காலம் தேவனுடையது!

தியானம்: 2024 பிப்ரவரி 26 திங்கள் | வேத வாசிப்பு: பிரசங்கி 3:1-10

YouTube video

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு (பிரசங்கி 3:1).

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு என்றால், அது அது நடக்க வேண்டிய நேரம் நடந்துதான் தீரும்; நாம் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது என்றால் கடவுளை ஏன் நான் கும்பிடவேண்டும்” என்று தன் உடைமைகளை இழந்துபோயிருந்த ஒருவர் அலுத்துக்கொண்டார். “இழந்துபோகும் காலத்திலே இப்படிப் பேசுகின்ற நீங்கள், புதியவற்றைத் தேடிச் சேர்த்துக்கொள்ளும்போது மவுனமாய் இருப்பது ஏன்” என்று கேட்டபோது, அவர் மவுனமாகிவிட்டார். அதே சமயம், “என் தேவன் தவறு செய்கிறவர் அல்ல; இந்த அநியாயத்தின் மத்தியிலும் தேவனுடைய நியாயம் விளங்கும் காலம் வரும்” என்று வீதியிலே குருதி வெள்ளத்துக்குள் கிடந்த தன் கணவனுக்கு அருகில் முழங்காலிட்டு ஜெபித்தாளாம் ஒரு இளம் மனைவி. இவளைக் குறித்து என்ன சொல்லுவோம்!

“காலம்” என்பது மிகவும் முக்கியம். சாலொமோன் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்களும் அவருடைய அனுபவங்களும் அந்தந்தக் காலத்தில் நமது வாழ்விலும் நடக்கத்தான் செய்கின்றன. “ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே.8:7). நமக்கு நடக்கும் பாதகமான சம்பவங்களைக் குறித்து நாம் அதிகமாகக் கலங்கிப்போவதுண்டு. அதேசமயம் அவற்றுக்கு எதிர்மாறாக நன்மைகளும் நிகழுகின்றன என்று நாம் சிந்திப்பது குறைவு. நாம் எந்தக் காலத்திலும் தேவனுக்குள் சந்தோஷமாக திருப்தியாக இருக்கவேண்டுமானால் ஆண்டவருடைய சரியான வேளையை அறிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டு, கர்த்தர் சரியாகவே செய்கிறார் என்று புகழ்ந்து வாழப் பழகவேண்டும். மாறாக, சந்தேகப்பட்டு, ஆத்திரப்பட்டு, தேவன் தவறிழைத்துவிட்டார் என்று அதைரியப்படுவோமானால், அது நமக்கு ஆபத்தாகிவிடும். மாத்திரமல்ல, அது தேவனை விட்டும் நம்மைப் பிரித்துவிடும். தேவனுக்கு விரோதமாக போர்செய்யும் ஆபத்திலும் நம்மைச் சிக்கவைக்கும்.

தேவபிள்ளையே, கடந்து வந்த காலங்களை நாம் சற்று திரும்பிப் பார்ப்போம். சிலர் வாழ்வில் ஒரே கஷ்டம் என்று சொல்லலாம். அதற்காக ஒரு வேளையாவது நன்மையிருக்கவில்லையென்று சொல்லமுடியுமா? துயரங்களையும் அழுகைகளையும் தோல்விகளையும்கூட தேவனுக்குள் வைப்போமானால், அவற்றுக்குள்ளும் நன்மையான தருணங்களை ஏற்படுத்த தேவனால் கூடும். ஏனெனில் காலங்கள் அவரது கரத்தில் இருக்கிறது (சங்.31:15). அதை யாராலும் மாற்றமுடியாது. ஆகையால், எக்காலத்திலும் எவ்வேளையிலும் தேவனையே நம்புவோமாக!

ஜெபம்: காலங்களையெல்லாம் ஆளுகை செய்பவரே, பாதகமான சம்பவங்களினாலே சோர்ந்துபோகாமல் எந்தக்காலத்திலும் உமக்குள் சந்தோஷமாக திருப்தியாக வாழ எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.