அனுபவித்திருக்கிறாயா?
தியானம்: 2018 நவம்பர் 17 சனி; வேத வாசிப்பு: 1சாமுவேல் 17:1-58
“பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்” (1சாமு.17:37).
நடுமேசையில் ஒரு கேக்கை வைத்துவிட்டு, ‘இது எப்படி, ருசியானதா, மென்மையானதா’ என்று கேட்டால், யாருக்குத் தெரியும்? அதை ருசி பார்த்தால்தான் அதன் சுவையும், மென்மையும் புரியும். அதுபோலவேதான், “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” என்று சங்கீதக்காரனும் சொல்லுகிறான். அவரை வாழ்வில் ருசித்தவர்களுக்கே அந்த ருசி புரியும்.
கோலியாத்து என்னும் பெலிஸ்தியன் மலைபோல வந்து இஸ்ரவேலர் முன் நின்று பயமுறுத்துகிறான். தன்னை வெல்ல எவனாலும் முடியாது என்று சூளுரைக்கிறான். அதைக் கண்டு இஸ்ரவேலரும், சவுல் ராஜாவும் பயந்து நடுங்குகின்றனர். அந்த நேரத்தில் அங்கே வந்த தாவீது, ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறதற்கு இந்த அந்நியனாகிய பெலிஸ்தியன் யார்? இவனை ஆண்டவரின் நாமத்தினாலே நான் எதிர்கொள்வேன்’ என்று சொன்னான். அதற்குச் சவுல், ‘நீயோ இளைஞன். அவனோ சிறுவயது முதலே யுத்தவீரன்’ என்று தயக்கம் காட்டினான். அப்போதுதான், தாவீது, தான் தேவனுக்குள் அனுபவித்த பெலனை சாட்சியாகக் கூறுகிறான். தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கரடியும், சிங்கமும் தாக்க வந்தும், அவற்றைத் தான் தேவனின் பெலத்தோடு எதிர்கொண்டதையும், அந்நேரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த தேவன் இப்போதும் இருப்பார் என்றும் தனது ஆணித்தரமான நம்பிக்கையை அறிக்கை செய்வதைக் காண்கிறோம்.
இவ்வித நம்பிக்கையை, நமக்குள் தேவனோடுள்ள நெருக்கமான உறவே உருவாக்கும். தேவன் காப்பார், கூடவே இருப்பார் என்று நாம் கேள்விப்படுவதற்கும் மேலாக, அதை நமது வாழ்வில் அனுபவித்து ருசித்துப் பார்த்தால் மாத்திரமே நமக்குள் ஒரு உறுதி உண்டாயிருக்கும். அந்த உறுதியும், நம்பிக்கையும் தாவீதுக்குள் நிறையவே இருந்ததால், தேவனுடைய பெலத்தோடு கோலியாத்தை எதிர்த்து நின்று வெற்றிபெற்றான்.
நாம் தேவனை, அவருடைய வல்லமையை, வழிநடத்துதலை நமது வாழ்வில் ருசிபார்த்திருக்கிறோமா? தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நாம் பெரிய காரியங்களைத் துணிந்து செய்திருக்கிறோமா? யோசித்து பார்ப்போம். நாம் தேவனைப்பற்றிச் சொல்லும் காரியங்கள் வெறும் கேள்விப்பட்ட அறிந்துகொண்ட காரியங்களாக இருக்கிறதா, அல்லது நமது வாழ்வில் நாம் தேவனை அனுபவித்து ருசித்த காரியங்களாக உள்ளதா? சிந்திப்போம்.
“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.34:8).
ஜெபம்: அன்பின் தேவனே, உம்மோடுள்ள ஐக்கியத்தில் இன்னும் நாங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், கர்த்தர் நல்லவர் என்ற அனுபவத்தோடு கூடிய சாட்சிகளை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பவர்களாகவும் காணப்பட கிருபை செய்யும். ஆமென்.