பெருகவும் சிறுகவும்!
தியானம்: 2024 டிசம்பர் 12 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 3:22-36

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் (யோவான் 3:30).
நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தம் கேட்டு துயிலெழுவதுண்டு. சேவல் கூவினால் பொழுது விடிந்துவிட்டது என்பது அர்த்தம். அந்தச் சேவலுக்கும் ஒருநாள் பெருமை வந்ததாம். “நான் கூவுவதால்தானே பொழுது விடிகிறது; எனவே, ஒரு நாளைக்குக் கூவாமல் இருந்து பார்ப்போம்” என்று எண்ணியதாம். அது கூவாமல் இருந்தபோதும் பொழுது விடிந்துவிட்டதைக் கண்ட சேவல் தனது தற்பெருமையைக் கண்டு வெட்கமடைந்ததாம். இது கற்பனை கதைதான், எனினும், தேவனிடமிருந்து ஊழியப்பணியைப் பெற்றுக்கொள்ளும் நாமும் சில வேளைகளில் கர்வம்கொண்டு நாமே எல்லாம் என்று எண்ணிவிடுவதுமுண்டு.
இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தவென்றே முன்னோடியாக வந்தவன் தான் யோவான் ஸ்நானன். அவனது சீஷர்கள் சிலர் இயேசுவைக் குறித்து அவனிடம் கேட்டபோது, அவனோ, “நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன்… அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்று பதிலளித்தான். கிறிஸ்துவைக்குறித்து சரியாக அறிந்துகொள்ளாத சீஷரிடம், கிறிஸ்துவைப் பார்க்கிலும் தானே பெரியவன், வல்லமைமிக்கவன் என்று யோவான் தன்னைப் பெருமைப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவனது மனநிலையோ தான் சிறுகவும் கிறிஸ்து பெருகவும் வேண்டும் என்பதாகவே இருந்தது.
கர்த்தருக்காய் பணி செய்யும் தேவபிள்ளையே, நமது மனநிலை என்ன? நம்மைநாமே உயர்த்தி வாழ ஆசிக்கிறோமா? ஊழியப்பணியை நம்மை நம்பி ஒப்புவித்த தேவனை மறந்து ஊழியம் செய்கிறோமா? ஊழியத்தினூடாக நமது பெயரையும், புகழையும் பரப்பி, பிறர் மத்தியில் பிரபல்யம் தேடுகிறோமா? கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தது பிரபல்யம் தேடுவதற்காக அல்ல; பிதாவின் சித்தத்தைச் செய்யவே வந்தார். அவர் எத்தனையோ தடவை தன்னைப் பிரபல்யப்படுத்த ஏதுவிருந்தும் அதைச் செய்யவில்லை. சிலுவையின் முடிவுபரியந்தமும் அவர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றவே பிரயாசப்பட்டார். அந்த தாழ்மையையும், கீழ்ப்படிதலையுமே தமது சீஷருக்கும் கற்றுக்கொடுத்தார்.
தேவபிள்ளையே, அதனை நாமும் பின்பற்றி, யோவான் ஸ்நானனுடைய மனநிலையைக் கற்றுக்கொள்வோமாக. எப்போதும் கிறிஸ்துவை மாத்திரம் உயர்த்தி வாழுவோம். அவரது பலத்த கைக்குள் அடங்கி அவருக்கு ஊழியம் செய்வோம். நம்மை உயர்த்துபவர் தேவனே! நாம் தாழ்ந்திருக்கக் கற்றுக்கொள்வோம். யோவான் ஸ்நானன், தனது தலை வெட்டப்படும்வரை அவன் தனது சாட்சியை இழக்கவில்லை. அதற்குக் காரணம் அவனுக்குள்ளிருந்த தாழ்மையான சிந்தையே. அதையே நாமும் நாடுவோமாக. தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் (யோபு-5:10).
ஜெபம்: எங்கள் தாழ்வில் எங்களை நினைத்த ஆண்டவரே, எந்தச் சூழ்நிலையிலும் மேட்டிமைசிந்தையாயிராமல் உமக்கு பயந்திருக்க உமது அருள்தாரும். ஆமென்.