தாழ்மையான முடிவு!

தியானம்: 2024 டிசம்பர் 19 வியாழன் | வேத வாசிப்பு: 2 இராஜாக்கள் 5:1-14

YouTube video

அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான் (2இராஜாக்கள் 5:14).

கைகளிலுள்ள தோலில் சொறிகண்டதால் தோல் சம்பந்தமான மருத்துவரைச் சந்திக்கும்படிக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டபோது, தோல் மருத்துவருக்கு என்ன தெரியும் என்று சொல்லி, அறுவை சிகிச்சை நிபுணரிடம் சென்றாராம் ஒருவர். கையில் சொறியென்றால் கையை வெட்டிவிடுவோமா என்றாராம் அந்த அறுவை சிகிச்சை வைத்தியர். இதைக் கேட்டதும் அதிர்ந்து போனாராம் அந்த மனுஷர். இது வேடிக்கையாகத் தெரிந்தாலும், சரியான நேரத்தில் சரியான முடிவையெடுப்பது எவ்வளவு முக்கியம் என்பது மாத்திரம் நமக்குப் புரிகிறதல்லவா!

தனது குஷ்டரோகம் நீங்கிப்போகும் என்ற சந்தோஷத்தில் வந்தான் நாகமான். தன்னைக் கண்டதும் எலிசா வெளியே ஓடிவந்து தன்னைத் தொட்டுக் குணமாக்குவான் என்று எதிர்பார்த்தான். ஆனால் எலிசாவோ, போய் யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணும்படி சொல்லி அனுப்பிவிட்டார். நாகமானுக்குக் கடுங்கோபம் வந்தது. ஏன்? தான் சீரிய ராஜாவின் படைத்தலைவன் என்ற பெருமை அவனுக்கு இருந்தது. அந்தப் பெருமையாது அந்த தாழ்மையான செயலைச் செய்ய அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஆசை; ஆனால், அதற்காகத் தாழ்ந்துபோக அவனது பெருமைவிடவில்லை. பின்னர், நாகமானின் ஊழியக்காரரே அவனைச் சம்மதிக்க வைத்தனர். அவன் போய் ஸ்நானம்பண்ணி சுத்தமானான். அவன் சொஸ்தமடைய, எலிசாவின் வார்த்தைக்கு அவன் தாழ்மையாய் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.

பிரியமானவர்களே, எப்போதும் நாம் நினைத்தபடியே காரியங்கள் அமைந்து விடும் என்பது தவறு. தேவனின் நியமப்படி காரியங்கள் நடக்க நாம் நம்மை விட்டுக்கொடுக்க ஆயத்தமா என்பதே காரியம். நாமோ பலவேளைகளிலும் நாம் நினைத்தபடியே தேவன் கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், தேவனின் வழிகள் நமது வழிகளுமல்ல, நமது நினைவுகள் அவருடைய நினைவுகளுமல்ல. அன்று நாகமான் தனது பெருமையில் எலிசா சொன்னதைச் செய்யாமல் போயிருந்தால் அவனுக்குச் சுகம் கிடைத்திராது. தேவனால் கொடுக்கப்படும் அந்த தெய்வீக சுகத்தைப் பெற, அவன் அந்தத் தாழ்மையின் அடியை எடுத்துவைக்க வேண்டியிருந்தது. நமது வாழ்விலும் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தேவனுடைய நியமத்திற்கு ஏற்ப தாழ்மையுடன் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் வேண்டும்.

பிரியமானவர்களே, இன்று நமது வாழ்வை ஒருகணம் ஆராய்ந்து பார்ப்போம். நாம் தேவனுக்கு முன்பாக அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ நம்மைத் தாழ்த்தி, அவரது சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க ஆயத்தமா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எத்தனையோ பட்டங்களைப் பெற்றிருந்தும் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம் என்பதை இன்று உணரச்செய்தீர். ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.