ஒரே நிமிஷத்தில்…
தியானம்: 2024 அக்டோபர் 5 சனி | வேத வாசிப்பு: தானியேல் 5:4-6

… கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப் படுவோம் (1கொரி. 15:51).
வாழ்வில் மாற்றமில்லை, துன்பங்கள் கஷ்டங்கள் ஓயவில்லை என்று குமுறிக் கொண்டிருக்கிறவர்கள் பலர். அதிலும் எகிறி நிற்கும் இன்றைய விலைவாசியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஏராளமானபேர். இவர்களில் நீங்களும் ஒருவரா? எது எப்படியிருந்தாலும் உலகின் கட்டுப்பாடு இன்னமும் சர்வவல்லவரின் கையில்தான் இருக்கிறது. எனவே, வாழ்வை திரும்பிப் பாருங்கள். எதுவுமே இவ்வுலகில் நிரந்தரமில்லை. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தேவனுக்கு ஒருவிநாடி போதும்!
பெரிய விருந்துபசாரம்; தேவாலயத்தின் பொற்பாத்திரத்தில் குடித்துவெறித்து, ஆண்பெண் வித்தியாசமின்றி வெறியாட்டம் ஆடி, தங்களையே மறந்து குதூகலித்திருந்திருப்பார்கள். அந்த ராஜமண்டபத்தில் இருந்தவர்கள். இந்த விருந்திற்கு ஆயத்தம் செய்ய எத்தனை நாட்கள், எவ்வளவு பணம் செலவாகியிருக்கும்! ராஜாவுக்கென்றே ஏராளமான பொற்பாத்திரங்கள் இருக்க, யூதரின் தேவாலயத்துப் பொற்பாத்திரத்தில் குடிப்பதில் ராஜாவுக்கு அவ்வளவு பெருமிதம்! யூதரை அவமானப்படுத்தியதில் அவனுக்கு பெரும் வெற்றி; இஸ்ரவேலின் தேவனை கனவீனப்படுத்திவிட்டதால் சந்தோஷத்தில் மிதந்திருந்தான். பாபிலோன் ராஜ்யம் முடிவுக்கு வரும்காலம் வந்துவிட்டதை சிந்திக்கவும் முடியாதநிலையில் ராஜா களித்திருந்தான். இந்தக் களிப்பு பல மணிநேரம் நீடித்திருக்கலாம். ஆனால், ஒரே விநாடியில் ராஜாவின் களிப்பு கலக்கமாக மாறியது. முகம் வேறுபட்டது. நினைவுகள் கலங்கின. முழங்கால்கள் மோதிக்கொண்டன. அவன் கத்தினான், கதறினான். இதற்குக் காரணம் “ஒரேயொரு விரல்” மாத்திரமே. “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்.” ஆனால் நாமோ, அந்த ஒரு விநாடியை மறவாமல், “நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி.22:11) என்ற வார்த்தைக்கு இணங்கி, அந்த ஒரு நிமிடத்தை நினைத்து ஜாக்கிரதையாயிருப்போம்.
தேவபிள்ளையே! காரியங்கள் மாறிப்போக ஒரு நொடிப்பொழுது போதும். நம்மைச் சிறுமைப்படுத்துகிறவர்கள் விலகியோட ஒரு நிமிடம் போதும். அகங்காரங்களையும் ஆளுகைகளையும் அழித்துப்போட ஒரு விரல் அசைவு போதும். சுகவாசி பரதேசியாக எவ்வளவு நேரம் எடுக்கும்? அந்த ராஜாவின் களிப்பு கலக்கமாக மாறவும் ஒரு நிமிஷம்தான் எடுத்தது. அதுபோல நமது கலக்கமும் களிப்பாக மாற ஒரு நிமிஷம் போதும். ஒவ்வொரு நிமிடமும் தேவன் கிரியைசெய்யும் நிமிடம் என்ற தெய்வீகபயத்துடனும் விழிப்புடனும் வாழுவோம். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாற ஒரு நிமிடம் போதும். நாம் மறுரூபமடைய ஒரு நிமிடம் போதும். அது இன்றே நிகழலாம். ஒரேயொரு நிமிடம், நம்பிக்கையோடிருங்கள்.
ஜெபம்: மாற்றங்களை தரும் ஆண்டவரே, ஒவ்வொரு விநாடியும் நீர் எங்களுக்குத் தரும் அற்புதமான தருணங்கள் என்பதை உணரச் செய்தீர். உமக்கு நன்றி. ஆமென்.