வீழ்ச்சியின் ஆரம்பம்!
தியானம்: 2024 ஆகஸ்டு 18 ஞாயிறு | வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 10:23-29

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ் செய்தானல்லவா? அவனைப் போன்ற ராஜா அநேகம் ஜாதி களுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை (நெகே.13:26).
நெகேமியா தொடர்ந்து எழுதுகிறார்: “அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். தேவன் அவனை இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் “பாவஞ்செய்யப்பண்ணினார்களே.” யாருக்கும் இந்நிலைமை நேரிடக்கூடாது! உலகரீதியில் நாம் ராஜாக்களாக அதிபதிகளாக இல்லாவிட்டாலும், “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக்கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (வெளி.1:6). இந்த சத்திய வார்த்தையை நாம் விசுவாசிப்பது மெய்யானால், ஒருவிசை சாலொமோனின் இடத்தில் நம்மை நிறுத்தி வைத்து ஆவிக்குரிய ரீதியில் தியானிப்போமாக.
“நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்று தேவன் கேட்க, “உமது ஜனத்தை விசாரிக்கவும், நன்மை தீமையை வகையறுக்கவும் ஞானமுள்ள இருதயம் வேண்டும்” என்று சாலொமோன் பதிலளிக்க, அது கர்த்தருக்கு உகந்ததாயிருந்தது. அவர் சாலொமோனுக்கு ஞானத்தையும், புத்தியையும், மனோவிருத்தியையும் கொடுத்தார் என்று வாசிக்கிறோம். அப்படியே கர்த்தருக்கென்று சாலொமோன் கட்டிய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட சாலொமோன் பாவத்தின் பிடியில் அகப்பட்டது ஏன்?
முதலாவது, சாலொமோனின் விழுகை, 1 இராஜாக்கள் 10:25இல் ஆரம்பித்துவிட்டது. அவன் கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும்கூட கர்த்தர் அவனுக்குக் கொடுத்திருக்க, அவன் மேலதிக செழிப்பை நாடினான். அப்போதே அவன் சறுக்க ஆரம்பித்துவிட்டிருந்தான். “சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும்போல நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்… என்று ஆரம்பித்த மோசே, தனது கடைசி பிரசங்க வார்த்தையிலே, “அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளை தனக்குச் சம்பாதிக்கும்படி ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக் கடவன்” (உபா.17:14-16) என்று கூறினார். ஆனால் சாலொமோன், தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; “தனக்கு குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்.” இவனது இந்த விழுகைக்கு யார் காரணம்? இன்று, சாலொமோனைப்போல அல்லாமல், இயேசுவின் இரத்தத்தினாலேதானே நமக்கு ராஜரீக கிருபை கிடைத்தது. அப்படியிருக்க, எந்த இடத்தில் கர்த்தருடைய வார்த்தைக்கு மாறாக நடந்து, வழுவிப்போகும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதை சிந்தித்துப்பார்த்து மனந்திரும்புவோம்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்களுக்கு முன்மாதிரியாக வைத்துச்சென்றுள்ள உமது அடிச்சுவடுகளில் நாங்கள் நடந்து உமது கிருபையை நாங்கள் இழந்திடாமல் காத்துக்கொள்ள உதவிச்செய்யும். ஆமென்.