கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு!

தியானம்: 2025 பிப்ரவரி 16 ஞாயிறு | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:4-9

YouTube video

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்; (சங்கீதம் 37:4).

“நாம் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது நமக்குள் இருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும், வயது போகப்போக, பொறுப்புக்கள் அதிகரித்துச் செல்லச்செல்ல மறைந்துபோய், வாழ்க்கையில் கவலைகளும் துக்கமும் நிறைந்துவிடுகிறதே” என்று ஒருவர் அங்கலாய்ப்போடு சொன்னார். இந்த உலகத்தின் வழக்கத்தின்படி நம் வயது போகப்போக, பொறுப்புக்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவருடைய சந்தோஷம் சஞ்சலமாக மாறலாம். ஆனால், கர்த்தருக்குள் இருப்பவர்களோ, மனமகிழ்ச்சியின் இரகசியத்தை அறிந்துகொண்டவர்கள். சுவிசேஷத்தின் நிமித்தம் ஒரு கைதியாக சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்ட ஒரு வேதனையான சூழ்நிலையிலும் பரிசுத்த பவுல் மற்றவர்களைப் பார்த்து, “கர்த்தருக்குள் சந்தோஷ மாயிருங்கள்” என்று எழுதக்கூடியவராய் இருந்தார். அதற்குக் காரணம், அவர் “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?” என்ற இரகசியத்தை அறிந்து வைத்திருந்தார்.

பொதுவாக வாழ்க்கையிலே நாம் எதிர்பாராததும், விரும்பாததுமான, வேத னையின் அனுபவங்கள்கூட நமது சந்தோஷத்தைக் குலைத்துப்போடலாம். ஒரு முறை சிறைச்சாலை ஒன்றிலிருந்து ஒரு கிறிஸ்தவ வாலிபன் எனக்கு எழுதிய கடிதத்தில்: நாட்டின் சூழ்நிலையின் காரணமாகக் கைது செய்யப்பட்டு, அநீதியாய் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டேன். “ஆண்டவரே! உம்மை இரட்சகராக ஏற்றுக்கொண்டு உமக்காக வாழும் எனக்கு ஏன் இந்தச் சோதனை?” என்ற கேள்வியோடும், சொல்லிமுடியாத மனப்பாரத்தோடும் அந்தச் சிறைச் சாலைக்குள்ளே சென்றேன். அங்கு என்னை ஆறுதல்படுத்த எதுவுமே இல்லாத அந்த சூழ்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வேதப்புத்தகமே என்னை ஆறுதல்படுத்தியது. ஆண்டவருடைய வார்த்தையே என் மனக்காயங்களை ஆற்றித்தேற்றியது என்று எழுதியிருந்தார்.

அருமையானவர்களே, உங்கள் துக்கத்தின் நடுவில் உங்களை ஆறுதல் படுத்துவது எது? “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே நான்அழிந்துபோயிருப்பேன்” என்று சங்கீதக்காரர் சொன்னாரே (சங். 119:92). வேதனையும் துக்கமும் நிறைந்த இந்த உலகத்திலே நமக்கும் வேதனையும் துக்கமும் மாறிமாறி வரத்தான் செய்யும். ஆக, நமக்கு மனஆறுதலே இல்லையா? இருக்கிறது! கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவனை எந்த சூழ்நிலையும் எதுவும் செய்யமுடியாது. ஏனெனில் அவர் ஆண்டவருடைய வார்த்தையைப் பற்றியிருப்பான். ஆண்டவருடைய ஜீவனுள்ள வார்த்தை மட்டுமே நமக்கு மெய்யான ஆறுதலையும் மனச் சமாதானத்தையும் தரமுடியும். ஆக, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்போம்; அவர் நிச்சயம் நம் இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு அருள்செய்வார்.

ஜெபம்: கர்த்தாவே, எத்தனை மனச்சோர்வுகள் வந்தாலும் ஜீவனுள்ள சத்திய வார்த்தையால் எங்கள் இதயத்தை நிரப்பி மகிழ்ச்சியோடு வாழ உமதருள் தாரும். ஆமென்.