கவலைகள் நீங்கட்டும்!

தியானம்: 2024 செப்டம்பர் 29 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்தேயு 6:25-34

YouTube video

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:33).

இரவு நீங்கி, பொழுது விடிந்து, சேவல் கூவும் சத்தத்தோடு கண் விழிக்கும்போது, “இந்நாள் ஏன் தான் விடிகிறதோ? இன்றைய பொழுது விடியாமலே இருந்திருக்கலாமே; இத்தனை மனப்பாரத்தோடு எப்படியாக இந்நாளின் காரியங்களை நான் கவனிப்பேன்” என உள்ளத்தின் பாரத்தினால் ஆத்துமா சோர்ந்துபோன அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? அப்படியாக உலகத்தின் பாரங்களினால் கவலையடைந்த மனிதனுக்கு ஆண்டவர் இயேசு கொடுக்கும் அழைப்பு என்னவென்றால், “உன்னைச் சுற்றிலும் இருக்கும் இயற்கையை சற்றே கவனித்துப்பார்” என்பதாகும்.

ஆம், ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகளை ஆண்டவரே போஷிக்கின்றார். காட்டுப் புஷ்பங்களைக் கவனித்துப் பார்ப்போமேயானால் அவைகளை உடுத்துவிக்கிறவரும் அவரே. அவைகள் எப்போதாவது தமது தேவைகளைக் குறித்துக் கவலைப்படுகின்றனவா? படைப்பிலே மிகச் சாதாரணமான இவைகளைப் பராமரிக்கும் நம்முடைய அன்பின் தேவன், தமது சாயலாகவும், படைப்பின் சிகரமாகவும் சிருஷ்டிக்கப்பட்ட உன்னைப் பராமரிக்காமல் விட்டுவிடுவாரோ? ஆண்டவர் நம்மைப் பராமரிப்பேன் என்று வாக்களித்துள்ளார் என்பதற்காக நாம் ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துவிட முடியாது. அவர் சோம்பேறித்தனத்தை விரும்புகிறவரல்ல. “சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்” (நீதி.21:25). பறவைகளானாலும் அவை இரைதேடிச் செல்லவேண்டும். புஷ்பங்களானாலும் அதைத் தாங்கிநிற்கும் செடிகள் தமது வேர்களை நீர்க்கால்களை நோக்கி நீட்ட வேண்டும். எனவே நமக்குத் தேவன் தந்த திறமைகள், தாலந்துகள் மற்றும் வளங்களைக்கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவேண்டும். அப்பொழுது கர்த்தர் நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதித்து, வாய்க்கச்செய்வார்.

ஆம் பிரியமானவர்களே, வெறுமனே அமர்ந்திருந்து அந்த நாளைக் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதால் நமக்கு ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. நமது தேவைகளையும் பாரங்களையும் கவலைகளையும் ஜெபத்தின் மூலம் கர்த்தரிடம் சொல்வோம்.செய்யும்படி நம் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை முழுப்பெலத்தோடே செய்வோம். எப்போதும் தேவனுக்கும் அவருடைய நீதிக்கும் முதலிடம் கொடுப்போம். அப்போது அவர் நம் தேவைகளைச் சந்தித்து, நம்மை ஆசீர்வதிப்பார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:6,7).

ஜெபம்: அன்பின் தேவா! என் கவலையை யார் அறியாமல் போனாலும் நீர் அறிவீர், ஆன படியால் உம்மைத் துதிக்கிறேன். அதனால் என் கவலை யாவும் நீங்கிற்றே. நன்றி. ஆமென்.