ஜெபி! தொடர்ந்து ஜெபி!

தியானம்: 2024 அக்டோபர் 21 திங்கள் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:4-9

YouTube video

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக்கோபு 4:8).

நமது ஜெபவாழ்வு அடிக்கடி தொய்ந்துபோக காரணம் என்ன? நமது இருதயத்தை ஏதாவது பாரம் அழுத்துகிறதா? அல்லது பதில் கிடைக்கவில்லை என்று சோர்ந்து போனோமா? ஜெபத்தை அசட்டை செய்வது ஒன்று; மனதில் பாரம் அழுத்தும்போதும் நெருக்கங்கள் பயமுறுத்தும்போதும் ஜெபிக்கமுடியாமல் தவிப்பது இன்னொன்று, அல்லது வெறுப்படைந்து ஜெபிப்பதை விட்டுவிடுவது வேறொன்று. முன் சொன்னது, அது நமது ஜீவனை இழந்துவிடுவதற்கு சமமாகிவிடும். பின்னானவற்றின் தாக்கங்களை ஆரம்பத்திலேயே சரி செய்யாமல் தொடர்ந்து அதற்கு இடமளித்தால் சர்வவல்லவருடனான உறவையே துண்டித்துப்போட இது வழிவகுத்து விடும்.

பத்திரத்தில் ராஜா கையெழுத்திட்டது தெரிந்தும் தானியேல் தன் ஜெபத்தையோ தேவனை ஸ்தோத்திரிப்பதையோ நிறுத்தவில்லை. அவர் சூழ்நிலைக்குப் பயமடையவில்லை. சோர்வடையவில்லை. மரண ஆபத்திலும் ஜெபிக்கக் கூடியதாக இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம், “தான் முன் செய்து வந்தபடியே” இதுதான். இந்த 80 வயது வரைக்கும் அவரை உண்மையிலும் நேர்மையிலும் நிலைநிறுத்தியது ஜெபம், தேவனற்ற பட்டணத்திலும் தேவனுக்கு சாட்சியாய் நிற்க பெலனளித்தது ஜெபம், நேபுகாத்நேச்சார் சொப்பனத்திற்கு அர்த்தம் கேட்டபோது தானியேலுக்கும் அவரது தோழர்களுக்கும் ஜெயம் கொடுத்ததும் ஜெபம்தான். இவற்றை தானியேல் மறக்கவில்லை. இவற்றோடு ஒப்பிடும்போது, இந்த அதிகாரிகள் எம்மாத்திரம்! தானியேல் ஜெபிப்பதை நிறுத்தவேயில்லை; அவர் மனிதனுக்கு அல்ல, தேவனுக்குப் பயந்து நடந்த ஒருவர். ஜெபம் அவரது வாழ்வின் மூச்சாக இருந்தது.

அன்பானவர்களே, என்னதான் நேரிட்டாலும் ஜெபிப்பதை மாத்திரம் நிறுத்தி விடுவதையோ பின்தள்ளிப் போடுவதையோ செய்யாதிருப்போமாக. ஜெபிக்க முடியாத அழுத்தம் நேரிடும்போது, “ஜெபிக்கப் பெலன் தாரும்” என்று ஜெபிப்போம். உன்னதத்தின் பெலன் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். நெருக்கடிகளில் தேவனது மகத்துவங்களை நினைத்து அவரைத் துதித்துப் பழகுவோம். இதுவரை அவர் நடத்திய வழிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். மனச்சுமைகளை தேவனிடம் மாத்திரமே இறக்கிவைப்போம். அதுவே ஒரு சுகமான அனுபவம். நாம் தேவனோடுள்ள உறவை நிறுத்தினால், நிச்சயம் சத்துரு குழப்புவான். ஜெபத்திற்குள் மகிழ்ந்திருக்கும் நேரம் என்பது தேவனுடைய கிருபாசனத்தண்டை சேரும் மகிழ்ச்சியான நேரமாகும். அன்று சிங்கங்களுக்கு தான் இரையாகிவிடுவேன் என்று தானியேல் பயந்திருந்தால், என்னவாகியிருக்கும். தேவன் தம்மைத் தப்புவிப்பார் என்று தானியேல் ஜெபிக்கவில்லை; மாறாக, என்றும் செய்வதுபோல அவர் ஜெபித்தார்; கர்த்தர் அவருக்காக சிங்கங்களின் வாயை அடைத்தார். தேவனோடுள்ள உறவை வேறு எதற்காகவும் விட்டுக்கொடுக்காதிருப்போமாக.

ஜெபம்: ஆண்டவரே, நாங்கள் ஜெபிக்கக்கூடாதபடி தளர்வுகளை ஏற்படுத்துகிற பிசாசுக்கு இடங்கொடாமல் ஜெபிக்க உமதாவியால் எங்களைப் பெலப்படுத்தும். ஆமென்.