பிறந்தநாள் பரிசு!

தியானம்: 2024 டிசம்பர் 25 புதன் | வேத வாசிப்பு: லூக்கா 2:1-16

YouTube video

என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய் (நீதிமொழிகள் 4:20).

நமக்காகவே உலகில் மனிதனாய் வந்து பிறந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில், “அனுதினமும் கிறிஸ்துவுடன்” வாசகர்கள் அனைவருக்கும் சத்திய வசனம் ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் எமது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு பிறந்தநாள் வைபவத்திற்குப் போவதென்றால் முதலில் நேரம் நமக்கு ஒரு பிரச்சனையாக இருக்கும். அதைப் பார்க்கிலும், என்ன பரிசு கொடுப்பது என்பது அடுத்த பெரிய பிரச்சனை. பிறந்தநாளைக் கொண்டாடுபவருக்கு அநேக பரிசுகள் கிடைக்கும். இன்றும் ஒருவருடைய பிறப்பை நினைவுகூருகிறோம். அதிலும் தம்மையே நமக்காகத் தந்தவருடைய பிறப்பு இது. அவருக்கு நாம் எந்தப் பரிசும் கொடுக்காமல், நமக்குள்ளேயே பரிசுகளைப் பரிமாறுகிறோமே, இது முறையா?

கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் இந்நாளில் அவருக்குக் கொடுக்கக்கூடிய பரிசு என்ன? அன்று ஆட்டிடையர் தங்கள் ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்திருக்கலாம். சாஸ்திரிகள் வெள்ளி, பொன், தூபவர்க்கத்தைக் கொடுத்துப் பணிந்திருக்கலாம். இன்று நமக்கிருக்கும் எல்லாமே அவருடையது என்றிருக்க நாம் எதைக் கொடுக்கலாம்? கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு நமது இருதயம்தான்; அங்கே அவருக்கு முதலிடம்! அவர் நம்மை ஆளுகை செய்யும் ராஜாவாக நமது இருதயத்தில் வீற்றிருக்க அவருக்கு இடங்கொடுக்கிறோமா? இப்படியிருக்க, ஆண்டவருக்குக் கொடுக்கவேண்டிய முக்கிய பரிசை மறந்து, அன்பானவர்களுக்கும், நமது குடும்பத்தினருக்கும், பரிசுகளைக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறோமே, இது சரியா? இந்த மகிழ்ச்சி ஆரவாரத்தில் நாம் இந்நாளுக்குரியவரையே மறந்து, அவருடைய பிறப்பையே நினைவுகூருகிறோம் என்பதையும் மறந்து, ஒரு அர்த்தமற்ற கொண்டாட்டத்தில் களிகூருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பிரியமான தேவபிள்ளையே, கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் இந்த நாளிலே அவருக்குரிய பரிசை அவருக்கே நாம் கொடுத்திருக்கிறோமா என்பதை முதலாவது ஆராய்ந்து பார்ப்போம். கொடுக்காவிட்டால் இப்போதே நமது வாழ்வை அவர் பாதத்தில் அர்ப்பணிப்போமாக. ஏற்கனவே கொடுத்திருந்தால், இன்று பலர் அந்த அன்புப் பரிசை அவருக்குக் கொடுக்கும்படிக்கு அநேக மக்களை அவரண்டைக்கு இன்றே அழைத்து வருவோமாக. அதைவிட ஆண்டவருக்கு மகிழ்ச்சி தரும் பரிசு வேறொன்றும் இல்லை. இன்று நம்முடைய கொண்டாட்டம் வெறும் சடங்காச்சாரமா? அல்லது, நிர்ப்பந்தமா? அல்லது போட்டியா? கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் இந்தநாளில் அவருக்குரிய பரிசை முதலாவது அவரிடமே கொடுத்துவிடுவோம். இதில் இயேசு பிரியப்படுவார்!

ஜெபம்: அன்பின்தெய்வமே, எங்கள் இருதயத்தில் வீற்றிருந்து நீர் ஆளுகைசெய்யும். உமதன்பை மற்றவர்களுக்கு அறிவித்து உம்மண்டை கொண்டுவருபவர்களாக நாங்கள் காணப்படுவதற்கும் எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.