2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜூலை – ஆகஸ்டு 2024)
Dr.உட்ரோ குரோல்

தேவன் தம்மையும், படைப்புகளுக்கான தமது திட்டத்தையும் நமக்கு வெளிப்படுத்தத் தீர்மானித்தார். இது நம்மைப் பிரமிக்கவைக்காமல், நாம் அறிய வேண்டிய அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்திக் காட்டவேண்டும். என்று திட்டமிட்டார். அதற்கு அவர் தெரிந்து கொண்ட மார்க்கம் “அகத்தூண்டுதல்” ஆங்கிலத்தில் இதை “INSPIRATION” என்பர். வேதாகம நூல்களை எழுதுகிற வர்களின் உள்ளத்தில் இதை எழுது, இப்படி எழுது என்று தேவஆவியானவர் தூண்டிக்கொண்டே இருப்பார். நூல்களை எழுதுகிறவர்கள், தேவசித்தத்தின்படி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஜெபசிந்தையுடனும், பயபக்தியுடனும் அமர்ந்து எழுதுவார்கள்.

“அகத்தூண்டுதல்” என்பது வேறு. “வெளிப்படுத்துதல்” என்பது வேறு. இதை இப்படி சிந்தித்துப்பாருங்கள்.

“ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைவர் நியூயார்க்கில் உள்ள அவர்களுடைய அலுவலகத்துக்கு வரும்படி உங்களை அழைக்கிறார். அவரிடம் உங்களுக்குத் தெரிவிக்கும்படி ஒரு செய்தி உள்ளது. அது முக்கியமானது. இந்தப் பூமியையே குலுங்கச்செய்யும் தன்மை உள்ளது.

நீங்கள் அவருடைய அலுவலகத்துக்குள் நுழையும்போது, அவர் உங்களிடம் இப்படிச் சொல்கிறார். “தயவுசெய்து உட்காருங்கள். இந்த உலகத்தில் இருக்கும் வேறு எவருக்கும் தெரியாத ஒரு செய்தியை நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.” பின்னர் அவர் என்றென்றும் இந்த உலகத்தில் சமாதானம் ஏற்படக்கூடிய ஒரு திட்டத்தைத் தெரிவிக்கிறார்.

சிறப்பான அவருடைய திட்டத்தை அவர் உங்களிடம் விளக்கிக் கூறிக் கொண்டிருக்கும்போது, அவர் கூறுகிறார். “பொறுங்கள்; நான் கூறுவதையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் கம்பியூட்டரிடம் சென்று நான் உங்களிடம் கூறிய செய்தி அனைத்தையும் உங்கள் சொந்த வார்த்தைகளில் அதில் பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்து அச்சு நகல் எடுத்து என்னிடம் காட்டுங்கள். நீங்கள் கூறுவது நான் எதிர்பார்க்கும் செய்திதானாவென்று நான் உறுதி செய்யவேண்டும்” என்கிறார்.

நீங்கள் எழுதத் தொடங்குகிறீர்கள்; தலைவர் உங்களிடம் கூறிய செய்தியை மாறாமல் அப்படியே நீங்கள் எழுத செயலாளர் வார்த்தைகளைத் தெரிந்தெடுத்துத் தந்து உதவுகிறார். நீங்கள் உங்கள் மொழிநடையில் உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுத அனுமதிக்கிறார். அந்தப் பொதுச்செயலாளர் உங்கள் சிந்தனையை ஒருமுகப் படுத்துகிறார். அதை எழுதவும், சரியான வார்த்தைகளைத் தந்து எழுதவும் உதவுகிறார். இது ஒருவேளை வெளிப்படுத்து தலையும், அகத்தூண்டுதலையும் விளக்கப் போதுமான உதாரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் புரிந்துகொண்டபடி உங்களுக்கு விளக்கம் கூறுகிறேன்.

அந்தப் பொதுச்செயலாளர் உங்களை அழைத்து, உலக சமாதானத்துக்கான திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினாரே, அதுதான் “வெளிப்படுத்துதல்” ஆகும். அவர் உங்களுக்கு வெளிப்படுத்தின செய்தியை நீங்கள் எழுதும்போது, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, கருத்தைச் சரியாக எழுதுவதற்கு வழிகாட்டுகிறாரே, அதுதான் “அகத்தூண்டுதல்” ஆகும்” வேதாகமமானது தேவனுடைய உள்ளத்தை மனிதனின் உள்ளத்துக்கு வெளிப்படுத்துகிறது. மட்டுமல்ல, அது தேவனால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது. தேவன் வெளிப் படுத்தினதை மனிதர்கள் எழுதும்போது, அது தேவன் விரும்பியபடியே இருந்தது. தேவன் அப்படி இருக்கும்படி தமது அகத் தூண்டுதலால் அவர்களுக்கு உதவினார்.

வேதாகமம் “அகத்தூண்டுதல்” என்று கூறும்போது, அதன் பொருள் என்ன? வார்த்தைகளின் பொருள் எப்போதும் தெளிவாய் இருப்பதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் பொருள் வித்தியாசமாயிருக்கும். எனவே வேதாகமத்தில் “அகத்தூண்டுதல்” என்று மொழி பெயர்க்கத்தக்கதாக தேவன் என்ன கருத்தில் கூறினார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

“அகத்தூண்டுதல்” “தேவஆவி” “INSPIRATION” என்பது மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் “THEOPNE USTOS” என்று உள்ளது. இது இரண்டு சொற்கள் சேர்ந்த ஒருசொல், முதற்பகுதி “THEOS” என்பது தேவனைக் குறிக்கிறது. “PNEO” என்பது ஊதுதல், வெளி சுவாசம் விடுதல், சுவாசித்தல் என்று பொருள்படும். எனவே சொல் பொருளின்படி இதன் பொருள் “தேவனால் ஊதப்பட்டது” என்று பொருள். வேதாகமம் தேவனுடைய வாயிலிருந்து ஊதப்பட்டுப் புறப்பட்டு வந்தது. இதுவொரு முக்கியமான கருத்து. தேவனால் ஊதப்பட்டு, தூண்டப்பட்டு எழுதப்பட்டது என்று பொருள். இன்னொருவர் எழுதியதை தேவன் ஆசீர்வதிக்கவில்லை. தேவன் பவுல், யோவான், பேதுரு, ஏசாயா, மோசே போன்றவர்கள் எழுதிய புத்தகங்களைப் பார்த்துவிட்டு, “நல்லது இந்த புத்தகங்கள் நன்றாக எழுதப்பட்டது போல் தெரிகின்றன. நான் அவற்றை அங்கீகரித்து, அவற்றின்மீது என்னுடைய முத்திரையைப் பதிக்கிறேன் என்று கூறவில்லை. அப்படி இல்லவே இல்லை.

எழுதிமுடிக்கப்பட்ட புத்தகங்களை தேவன் ஆசீர்வதிக்கவில்லை. தம்முடைய வார்த்தை எழுதப்படும்போது தேவாவியானவர் எழுதுபவர்களின் உள்ளத்திலிருந்து எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர்கள் எழுதினார்கள். எழுதும்படி பொருளைத் தூண்டிக்கொண்டிருந்தவர் தேவஆவியானவரே!

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்