தாழ்மைப்படுங்கள்!
தியானம்: 2024 டிசம்பர் 15 ஞாயிறு | வேத வாசிப்பு: 1சாமுவேல் 2:1-10

இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலாத்தியர் 2: 20).
தாழ்மை என்பது செயலில் மாத்திரம் வெளிக்காட்டுவது அல்ல; அது உள்ளத்தில் உருவாகி, உருப்பெற்று செயலில் வெளிப்படவேண்டும். அப்போது அது போலியாக இருக்காது. இன்று அநேகர் தாழ்மையான போக்கை வெளிப்படுத்தினாலும், தங்கள் உள்ளத்திலே கடும்போக்குள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது, சந்தர்ப்பம் வரும்போதுதான் விளங்குகிறது.
சக்களத்தியால் அன்னாள் வையப்பட்டபோது, மிகுந்த மனமடிவுக்குள்ளானாள். தேவசமுகத்தில் தன் உள்ளத்தைத் திறந்து ஊற்றிய அன்னாளின் ஜெபம் கேட்கப்பட்டு, ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். அதற்காக அவள் பெருமை கொள்ளவில்லை. தேவனுக்குச் செய்த பொருத்தனையின்படி, பால் மறந்தபின் மகனை ஆலயத்திற்கு கொண்டுபோய் விட்டாள். அதன்பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடிய பாடலையே இன்றைய தியானப்பகுதியாக நாம் வாசித்தோம். தான் கர்ப்பவதியாகி குமாரனைப் பெற்றதால், தன்னை இகழ்ந்தவர்களுக்கு முன்பாக அவள் பெருமை பேசவில்லை. எல்லாப் புகழையும் துதியையும் தேவன் ஒருவருக்கே செலுத்தி அவள் பாடுகிறாள். அவளுடைய உள்ளம் உவகையால் பொங்கி வழிந்தது.
பவுல், “இனி நான் அல்ல; கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார்” என்று தன்னைத் தாழ்த்தி கிறிஸ்துவை உயர்த்திக் கூறுகிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்க வேண்டிய எண்ணக்கருத்து இதுதான். நாம் எவ்வளவுதான் கிறிஸ்துவுக்காய் செய்தாலும், நமக்குள் கிறிஸ்துவே பிழைத்திருக்கிறார்; நாம் அவர் கிருபையிலேயே வாழுகிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. நாமும் தாழ்ந்திருக்கக் கற்றுக்கொள்ளுவோம். வீண் பெருமைகளையும், புகழ்ச்சிகளையும், பிறர் புகழ்ந்து கூறும் போலிப் பேச்சுக்களையும் நம்மைவிட்டு அறவே ஒழிப்போம்.
பிரியமானவர்களே, அன்னாளின் இருதயம் நமக்குண்டா? இறுதிவரை கிறிஸ்து காட்டிய வழியிலே செல்வோமாக. பிதாவின் சித்தத்தைச் செய்ய அவர் சிலுவை வரை தன்னைத் தாழ்த்தினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தேவனுடைய குமாரன் என்ற பெருமைக்கு இடங்கொடுத்துச் செயற்படாமல், தான் உலகத்தின் பாவங்களைச் சுமக்க வந்த தேவ ஆட்டுக்குட்டி என்ற எண்ணத்திலேயே முடிவுவரையும் வாழ்ந்தார். நான் என் பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் தமது தூதர்களை எனக்காக அனுப்புவார் என்று கூறியும் அவர் அதைச் செய்யவில்லை. ஆண்டவர் எல்லோரையும் ஒன்றுபோல நேசிக்கிறார். நாமும் அப்படியே நேசிப்போமா? மனுஷபுகழ்ச்சியும், பெருமையும் நமக்கு உதவமாட்டாது. எனவே நாம் கிறிஸ்துவைபோல வாழ முற்படுவோம்.
ஜெபம்: எங்கள் நம்பிக்கையாகிய கர்த்தாவே, இகழ்ச்சியின் நேரங்களிலும் அன்னாளைப் போல அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர் எனப் பாடித் துதிக்க உமதாவியினால் எங்களை நிரப்பும். ஆமென்.