நமது ஆலோசகர் யார்?

தியானம்: 2017 நவம்பர் 11 சனி; வேத வாசிப்பு: யோசுவா 6:2-6

“கர்த்தர் யோசுவாவை நோக்கி…” (யோசுவா 6:2).

எந்தவொரு யுத்தத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர், அதற்குரிய கால, நேர, வழிமுறைகளை யுத்த தளபதிகள் யுத்த ஆலோசகர்களிடமிருந்து முதலில் பெற்றுக்கொள்வர். ஆலோசனைகள் நேர்த்தியாக அமையாவிடின், எவ்வளவு திறமை வாய்ந்த யுத்த வீரர் படையிலிருந்தாலும், அவர்கள் தோல்வியைத் தழுவுவது இயல்பு. யுத்தத்தின் வெற்றி, பெற்றுக்கொள்ளும் ஆலோசனையில் மிகவும் தங்கியுள்ளது.

யோசுவா ஒரு யுத்த வீரன். எகிப்திலிருந்து கானானை நோக்கிய பயணத்தில் மோசேக்கு உறுதுணையாக நின்று, எதிர்கொண்ட யுத்தங்கள் அனைத்திலும் ஒரு தளபதியின் இடத்திலிருந்து தலைமை தாங்கிய அனுபவமுள்ள வீரன். இப்போது, எரிகோவுக்கு எதிரான யுத்தத்திலும் என்ன வழிமுறைகளைக் கையாளவேண்டும், என்ன ஆலோசனைகளைப் போர்வீரருக்குக் கொடுக்கவேண்டும் என்பது யோசுவாவுக்குத் தெரியாததல்ல. எனினும், சகல யுத்தங்களையும் நடத்துகின்ற கர்த்தரின் ஆலோசனைகளுக்குச் செவிகொடுக்க யோசுவா தன்னைத் தாழ்த்தினான். யோசுவா மட்டுமல்ல, வேதத்தில் அதிக யுத்தங்களை எதிர்கொண்டு வெற்றிகொண்ட தாவீது ராஜாகூட, தனக்கு அநேக ஆலோசனைக்காரர் இருந்தும், தன் தேவனின் ஆலோசனைகளையே எப்போதும் வேண்டினார். எனவேதான் “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” என்று தேவனை எப்போதும் துதித்தார்.

நமக்கு இன்று யுத்த ஆலோசனைகள் அவசியமில்லாதிருக்கலாம். ஆனால், வாழ்க்கை யுத்தம் மிகப் பெரிதல்லவா! பணநெருக்கடி, பிள்ளை வளர்ப்பு பிரச்சனை, கணவன் மனைவிக்கிடையிலான பிரிவினைகள், நோய், வேலை, வியாபாரம், வழக்கு என்று பல யுத்தங்களுக்கு நாம் முகங்கொடுக்கிறோம். இந்த சமயத்தில் நமக்கு ஆலோசனைகள் தேவைப்படுகிறது. அதற்காக ஆலோசகர்களை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது தவறல்ல. ஆனால் அவர்கள் தேவனுடைய ஆலோசனையின் அடிப்படையில் உங்களை வழிநடத்துகிறார்களா என்பதே காரியம். வேதத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் ஆலோசனைகளைச் சில சமயம் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தாலும், அது சிறந்த வழி. அதிலே சமாதானம் நிறைந்திருக்கும். அவற்றின்படி நாம் முன்செல்லும்போது, தேவனுடைய உதவி ஒத்தாசையும் நிச்சயம் நமக்குண்டு. ஆகவே, முதலில் தேவனுடைய பாதத்தில் அமருவோம். நாம் யாரிடம் ஆலோசனைக்குச் செல்லவேண்டும் என்று அவரே நம்மை நடத்துவார்.

“தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்” (சங்.139:17).

ஜெபம்: தேவனே, உமது ஆலோசனையின்படியே என்னை நடத்தும், உம்மைப்போல சிறந்ததொரு ஆலோசகர் வேறொருவருமில்லை என உம்மையே அண்டிக்கொள்கிறோம். ஆமென்.