சிறையில் இருப்பினும்….

தியானம்: பிப்ரவரி 10 வெள்ளி; வேத வாசிப்பு: எரேமியா 37:11-21

“…கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத்  தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான்” (எரேமியா 37:17).

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதினால், அதாவது வெளிச்சத்தின் பிள்ளைகள் என்பதினால் கஷ்டம் துன்பம் இன்றி வாழலாம் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உண்மை ஒன்று உண்டு. என்னதான் உபத்திரவம் நேரிட்டாலும் வெளிச்சத்தின் பிள்ளைகள் வெளிச்சத்தின் பிள்ளைகளே. என்ன துன்ப துயரம் நேரிட்டாலும் அவர்கள் ஒருபோதும் தோற்றுப்போகமாட்டார்கள்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தேவனுடைய வார்த்தைகளை மக்களுக்கு உரைத்த தீர்க்கதரிசி எரேமியா, தேவனால் அழைக்கப்பட்டவர். இதனால் மக்களும் ராஜாக்களும் அவரைக் கண்டு பயந்தனர். ஆனாலும், அவருடைய வாழ்வு மக்கள் மத்தியிலே தோல்வியின் வாழ்வாகவே தெரிந்தது. அடியும் பரிகாசமும், சிறையும் குழியும் என்று பல வேதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. இந்தக் கஷ்டம் எரேமியாவுக்கு ஏன் நேரிட்டது? தேவனுடைய வார்த்தையை உள்ளது உள்ளபடி உரைத்ததினால்தானே. உதவிக்கு வந்த எகிப்தியரைக் கண்டும், கல்தேயர் திரும்பிப்போனதினாலும் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட யூதாவின் ராஜா, எரேமியா உரைத்த தீர்க்கதரிசனத்தினிமித்தம் கலங்கினான். எரேமியா கல்தேயர் பக்கம் சேருவான் என்று பயந்து எரேமியாவைப் பிடித்து காவற் கிடங்கின் நிலவறைக்குள் போட்டுவிட்டார்கள். அவரின் வாழ்வே இருண்டது போலிருந்தது. ஆனால் நடந்தது என்ன? சிதேக்கியா ராஜா தன் வீட்டிலே இரகசியமாகக் கூப்பிட்டு, ஏதாவது நல்ல செய்தி உண்டோ என்று கேட்டான். அப்போதும் எரேமியா பயமின்றி உண்மையையே பேசினார்.

கர்த்தருக்குள் அருமையான சகோதரனே, சகோதரியே, நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பது மெய்யானால், ஏதோவொரு காரியத்திற்காக தேவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இருளின் ராஜ்யத்தினுள் அடிமைகளாயிருந்த நம்மைக் கர்த்தர் விடுவித்தது, பிறரை வெளிச்சத்தின் பிள்ளைகளாக வழிநடத்தவேயாகும். நம்மை அவர் விடுவிப்பதற்காக தமது ஜீவனையே கொடுத்தது பிறருக்கு நாம் ஒளி கொடுக்கவேயாகும். ஆனால் இவ்வுலகில் நாம் எந்தவித பாடுகளும் இன்றி, பிறமக்களைத் தேவனிடத்திற்கு நடத்திவிட முடியாது.

ஆனால், கிறிஸ்துவினிமித்தம் எவ்வித துன்பம் துயரம் வந்தாலும் தேவன் நிச்சயம் ஆச்சரியமாக நடத்துவார். நிலவறைக்குள் இருந்தவனிடம் ஏதோ இருக்கிறது என்பதை சிதேக்கியா உணரவில்லையா? அதேவேளை தனக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக எரேமியா, பொய் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையே. அப்படியாக நாமும் இன்று காவற்கிடங்கின் அனுபவத்துக்குள் இருக்கலாம். பயம் வேண்டாம்; கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

ஜெபம்: ஆண்டவரே, பிறமக்களை தேவனிடத்திற்கு வழிநடத்துகிற பணியில் பாடுகள் வந்தாலும் தைரியமாய் எழுந்து, அந்த நல்ல செய்தியைப் பயமின்றிச் சொல்ல உம் கிருபை தாரும். ஆமென்.