எல்லாரும்போல ….
தியானம்: 2024 ஜுன் 25 செவ்வாய் | வேத வாசிப்பு: 1 சாமுவேல் 8:7-22

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் …. (ரோமர் 12:2).
“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம்; பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபா.7:6). இவர்களே கர்த்தருக்குச் சொந்தமான இஸ்ரவேலர். ஆக, அவரே அவர்களுக்கு எல்லாமுமானவர்; அவரே ஆளுகை செய்கிறவர், விடுவித்தவர், போஷித்துப் பாதுகாத்து, சொந்த தேசத்தில் வாழ வைத்தவர். அவர்கள் ஜனம் பெருத்தவர்கள் என்றோ, வேறு காரணத்தாலோ கர்த்தர் இதைச் செய்யவில்லை; இது கர்த்தருடைய கிருபை! மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுத்த ஆணையை நிறைவேற்றும்படி பார்வோனின் கையினின்று அவர்களை மீட்டு, தமக்குச் சொந்த ஜனமாக்கி, “இஸ்ரவேலின் தேவன்” என்று கர்த்தர் தமக்கு ஒரு நாமத்தையும் கொடுத்தார்.
இப்படியிருக்க, சாமுவேலின் பிள்ளைகள் தகப்பன் வழியில் நடவாதபடியால், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றார்கள் இஸ்ரவேலர். இதைக் கேட்டபோது அவர்கள் சொன்னது, “சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி” இங்கே தான் பிரச்சனையே ஆரம்பித்தது. அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்தும்படி கர்த்தர் சொல்ல, சாமுவேலும், சகலத்தையும் தெரியப்படுத்தி, “நீங்கள் தெரிந்துகொண்ட ராஜாவினிமித்தம் முறையிடுவீர்கள். ஆனாலும் கர்த்தர் உங்களுக்குச் செவி கொடுக்கமாட்டார்” என்றார். ஜனங்களோ, தங்களுக்கு ஒரு ராஜா இருக்கவே வேண்டும், “சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம்” என்றார்கள். ஏற்கனவே தேவனைவிட்டு வேறே தேவர்களை அப்பப்போ சேவித்துவந்த அவர்களைக் கர்த்தர் புறக்கணிக்கவில்லை. ஆனால் இப்போது தங்களை ஆள ஒருவர் வேண்டும், அதிலும் “எல்லாரையும்போல” என்று சொன்னபோது, இதுவே இஸ்ரவேலுக்கு கண்ணியாயிற்று என்பதை அவர்களது சரித்திரத்தில் நாம் அறிகிறோம்.
தேவபிள்ளையே, இது இன்று நமக்கும் பொருந்தும். நம்மை ஆளுகை செய்கிறவராக நாம் கர்த்தரை சேவித்து வழிபட்டாலும், அவரது சத்திய வார்த்தையை அறிந்திருந்தாலும், எல்லாரும் நடப்பதுபோல நடக்க, எல்லாரையும் போல வாழ துணிகரம் கொள்ளும்போது அதுவே நமக்குக் கண்ணியாகிவிடுகிறது. அங்கேதான் பாவம் நம்மைச் சுற்றிப்பிடிக்கிறது. “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்தவேஷம் தரியாமல்” என்று பவுல் எழுதிய வார்த்தை எவ்வளவு பாரமானது! நமது சுயத்தினதும் உலகத்தினதும் ஆளுகைக்குள் நாம் விழும்போது, நாம் வேஷதாரிகளாக மாறுகிறோம். அதுவே பாவம் நமது வாழ்வில் ஆதிக்கம்செலுத்த வாசலைத் திறந்துவிடுகிறது. இனி நம்மை ஆளுகை செய்கிறவர் ஆண்டவர் மாத்திரமே; அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் நாம் தேடுவோமா!
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீரே எங்களை ஆளும் தேவன்; உம்மைவிட்டு விலகப் பண்ணும் துணிகரமான பாவங்களுக்கு எங்களை கிருபையாய் விலக்கி இரட்சியும். ஆமென்.