தேவனுடைய திட்டம்

தியானம்: 2024 டிசம்பர் 13 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 1:18-25

YouTube video

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 55:8).

நமது விருப்பப்படி காரியங்கள் நடக்கும்போது சந்தோஷப்படுவோம். நினைப்பதற்கு முரணாக நடந்தால், ஏன் இப்படியென்று கேள்வி எழுப்புவோம். அல்லது, சோர்ந்துவிடுவோம். அப்படிப்பட்ட நேரத்தில், தேவனுடைய நினைவுகளும் அவரது திட்டங்களும் நமது விருப்பங்கள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டதாய், உன்னதமானவையாய் அமையும் என்றோ, அவை நமது நன்மைக்கேதுவாகவே இருக்கு மென்றோ புரிந்துகொள்வதற்கு நாம் பின்தங்கி நிற்கிறோம்.

யோசேப்புக்கும் மரியாளுக்கும், திருமணம் முடித்து மகிழ்ச்சியோடு வாழலாம் என்று தங்களைக்குறித்து அவர்களுக்கு ஒரு திட்டம் இருந்திருக்கும். ஆனால், கர்த்தரோ, அவர்களுடைய வாழ்வைக்குறித்து வேறொரு உன்னதமானதொரு திட்டத்தை வைத்திருந்தார். உலக இரட்சகரின் தாயாக மரியாளையும், அவரை வளர்க்கும் தந்தையாக யோசேப்பையும் தேவன் அழைத்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதினால் இன்று உலகம் இரட்சிப்பைக் கண்டுகொண்டது.

அரச மாளிகையில் வாழ்ந்த மோசேயை, வனாந்தரத்தில் மக்கள் கூட்டத்தை வழிநடத்தும் வழிகாட்டியாக தேவன் அழைத்தார். செல்ல மகனாக வாழ்ந்த யோசேப்பு ஒரு அடிமையாக எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டபோது, சிறைச்சாலையிலிருந்து அவனை உயர்த்தி, பார்வோனின் அரமனைக்குக் கொண்டு போய், தன்னை விற்றுப்போட்ட தனது குடும்பத்தைப் பஞ்சகாலத்தில் போஷிக்கக்கூடிய ஒருவனாகத் தேவன் யோசேப்பை உயர்த்தினார். தேவனுடைய வழிகள் நமது வழிகளல்ல; அவருடைய நினைவுகள் நமது நினைவுகளுமல்ல. பூமிக்கு வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அப்படியே அவரது நினைவுகளும் நமது நினைவுகளைவிட்டு உயர்ந்திருக்கிறது (ஏசா.55:9). நமது வாழ்விலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது அவற்றை நாம் எப்படியாக எதிர்கொள்வோம்? அது தேவதிட்டம் என்று நாம் ஆறுதல் அடைவோமா? அல்லது, பதறி அங்கலாய்த்து பின்வாங்கி ஓடுகிறோமா?

“நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்றார் ஆண்டவர் (சங்.46:10). ஆனால், அதற்கு நம்மிடம் பொறுமை இல்லை. நாம் பலதடவைகளிலும் பொறுமையிழந்தவர்களாய் அங்கலாய்ப்பதுண்டு. இதற்குக் காரணம், தேவன்மீது நமக்கிருக்கும் நம்பிக்கை விசுவாசம் குன்றிப்போவதே ஆகும். எனவே பிரியமானவர்களே, நமது வாழ்வை தேவதிட்டத்துக்கு ஒப்புக்கொடுத்து நம்பிக்கையோடே வாழுவோம். தேவன் நிச்சயமாகவே நமக்கு நன்மையானவைகளையே செய்வார் என்று நம்புவோம். நம்மைப்பார்க்கிலும் நம்மைக் குறித்து தேவன் முழுதாக அறிந்திருக்கிறார் அல்லவா!

ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, எங்களுடைய விருப்பத்தின்படியல்ல, எங்களது வாழ்வுக்கு நீர் வைத்திருக்கும் உன்னதத் திட்டத்தை அறிந்துவாழ உதவி செய்யும். ஆமென்.