கனி தரும் வாழ்வு!

தியானம்: 2025 பிப்ரவரி 8 சனி | வேத வாசிப்பு: யோவான் 15:1-8

YouTube video

அவன் நீர்க்கால்களின் ஒரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங்.1:3).

ஒருமுறை கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனது தொழிலை இராஜினாமா செய்ய எண்ணி, தன்னுடைய தீர்மானத்தைக்குறித்து கலந்து ஆலோசிக்க ஒரு கிறிஸ்தவ ஆலோசகரிடம் சென்றாராம். கல்லூரி ஆசிரியர் தான் வேலைசெய்யும் கல்லூரியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போனார். இறுதியாக “ஐயா, எனக்கு விரோதமாகச் செயற்பட்டவர்களை நேசிக்க என்னிடம் பெலன் இல்லை. என் சக்தி எல்லாம் வறண்டுவிட்டது, இனியும் என்னால் அங்கு சேவை செய்யமுடியாது. நான் இராஜினாமா செய்வது தான் சரி என்று நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த ஆலோசகர், “நீங்கள் கடந்துவந்த அனுபவங்கள் உண்மையில் வேதனைக்குரியதுதான். ஆனாலும், உங்களுக்கு எதிராக தீமை இழைத்தவர்களை நேசிக்க முடியாதபடி உங்கள் அன்பு வற்றிவிட்டது என்று சொல்வதில் ஒரு உண்மையும் இல்லை. உங்கள் வேர் ஆழமாக வேரூன்றவில்லை என்பதுதான் உண்மை. உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றியிருந்தால், உங்களால் நேசிக்க முடியாதவர்களையும் உங்களுக்கு விரோதமாகத் தீங்கு இழைத்தவர்களையும் நிச்சயம் உங்களால் நேசிக்க முடியும்” என்று கூறினாராம்.

ஆம், பரிசுத்த ஆவியின் முழுமையான கனியிலே முதலாவதாகச் சொல்லப் படுவது “அன்பு” என்ற குணாதிசயமாகும் (கலா.5:22). இந்த அன்பு, “மற்றவர் என்னை நேசித்தால் நானும் அவர்களை நேசிப்பேன்” என்று சொல்லுகின்ற வெறும் மனுஷீக அன்பு அல்ல. மாறாக, எல்லாச் சூழ்நிலையிலும், எதையும் எதிர்பாராமல், எல்லோரையும் நேசிக்கத்தக்க தெய்வீக அன்பு அது! இது நம்மால் முடியாது. ஆனால், நமக்குள் வாசமாயிருக்கும் தேவஆவியானவரின் அன்பு நமக்குள் ஊற்றப்பட்டுள்ளதால், அது நிச்சயமாகவே சாத்தியமாகும்.

தேவபிள்ளையே, இவ்வுலக வாழ்க்கையின் இறுதியில், நாம் எவ்வளவு காலம் ஜீவித்தோம், எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தோம் என்பதல்ல; மாறாக, நாம் எந்தளவு மற்றவர்களுக்கு முன்பாக கனியுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகக் காணப்படும். ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மனிதன், வாழ்க்கையின் செழிப்பான காலங்களில் மட்டுமல்ல, கஷ்டங்கள் துன்பங்கள் வியாதிகள் நிறைந்த வறட்சியின் காலங்களிலும், மற்றவர்களுக்கு முன்பாக பயனுள்ள ஒரு சாட்சியாகவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான ஒரு மனிதனாகவும் காணப்படுவான். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழுவதற்கான முக்கியமான சாட்சி நமது கனிகொடுக்கும் வாழ்வே! அப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ ஆண்டவர்தாமே நமக்குக் கிருபை அளிப்பாராக.

ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, ஆவியின் கனியாகிய அன்பை எங்களுக்கு தீமை செய்தவர்களிடத்திலும் நாங்கள் காண்பித்து சாட்சியின் வாழ்வினாலே கிறிஸ்துவுக்குள் அவர்களை வழிநடத்த எங்களுக்கு உதவும். ஆமென்.