பிரிவினைகள் ஏன்?

தியானம்: 2024 செப்டம்பர் 20 வெள்ளி | வேத வாசிப்பு: தானியேல் 1:8-17

YouTube video

நானும் என் வீட்டாருமோவென்றால்… (யோசுவா 24:15)

கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூட வரவழைத்து… (அப்.10:24).

மேலேயுள்ள குடும்ப வரிசையிலும், உறவினர்கள் வரிசையிலும் நம்முடைய பெயரை இணைத்துப்பார்க்க முடியுமா? யோசுவாவுடன் அவருடைய குடும்பம் இணைந்து நின்றது. கொர்நேலியு எடுத்த முடிவில் பெரும் கூட்டமே இணைந்து நின்றது. குடும்பத் தலைவன் ஒன்று செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை அன்று அவர்களுக்கு இருந்தது. இன்று அந்த நம்பிக்கை நமது குடும்பத்தில் உறவுகளுக்குள் இருக்கிறதா?

ராஜ உணவையும் பானத்தையும் உட்கொள்வதில்லை என உறுதியான தீர்மானம் எடுத்தது தானியேல் (தானி.1:8). பின்னர் வசனம் 12இல், ‘…உமது அடியாரைச் சோதித்துப்பாரும்” என்று தானியேல் பன்மையில் பேசுவதைக் காண்கிறோம். பின்னர் இந்த நான்கு வாலிபரும் என்று வசனம் 17இல் வாசிக்கிறோம். என்ன ஆச்சரியம்! உறுதியான ஒரு தீர்மானம் எடுத்தது தானியேல். அதிலும் அவர் அந்தத் தீர்மானத்தை தனது இருதயத்திலேதான் எடுத்தார் என எழுதப்பட்டுள்ளது. அப்படியிருக்க, அவரது நண்பர்களும் அந்தத் தீர்மானத்தில் பங்கெடுத்தது எப்படி? ஒன்று, அந்த நண்பர்களும் தேவனைச் சார்ந்து வாழ்ந்திருந்தார்கள் என்பதை பின்னர் நடந்த சங்கதிகளிலிருந்து அறிகிறோம். அடுத்தது, இந்த நான்கு வாலிபர்களுக்கிடையிலும் இருந்த ஒருமனம் ஐக்கியத்தைத்தான் நாம் கவனிக்கவேண்டும். தானியேல் எடுத்த முடிவில் நண்பர்களும் இணைந்தது, அவர்களுக்குள்ளிருந்த கர்த்தருக்குள்ளான ஒருமனப்பட்ட ஆவியையும், நண்பர்கள் தானியேலில் வைத்திருந்த நம்பிக்கையையும் நமக்கு தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பிரியமானவர்களே, நமது வாழ்வில் இந்த அனுபவம் நமக்குண்டா! கிறிஸ்தவ உறவுகள் இன்று ஒருமனம் அல்ல; இருமனமாக பிரிந்துகாணப்படுவது எவ்வளவு துக்ககரமானது. ஒருவர் ஒரு தீர்மானம் எடுத்தால், சாதாரணமான அபிப்பிராயம் ஆலோசனை சொன்னால்கூட அதனை முன்னெடுக்க எத்தனை முட்டுக்கட்டைகள், எத்தனை தர்க்க விவாதங்கள், எத்தனை சாக்குப்போக்குகள்! இது ஏன்? தானியேலைப்போல தேவனுடைய வார்த்தையையே அடிப்படையாகக் கொண்டு காரியங்களை முன்னெடுக்க முனைந்தால் அதற்கு வருகிற தடைகளோ சொல்லி முடியாது? இதனால்தான் நமது உறவுகள் இன்று தடுமாறுகின்றன. குடும்பமோ, நட்போ, வேறு உறவுகளோ, இவற்றுள் இன்று ஏன் பிரிவினைகள்? நம் மத்தியில் மனஒற்றுமை, ஒருவரையொருவர் நம்பும் தன்மை ஆகியவை மங்கிவிட்ட காரணம் என்ன? நாம் கர்த்தரோடு இல்லையா? அல்லது, நமக்குள் கர்த்தருடைய ஆவி இல்லையா? அல்லது, நமது உறவுகளும் நட்புகளும் கர்த்தருக்குள் இல்லையா? சிந்திப்போம்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எனது குடும்பத்தில் உறவுகளுக்குள் இருக்கும் பிரிவினைகளைச் சரி செய்யும்படியாக உம்மிடத்தில் மன்றாடுகிறேன். ஆமென்.