பத்தாரும் நண்பர்களும்கூட எதிர்த்தார்கள். தேவனுடைய வார்த்தைகளைச் சொன்னதால் எரேமியா பலவித பாடுள்ள அனுபவங்களுக்கூடாகச் செல்லவேண்டி ஏற்பட்டது. ஆனால் எரேமியா பின்வாங்கவில்லை. நடந்தது என்ன? தனது உயிரையும் வெறுத்து தேவனுக்கு உண்மையாக விளங்கிய எரேமியா அல்ல; அவரைப் பகைத்தவர்களே சிறைப் பிடிக்கப்பட்டனர். நாமும் அநேகந்தரம், “நான் தகுதியற்றவன், எனக்கு எதுவும் தெரியாது, ஜெபிக்கத் தெரியாது, பேசத் தெரியாது” என்று தயங்குவதுண்டு.
ஆனால் தேவன் ஒருவரைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்றால் அவரே நடத்துவார். தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக தேவனுடைய வெளிச்சத்தில் நடக்கிறவர்களாக நாம் இருந்தால் உலகம் நிச்சயமாகவே நம்மைப் பகைக்கும். ஆனால் நம்மை அழைத்தவர் நடத்துவார். எத்தனை எதிர்ப்புகள் வந்தும், எரேமியா பின்வாங்கிப் போகவில்லை. அத்தனை இஸ்ரவேலருக்கும் முன்பாக தனி ஒருவராக நின்று தேவனுடைய வார்த்தைகளைத் தைரியமாக உரைத்தார் என்றால் எரேமியாவுக்கு அந்தத் தைரியத்தை கொடுத்தது யார்?
ஆகவே, நம்மை அழைத்த தேவனுடைய பணியைச் செய்வதற்குச் சாக்குப் போக்குச் சொல்லுவதை விட்டுவிடுவோம். இன்று நம்மைத்தான் தேவன் அழைக்கிறார். உலகில் பிரகாசித்த ஒளியை ஏற்றுக்கொள்ளாமல் ஏராளமானவர்கள் இன்னமும் இருளுக்குள் இருக்கும்போது, நாம் வெளிச்சத்திற்குள் வரும்படிக்கு நம்மை தமது இரட்சிப்பின் வெளிச்சத்திற்குள் தேவன் கொண்டுவந்தது ஏன்? இருளுக்குள் இருக்கும் மக்களுக்கு அவருடைய வார்த்தையை தைரியத்தோடு சொல்லத்தானே! பாடுகள் எதிர்ப்புகள் வரும்; வரட்டும். துணிந்து நிற்போம். அழைத்த தேவன் நடத்துவார்.
ஜெபம்: ஆண்டவரே, என்ன கஷ்டம் நேர்ந்தாலும் அழைப்புக்கு உண்மையாய் இருக்க கிருபை தாரும். ஆமென்.