நன்மை செய்!
தியானம்: 2025 பிப்ரவரி 14 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர் 12:14-21

கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்; (சங்கீதம் 37:3).
இன்று எங்குபார்த்தாலும் நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் போர், போட்டி, பொறாமை பலப்பரீட்சைகள்; இனத்துக்கு இனம் வெறுப்பு, வெட்டுக் குத்து, வெறித்தனங்கள்; மனிதனுக்கு மனிதன் கொலை, கொள்ளை, கொடுமை, தீமை அநாகரிகச் செயல்கள் என்று அக்கிரமம் அதிகரித்துவிட்டது. பத்திரிகையைக் கவனித்தால், அன்பும் பரிவும் பாசமும் நேசமும் எங்கோ ஓடி ஒழிந்துவிட்ட பரிதாப செய்திகளைத்தான் காணமுடிகிறது. இத்தனைக்கு மத்தியிலும் தேவனுடைய வார்த்தை நமக்குத் தரும் ஒரே ஆலோசனை “நன்மை செய்” என்பதாகும்.
நன்மை எது, தீமை எது என்று பிரித்தறிய முடியாதபடி தீமையினால் நிறைந்து விட்ட நம்முடைய சமுதாயத்திலே, தேவனுடைய மக்கள் நன்மை செய்யவேண்டும் என்றே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். இதைக்குறித்து பரிசுத்த பவுல் எழுதும்போது, “ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மையே செய்ய நாடுங்கள்” என்று கூறுகின்றார் (1தெச.5:15). மேலும், ரோமர் 12:21ல் “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வெல்லு” என்றும் வாசிக்கக் காண்கின்றோம். மற்றவர்கள் நமக்குச் செய்யும் தீமைக்குப் பதில் நன்மை செய்து, அந்தத் தீமையை நாம் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தத் தீமை நம்மை மேற்கொண்டுவிடும். பொதுவாக நமக்கு நன்மை செய்கிறவர்களுக்கு நன்மை செய்வது இலகுவான விஷயம். ஆனால், நமக்கு விரோதமாகத் தீங்கிழைப்பவர்களுக்கு நன்மை செய்வது இலகுவான ஒன்றல்ல. நாங்கள் விசுவாசிகள், நாங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள்கூட சிலசமயங்களில் தங்களுக்குத் தீங்கு இழைக்கப் படும்போது நன்மை செய்வதை விட்டுவிடுகிறார்கள்.
தேவனுடைய மக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும், எப்படி நன்மை செய்யவேண்டும் என்பதற்கு, தம்முடைய வாழ்நாளெல்லாம் நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்த நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்துவே நமக்கு ஒரு நல்லதொரு முன்மாதிரி! “நம்மைப் பகைக்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்யும்போதுதான் நாம் பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவுக்குப் புத்திரராயிருக்கிறோம்” என்பது கிறிஸ்துவின் வழியில் நாம் நடக்கும்போதுதான் நம்மில் வெளிப்படும். எனவே, நம்முடைய பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நாமும் பூரண சற்குணராய் இருக்கவேண்டுமாயின் நன்மை செய்வதில் ஓய்ந்துவிடாதபடிக்கு நம்மை இன்றே அர்ப்பணிப்போமாக.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வது எங்கள் மாம்சபெலத்தால் முடியாது. உம்முடைய கிருபையினாலும் நீர் தந்தருளும் பெலத்தாலும் இந்த நன்மையைச் செய்திட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.