பெரிய வீழ்ச்சி!
தியானம்: 2024 ஆகஸ்டு 19 திங்கள் | வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 11:1-13

… சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப் போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை (நெகேமியா 13:26).
“அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். தேவன் அவனை இஸ்ரவேல் அனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் “பாவஞ் செய்யப்பண்ணினார்களே” என்ற நெகேமியாவின் வார்த்தைகளைச் சிந்திப்போம். “பாவஞ் செய்யப்பண்ணினார்களே” என்றால் அவர்கள் யார்?
தேவன் ஏராளமாகக் கொடுத்திருந்தும், மேலும் செழிப்பைப் பெருக்கி, தனக் குரியவற்றைப் பெற்றுவருவதற்கு மக்களை எகிப்துக்கு அனுப்பிய சம்பவத்திலேயே சாலொமோன் பாவத்தில் சறுக்க ஆரம்பித்துவிட்டதை நேற்றுக் கவனித்தோம். மாத்திரமல்ல, அவன் எகிப்திய பெண்ணை விவாகம் பண்ணியபோதே சரிவு ஆரம்பித்திருந்தது (1 இராஜா.3:1). மேலும் “அவன் (ராஜா) பின்வாங்கிப் போகாதபடி அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்” என்று மோசே பணித்திருந்தார். மேலும், மேட்டிமைகொள்ளாமலும், கற்பனையை விட்டுச் சாயாமலும், பிரமாணங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வதற்குத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாண நூலின் ஒரு பிரதியை தன்னிடத்தில் வைத்திருந்து, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்” என்று சொன்னதுமன்றி, “இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்” (உபா.17:17-20) என்ற வாக்கையும் மோசே சொல்லியிருந்தார். சாலொமோனோ, அந்நிய ஸ்திரீகளில் ஆயிரம் பெண்களைக் கொண்டான், அவர்கள் அவன் இருதயத்தை வழுவிப்போகச் செய்தார்கள். அவன் கர்த்தரையும் அவருடைய கற்பித்தல்களையும் கைக்கொள்ளாமற் போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
சாலொமோன் தன்னைத்தானே ராஜாவாக உயர்த்திக் கொள்ளவில்லை; கர்த்தரே அவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தார். தேவன் அவனை சிநேகித்தார் என்கிறார் நெகேமியா. இப்படிப்பட்டவனும் பாவஞ்செய்தானா? ஆம், செய்தான். தேவபிள்ளையே, இன்று நாம் யார்? நாம் நம்மை மீட்கவுமில்லை, ராஜாக்களாக, தேவபிள்ளைகளாக உயர்த்தவுமில்லை; தேவனே அதை நமக்குச் செய்தார். மேலும், ஆண்டவரே நம்மை முதலில் நேசித்தார், அவரே நம்மைத் தெரிந்துகொண்டார். சத்திய வேதமும் நமது கைகளில் இருக்கிறது. சாலொமோன் விழுந்ததற்கு முக்கிய காரணம் அவன் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்ததுதான். அனுதினமும் அதை வாசித்து அதன்படி நடக்கவேண்டியவன் எப்படித் தவறினான்? ஆக, இன்று நாம் அடிக்கடி பாவத்தில் வழுவிப்போவதற்கும் முக்கிய காரணம் இதுதான். தேவ வார்த்தையை விட்டுவிலகி, அதைப் புறக்கணிப்போமானால், நாம் தேவசமுகத்தைவிட்டு விலகியதற்குச் சமமாகும்.
ஜெபம்: எங்கள் பரலோக பிதாவே, உத்தம இருதயத்தோடு எங்களை நாங்கள் ஆராய்ந்து பார்த்திடவும், எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய் கர்த்தருடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்ளுகிறவர்களாய் இருப்பதற்கும் கிருபை செய்யும். ஆமென்.