அவமானங்கள் அதமாகும்!

தியானம்: 2024 அக்டோபர் 4 வெள்ளி | வேத வாசிப்பு: எபிரெயர் 12:1-4

YouTube video

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து… (எபி.12:2).

நீங்கள் எப்போதாவது அவமானத்தை சந்தித்திருக்கிறீர்களா? “பல வருடங்களுக்கு முன்பதாக, ஒரு ஜெபத்தோடு ஆரம்பித்த பிறந்தநாள் கொண்டாட்டம், நாகரீக குடியில், சங்கீத இசையில், ஆடல்மேடையில் ஆடிக்கொண்டிருக்க, நானும் என் நண்பனும் ஒதுங்கியிருந்தோம். நேரம் செல்லச்செல்ல நாமே அவர்களுக்குப் பாடலானோம். கேலிக்கும் கூத்துக்கும் ஆளானோம். கூனிக்குறுகி, பரிகாசம் தாங்காமல் நாங்கள் எழுந்திருந்தபோது, கேலி செய்துகொண்டே நம்மை வழியனுப்பிவிட்டார்கள். அந்த அவமான உணர்வு என்னைவிட்டு அகல அதிக காலம் பிடித்தது” என்றார் ஒருவர்.

பாபிலோனில் வாழ்ந்திருந்த அன்றைய யூதரின் நிலைமையும் இதுதான். எருசலேம் தேவாலயம், அதன் பணிமுட்டு எல்லாமே யூதருக்கு மிகவும் முக்கியமானவை. ஆசாரியர் மாத்திரமே தொடக்கூடிய பரிசுத்த பொற்பாத்திரங்களை இந்த அந்நியராஜாவும் அவன் ஆட்களும், தங்கள் களியாட்டத்திற்கும் குடி வெறிக்கும் உபயோகித்துக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டபோது அந்த யூத ஜனம் எவ்வளவாய் கூனிக்குறுகியிருக்கும். ஆலயத்தின் பாத்திரங்கள் அவமானத்துக்குள்ளானால் அது தேவனுடைய நாமத்துக்கு அவமானம்; அவரைத் தொழுதுகொள்கின்ற அந்த மக்களுக்கும் அவமானம். “ஏன் தேவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று நம்மைப்போல அவர்களும் கேள்வி எழுப்பியிருக்கவும் கூடும். ஆனால், அந்த அவமானம் தொடர்ந்ததா?

அன்பானவர்களே, பிறர் முன்னிலையில் அவமதிக்கப்படுவது அவமானப்படுவது மிகவும் வேதனையான அனுபவமே. இதனால் தற்கொலை செய்து செத்துப் போனவர்கள் பலர். சிலர் வேண்டுமென்றே கூப்பிட்டு வைத்தே அவமானப்படுத்தி அனுப்புவார்கள். அடுத்த பக்கத்தில் தெரிந்தோ தெரியாமலோ பிறருடைய அவமானத்துக்கு நாம் காரணராக இருந்ததுண்டானால் இன்றே அதைச் சரிப்படுத்திவிடுவோம். அதுவும் நமக்கு ஒரு மானப்பிரச்சனையாக இருந்தாலும் பரவாயில்லை; நமக்காக அவமானத்தைச் சகித்தவர்நிமித்தம் நாம் அதைச் செய்தே ஆகவேண்டும்.

ஏதோவொரு காரணத்தால் அவமானப்பட்டுக் கூனிக் குறுகிப்போயிருக்கும் தேவபிள்ளையே, யூதரைப் பரிகசித்த ராஜாவைக் கலங்கடித்தது ஒரேயொரு விரலேதான்! நமது ஆண்டவர், ராஜாதி ராஜா, அவரே பரிகசிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்! அந்த அவமானம் அவருக்கு நேரிட்டதற்குக் காரணமே நமது பாவமேதான். ஆனாலும், தாம் செய்து முடிக்கப்போகும் கிரியையின் மேன்மையை அறிந்திருந்த அவர் நம்மை நேசித்து, அவமானத்தைப் பொறுமையோடே சகித்ததால், இன்று பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். நமது ஆண்டவரைப் போல எல்லாச் சூழ்நிலையிலும் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் நமது அவமானத்தின் மத்தியில் நம்மை நிச்சயம் உயர்த்துவார்.

ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் நிந்தைகளை நீக்கும்படியாய் அவமானமான சிலுவையைச் சுமந்து எங்களை இரட்சித்தபடியால் உமக்கு மகிமையைச் செலுத்துகிறோம். ஆமென்.