உடைந்த பாத்திரமாயினும்…
தியானம்: ஜுன் 3 சனி; வேத வாசிப்பு: சங்கீதம் 34:1-24
“…உடைந்த பாத்திரத்தைப் போலானேன். …நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்…” சங்கீதம் 31:12,17
“பிள்ளைகளால் ஏற்பட்ட மனவேதனைகள், அவமானம், நிந்தை, வேலையின்மை என்று பல எதிர்பாராத சூழ்நிலைகளால் நெருக்குண்டதால், நான் யாருக்கும் உதவாத உடைந்துபோன பாத்திரம் என்று எண்ணி மனம்நொந்துபோனேன். ஒருநாள், தாவீதின், “உடைந்துபோன பாத்திரம் போலானேன்; ஆயினும் வெட்கப்பட்டுப் போகவிடாதிரும்” என்ற விண்ணப்ப வார்த்தைகளை வாசித்தபோது, நானும் என்னைத் தேவகரத்தில் ஒப்புவித்து ஜெபித்தேன். தேவன் எனக்குப் பதில் தந்ததால், என்னைப்போன்று தங்களை உடைந்த பாத்திரங்களாக எண்ணி வேதனையோடிருக்கும் பெண்களைத் திரும்பவும் தேவனண்டை நடத்தும் உபயோகமுள்ள பாத்திரமாக இன்று வாழுகிறேன்” என்று ஒரு சகோதரி தன் சாட்சியைக் கூறினாள்.
தாவீதின் வாழ்க்கை இலகுவானதாக இருக்கவில்லை. பல பாடுகள், எதிராளிகளின் தாக்கங்கள், சொந்த ஜனத்தாரினால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், தனிமை, நிந்தை, அவமானம், வேதனையென்று பல சூழ்நிலைகளைக் கடந்துசென்றவர் தாவீது. இவையாவும், தான் யாருக்கும் உதவாத உடைந்துபோன பாத்திரம் என தாவீதை வேதனைக்குள்ளாக்கியிருக்கலாம். ஆனால் தாவீதோ, அப்படிப்பட்ட சிந்தனைகளும், மனப்பான்மையும் தன்னை ஆட்கொள்ளவிடாமல், தேவன் தன்னை ஒரு நோக்கத்தோடேயே இந்த உடைந்த அனுபவங்களுக்கூடாக நடத்திச் செல்லுகிறார் என்பதை அறிந்திருந்திருந்தார். இல்லாவிடில், “நான் உடைந்த பாத்திரம் போலானேன். நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்”; என்று விண்ணப்பம் பண்ணியிருக்க முடியாது. தாவீது வேண்டிக்கொண்டபடி தேவன் தாவீதை வெட்கப்பட்டுப் போகவிடாமல், தமக்கு உகந்த பாத்திரமாக மட்டுமல்ல, அன்று இஸ்ரவேல் ஜனத்துக்கும், இன்று நமக்கும் உகந்த, உபயோகமுள்ள பாத்திரமாக வனைந்து வைத்தார். இதனையே, “குயவனே, குயவனே, களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே” என்ற பாடலின் ஆக்கியோன், “உடைத்து என்னையும் உந்தனுக்காய் உடைமையாக்கிடுமே” என்று எழுதினார் போலும்.
உடைந்த பாத்திரத்தின் நிலைமை நமக்கேற்பட இரு காரணங்களைச் சொல்ல லாம். ஒன்று, நமது சொந்த தெரிந்தெடுப்புகளினாலும், நமது பாவ வாழ்க்கையினாலும் நாம் உடைந்துபோகிறோம். அடுத்தது, தமது சுபாவம் நம்மில் காணப்படும்படியாக தேவன் நம்மை வாழ்க்கையின் சில உடைந்த அனுபவங்களுக் கூடாக நடத்திச்செல்கிறார். நிலைமை எப்படியாயினும், உடைந்த பாத்திரம் என்று யார்யார் தங்களைத் தேவபாதத்தில் தாழ்த்துகிறார்களோ அவர்களை தேவன் ஒருபோதும் தள்ளிவிடவே மாட்டார். “நானோ கர்த்தாவே, உம்மையே நம்பியிருக்கிறேன். வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்” என்று ஜெபித்து தேவ கரத்தில் இன்று நம்மை ஒப்புக்கொடுப்போமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, என் வாழ்வில் நான் சந்தித்த உடைக்கப்பட்ட அனுபவங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் குறைகளை நீக்கி உமக்கு உகந்த பாத்திரமாய் வனைய என்னை ஒப்புகொடுக்கிறேன். ஆமென்.