கேளுங்கள், தரப்படும் !

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 2 நாளாகமம் 6:13-42

இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக (2 நாளாகமம் 6:40).

இந்த ஸ்தலம் என்பது சாலொமோன் அரசர் மங்கலப்படைப்பு செய்த எருசலேமின் ஆலயத்தைக் குறிக்கிறது. அந்த ஆலயம் “எல்லா தேசங்களுக்கும் ஜெப வீடாக இருக்கவேண்டும்” (ஏசாயா 56: 7;மாற்கு 11:17). சாலொமோனின் ஜெபம் மக்கள் பின்பற்றுவதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தது. இஸ்ரவேலர் எருசலேமில் இருந்தபோது (2 நாளா. 6:24,32,40) ஆலயத்தில் ஜெபிப்பதை அவர் வலியுறுத்தினார் (2 நாளா. 6:24, 32,40). வீட்டைவிட்டு வெளியே இருக்கும்போதும் ஆலயத்தை நோக்கி ஜெபிக்க வேண்டும் (வச.20,21,26,34,38).

தாவீது தனக்கு கர்த்தருடைய உதவி தேவைப்படும்போது ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தார் (சங்.28:2; 138:2). மேலும் யோனா தீர்க்கதரிசியும் பெரிய மீனின் வயிற்றிலிருந்தபோது விண்ணப்பம் செய்தார் (யோனா 2:4). பாபி லோனில் சிறையிருப்பிலிருந்து தானியேல் தீர்க்கதரிசி எருசலேமை நோக்கி ஜெபிக்க தனது ஜன்னல்களை திறந்தார் (தானி.6:10). யோசபாத் அரசர் போர்க்களத்தில் ஜெபம் செய்தார் (2 நாளா. 18: 31-32). இந்த புவியியல் விதி இன்று; விசுவாசிகளுக்கு பொருந்தினால் நான் உண்மையில் சிக்கலில் இருப்பேன்; ஏனென்றால் எனக்கு சரியான திசை உணர்வு இல்லை. ஆனால் தேவனை தனது பிள்ளைகள் “அப்பா!” என அழைத்து, அவர்களின் இதயங்களை பரலோகத்துக்கு உயர்த்தவேண்டும் என விரும்புகிறார்.

மேலும் விசுவாசத்துடன் தேவனின் விருப்பப்படி ஜெபிக்கும்போது நாம் ஓர் அதிசயத்தில் பங்கேற்கிறோம். ஏனென்றால் ஜெபமானது நேரம் மற்றும் இடம் ஆகிய இரண்டையும் மீறுகிறது. இடத்தைப்பற்றி நாம் கவலைப்பட வேணடியதில்லை. தாவீது ஒரு குகையில் ஜெபம் செய்தார் (சங்.57,142). பவுலும் சீலாவும் சிறையில் ஜெபம் செய்தனர் (அப்.16:25). எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்ட படுக்கையில் ஜெபம் செய்தார் (ஏசாயா 38). பேதுரு கலிலேயா கடலில் மூழ்கும்போது இயேசுவிடம் கூக்குரலிட்டார் (மத்.14:29-33). சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு, “ஜெபம் செய்தார்” (லூக்.23:34). எனவே ஜெபிக்கும் பொழுது கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு உபகரணங்கள், அட்டவணை அல்லது சூழல் தேவையில்லை. எனவேதான் பவுல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (1 தெச.5:17) என்றும், “எந்தச் சமயத்திலும்” (எபே.6:18) என்றும் எழுதியுள்ளார். இயேசுவும் “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்” (லூக்.18:1) என்றார்.

ஜெபம் என்பது காலத்தால் மட்டுப்படவில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிந்திருக்கும் நித்திய தேவனுடன் இணைக்கப்படுகிறோம். பிறக்கப் போகும் மக்களுக்கு, எதிர்கால சூழ்நிலைகளைப்பற்றியும் ஜெபித்தார். மேலும் யோவான் 17இல் பதிவு செய்யப்பட்ட ஜெபத்தில், இன்னும் பல நூற்றாண்டுகளாக வாழக்கூடிய விசுவாசிகளுக்காக இயேசு ஜெபித்தார். இன்றும் உங்களுக்காகவும் எனக்காகவும் சபைக்காகவும் ஜெபித்தார் (வச.20-28). நீங்கள் கிருபையின் சிம்மாசனத்துக்கு வரும் போது நாட்காட்டிகள், கடிகாரங்கள், வரை படங்கள் யாவற்றையும் அலட்சியம் பண்ணிவிட்டு, நம்பிக்கையின் மூலம் பூமியின் எங்குமுள்ள மக்களின் சூழ்நிலைகளுக்கும் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிக்கவேணடும்.

பிரார்த்தனை செய்ய தேவாலயத்துக்குத்தான் செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. குடித்துவிட்டு வேகமாக வந்த ஓர் ஓட்டுநர் எனது காரில் மோதியதால் நான் கிட்டத்தட்ட மரிக்கும்நிலையில் இருந்தேன்; என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற ஆம்புலென்ஸில் நான் ஜெபித்தேன். விஷவாயு கசிந்து கொண்டிருந்த அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த விமானத்திலிருந்து நான் ஜெபித்தேன். என்னை அதிகமாய் நேசித்த மக்கள் மரணத்தருவாயில் இருந்தபொழுது அவர்களது மருத்துவமனை அறைகளில் நான் ஜெபித்திருக்கிறேன். எனது செய்திகளின் நேரத்தில் எதிரியான சாத்தானின் எதிர்ப்பை உணரும் பொழுது ஜெபித்திருக்கிறேன். அனைத்தும் தவிடுபொடி ஆகும் நேரத்தில் ரோமர் 8:28ஐக் கூறி அனைத்துக்கும் நன்றி சொல்லியிருக்கிறேன்.

ஜெபத்தை ஒரு அதிசயம் என்று நினைப்பதை நாம் நிறுத்திவிட்டால் நம்முடைய செயல் தடுமாறத் தொடங்குகிறது; பின்னர் நின்றுவிடும். அக்டோபர் 1-1882 அன்று காலை தனது லண்டன் சபைக்கு பிரசங்கித்த சார்ல்ஸ் ஸ்பர்ஜன், “சகோதரர்களே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விண்ணப்பம் செய்வது இராஜ்யத்தின் சட்டம். இது யாருடைய விஷயத்திலும் மாற்றப்படாது” என்று கூறினார். இது “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை” என்ற யாக்.4:2ஐ நமக்கு நினைவூட்டுகிறது.

“தேவனை அடிக்கடி நாம் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அவரிடம் நாம் வராததே அவரைத் தொந்தரவு செய்யும் ஒரே வழி” என்று டி.எல்.மூடி கூறியுள்ளார். நீங்கள் அவர் பாதத்தில் அமர்ந்து ஜெபிக்கிறீர்களா?

“மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (லூக்.11:9).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை