இருளிலும் தேவனோடு!
தியானம்: 2024 ஆகஸ்டு 28 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 50:1-11

உங்களில் எவன் … தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்;பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்(ஏசா.50:10).
பல வருடங்களுக்கு முன் ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையைச் சரிப்படுத்த பல முயற்சிகள் எடுத்தேன், பலனில்லை. அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள பலர் பலவித ஆலோசனைகளைச் சொன்னார்கள். எனக்கோ நெருக்குதல் அதிகரித்தபோதும் மனஸ்தாபத்தோடு உறவுகளை முறித்துவிட்டுச் செல்ல மனதில்லை. இப்போது என்ன செய்வது? புறப்படுவதா, இல்லையா? இதிலே எதைத் தெரிந்தெடுப்பது? சூழ்நிலையின் நெருக்கமோ புறப்பட்டு ஓடி விடு என்று துரத்தும்; ஆனால் உள்ளமோ பொறுத்திரு என்று அமர்த்தும். தத்தளிக்கும் மனதோடு அன்று ஆண்டவர் பாதத்தில் விழுந்தேன்.
அன்றுதான் இப்படியொரு வார்த்தையை வேதாகமத்தில் கண்டேன். திரும்பத்திரும்ப அதை வாசித்தேன். அது என்னோடு பேசியது, “உண்மைதான், நீ இருப்பது இருளுக்குள்தான். அது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், என் சொல் கேட்டு இந்த இருளுக்குள்ளேயே நடப்பாயானால், அந்த இருளிலும் நான் உன்னுடன் இருப்பேன். மாறாக, உனக்கு நீயே வெளிச்சம் உண்டாக்குவேன் என்று சொல்லி நெருப்பைக் கொளுத்துவாயானால், நீ கொளுத்திய நெருப்பிலேயே நீ வெந்துபோவாய்.” அந்த நிமிடமே ஆண்டவர் கரத்தில் அந்த இருளை விட்டுவிட்டேன். ஆண்டவர் இல்லாத வெளிச்சத்தைப் பார்க்கிலும், இலகுவான வாழ்வைப் பார்க்கிலும், அவர் என்னோடே இருக்கும் இருளான, இக்கட்டான வாழ்வுமேல் என்று உணர்ந்தேன். கர்த்தர் என்னைக் கைவிடவில்லை. உடனடியாக அந்த இருளை அகற்றாதபோதிலும் அழகாக நேர்த்தியாக யாருக்கும் எந்த சேதமும் நேரிடாமல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். மேலும், “அந்தப் பிரச்சனை வந்ததினால் அது எனக்கு எத்தனை ஆசீர்வாதமாக மாறியது” என்று எண்ணத்தக்கதாக யாவையும் தலைகீழாக மாற்றிப்போட்டார். அல்லேலூயா!
தேவபிள்ளையே, “நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர். ..கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்” (சங்.138:7,8) என தாவீது சும்மாவா பாடிவைத்தார்? நமது புத்தியில், மனுஷஞானத்தில், தோற்றங்களில் நம்பிக்கை வைத்து நமது தெரிந்தெடுப்புகளைச் செய்வோமானால் அவையே நமக்குக் கண்ணியாக மாறக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொண்டுவரும். ஏனெனில் எதுவும் நிரந்தரமற்றவை. ஆயினும், “மீட்கக்கூடாதபடி என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற் போயிற்றோ?” என்று கர்த்தர் கேட்கிறார். ஏன் நமக்கு தடுமாற்றம்?
தம்மையே நமக்காக கொடுத்த ஆண்டவர், மாறிப்போகும் இந்த உலக சிக்கல்களில் உன்னைக் கைவிடுவாரோ? அவரை நம்பு. அவரை சார்ந்திரு. பொறுமையாய் காத்திரு. அவர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார்.
ஜெபம்: அன்பின் தேவனே, எந்த இக்கட்டு நேரத்திலும் மனுஷஞானத்தை சார்ந்திடாமல், உம்மையேச் சார்ந்துகொள்ள நீர் எங்களை வழிநடத்தும். ஆமென்.