சொல்லுகிறபடியே செய்வோம்!
தியானம்: 2017 நவம்பர் 27 திங்கள்; வேத வாசிப்பு: யோனா 1:1-17
“யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து, …கப்பல் ஏறினான்” ( யோனா 1:3).
இஸ்ரவேலுக்கும் நினிவே பட்டணத்துக்கும் இடையே நல்ல உறவு இருக்கவில்லை. அதேசமயம் நினிவேயின் அக்கிரமம் பெருகியதைக் கண்ட கர்த்தர், நினிவேக்கு விரோதமாகப் பிரசங்கித்து, அது கவிழ்க்கப்பட்டுப்போகும் என அறிவிக்கும்படி யோனா தீர்க்கதரிசிக்கு கூறினார். ஆனால் யோனாவோ, நினிவே மக்கள் மேல் கொண்டிருந்த வெறுப்பினால், தேவனையும் அவர் சுபாவத்தையும் நன்கு அறிந்திருந்தபோதிலும், நினிவேக்குப் போகாமல், தர்ஷீசுக்குப் போவதற்காகக் கப்பலேறினான். கர்த்தருடைய கண்களுக்கு யார்தான் தப்பித்துச் செல்லமுடியும்? அவரது சித்தத்தைவிட்டு யாரால் விலகி ஓடமுடியும்? கர்த்தர் யோனாவை விட்டுவிடவில்லை. பல சம்பவங்களுக்கூடாக யோனாவைக் கடந்துவரச்செய்து, அவனுக்கு உணர்த்தி, அவனைக்கொண்டே நினிவே மக்களுக்குச் செய்தியை கூற வைத்தார். அதைக் கேட்ட நினிவே மக்கள் மனந்திரும்பியதால் அழிவிலிருந்து மீட்கப்பட்டனர்.
யோனா கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருந்தவன். தேவனுடைய மனதுருக்கத்தையும் இரக்கத்தையும் யோனா நன்கு அறிந்தவன். இந்த நினிவேயைப் பொறுத்தளவில், தேவ சித்தத்திற்கும் மேலாக, அவர்களில் கொண்டிருந்த கசப்பும் வெறுப்பும் யோனாவிடம் அதிகம் வெளிப்பட்டது. தான் தேவனுடைய செய்தியைச் சொல்லி, அவர்கள் தற்சமயம் மனந்திரும்பினால், தேவன் இரங்கி, அழிவினின்றும் நினிவேயைத் தப்புவித்தால் தான் சொன்னது என்னவாகும் என்றும் யோனா தடுமாறியிருப்பான் என்றுத் தெரிகிறது. நினிவே அழியவேண்டும் என்றுதான் யோனா விரும்பினான் போலும்.
ஒரு தேவ ஊழியனுக்கு இந்த மனநோக்கு இருப்பது மகா தவறு. இறுதியிலே கர்த்தர் யோனாவுக்குச் சொன்னதைக் கவனிப்போம்: “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ” (யோனா 4:11). இதுதான் தேவ இரக்கம். இந்த மனநோக்கு ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் அவசியம். கசப்பு கோபம் வெறுப்பு இருக்கக்கூடாது என்று பிரசங்கிக்கிறவர்களே இன்று அதே கசப்புடன் இருப்பது மிகவும் துக்கத்துக்குரிய விஷயம். பிரசங்கிக்கின்ற, பிறருக்கு வகைசொல்லுகிற நாம் முதலாவது நம்மைச் சுத்தப்படுத்தும்படி தேவகரத்தில் நம்மை ஒப்புவிப்போமாக.
“உன்னைக்குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. …இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வாய்” (1தீமோ.4:16).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உமக்குள் இருந்த மனதுருக்கம், கிறிஸ்துவின் சிந்தை இவைகளை தரித்துக்கொண்டவர்களாக நாங்கள் ஊழியம் செய்திட கிருபை செய்யும். ஆமென்.