ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2024)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்வருடத்தின் ஆறுமாதங்களை கடந்துவர தேவன் கிருபை செய்தபடியால் தேவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். ஆண்டவர்தாமே சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து, அனைத்துத் தேவைகளையும் சந்தித்து அற்புதமாய் வழிநடத்திவருகிறார். இவ்விதழ் உரிய நேரத்தில் வெளிவர தேவன்தாமே உதவி செய்துள்ளார். இத்தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்துகிறதாயும் இருக்க வேண்டுதல் செய்கிறோம்.
இந்த புதிய கல்வியாண்டிற்குள் பிரவேசித்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே விசேஷித்த ஞானம், சுகம் தந்து பாதுகாக்கவும், மேற்கல்விக்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் இடங்கள் கிடைத்து ஆசீர்வதிக்கப்பட அவர்களுக்காக ஜெபிக்கிறோம். வியாழக்கிழமைதோறும் மாலை 6.00 மணிக்கு நம்பிக்கை டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியானது ஜூலை மாத முதல் நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்கிறோம்.
ஜூலை மாதம் 16, 17 செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இருநாட்கள் சென்னை வேப்பேரியில் உள்ள அனிதா மெதடிஸ்ட் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்படும். பங்காளர்கள் இந்த கருத்தரங்கில் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட அன்பாய் அழைக்கிறோம். இதைக்குறித்த விபரங்கள் 7ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபரங்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இவ்விதழில் ஜூலை மாதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய சபை விசுவாசிகளுக்கு எழுதியுள்ள ஆவிக்குரிய காரியங்களைத் தியானித்து சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் கீழ்ப்படிதலை மையப்படுத்தி சாமுவேல், இராஜாக்களின் புத்தகத்தில் தியானிக்கும் படியாக சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்